பவர்ஃபுல் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 அறிமுகத்துக்கு தயார்: முதல் டீசர் வெளியீடு
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 750 பைக்கின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ள EICMA 2026 சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த பைக் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விற்பனையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கைவிட அதிக திறன் கொண்ட மாடலாக ஹிமாலயன் 750 உருவாகி வருகிறது. நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் சாகசப் பயணங்களை விரும்புபவர்களை குறிவைத்து இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது அட்வென்ச்சர் பைக் வரிசையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய உயரத்தைத் தொட உள்ளது.

பவர்ஃபுல் எஞ்சின்
இந்த புதிய பைக்கில் 750 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தற்போதைய 650 சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சின் தளத்தை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 55 எச்பி பவர் மற்றும் 60 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். நீண்ட தூரப் பயணங்களில் சீரான வேகத்தில் செல்வதற்கும், இருவர் பயணிக்கும்போது அல்லது கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்லும்போதும் போதுமான திறனை வழங்குவதற்கும் இந்த எஞ்சின் சிறப்பானதாக இருக்கும். ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், பல்வேறு ரைடிங் மோடுகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிசைன் மற்றும் வசதிகள்
ஹிமாலயன் 750 பைக்கின் வடிவமைப்பு, ஹிமாலயன் 450 மாடலின் அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டு கூடுதல் பிரம்மாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், பெரிய முன்பக்க விண்ட்ஸ்கிரீன், கம்பீரத்தை தரும் வடிவத்தில் எரிபொருள் டேங்க் மற்றும் உயரமான முன்பக்க அமைப்பு ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. நீண்ட தூரப் பயணங்களுக்கேற்ற வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.
இந்த பைக்கில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் திரை, ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் வழிகாட்டி வசதிகள் இடம்பெறலாம். மேலும், க்ரூஸ் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், டயர் காற்றழுத்தக் கண்காணிப்பு வசதி போன்ற தொழில்நுட்பங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றில் எந்தெந்த வசதிகள் இறுதியாக வழங்கப்படும் என்பது அறிமுகத்தின்போது தெரியவரும்.
சஸ்பென்ஷன், பிரேக்கிங் மற்றும் வீல்கள்
ஹிமாலயன் 750 பைக்கில் முன்பக்கத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்க சஸ்பென்ஷனில் ரிமோட் பிரீலோடு அட்ஜஸ்ட்மென்ட் வசதி இடம்பெறலாம். முன்பக்கத்தில் இரண்டு டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கத்தில் ஒரு டிஸ்க் பிரேக்கும் இடம்பெறும் எனத் தெரிகிறது.
மேலும், 19 அங்குல முன்பக்க வீல் மற்றும் 17 அங்குல பின்பக்க வீல் அமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையின்போது அலாய் வீல்கள் மற்றும் வயர்-ஸ்போக் வீல்கள் கொண்டதாக வருவது உறுதியானது. இதனால், வெவ்வேறு பயணத் தேவைகளுக்கு ஏற்ற வீல் தேர்வுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. உயரமான விண்ட்ஸ்கிரீன், ஸ்டெப்டு இருக்கை, பின்பக்க லக்கேஜ் ரேக் மற்றும் கூடுதல் பயணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வசதிகளும் சோதனை பைக்குகளில் காணப்பட்டுள்ளன. இவை நீண்ட தூரப் பயணங்களின்போது பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?
வரும் நவம்பர் 3 முதல் 8 வரை நடைபெறவுள்ள EICMA 2026 சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஹிமாலயன் 750 அறிமுகமாக உள்ளது. அதன்பிறகு, நவம்பர் மாத இறுதியில் கோவாவில் நடைபெறவுள்ள மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹிமாலயன் 450 ஏற்கெனவே அட்வென்ச்சர் பைக் பிரிவில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ள நிலையில், அதிக திறன் கொண்ட ஹிமாலயன் 750 அந்த வரிசையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடும். குறிப்பாக, நெடுஞ்சாலைப் பயணங்களையும் மலைப்பாதை சாகசங்களையும் ஒரே பைக்கில் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இது முக்கியமான தேர்வாக அமையும். மேலும், இதன் ரகத்தில் மிக சரியான பட்ஜெட்டில் வரும் என்பதால் மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications


