ஷோரூம்களுக்கு வந்தாச்சுனா அடுத்து டெலிவிரி தான்! ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த பைக்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து புதியதாக குரில்லா 450 (Guerrilla 450) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறிமுகம் செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே 2026 குரில்லா 450 மோட்டார்சைக்கிள்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 'இசட்.எஸ் ரிவியூஸ்' (ZS REVIEWS) என்கிற யூடியூப் சேனல் (Youtube Channel) மூலம் கிடைத்துள்ள படங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் குரில்லா 450 பைக்கை அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ள நிலையில், புக் செய்தவர்களுக்கு டெஸ்ட் ரைடு கொடுக்கும் பணிகள் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பைக்கை அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை ராயல் என்ஃபீல்டு துவங்கிவிட்டது. அதன்படி, ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் பல்வேறு நிறங்களில் புதிய குரில்லா 450 பைக்குகள் காட்சி தந்துள்ளன. குறிப்பாக, சிவப்பு மற்றும் கிரே நிறத்திலான 2026 குரில்லா 450 பைக் ஒன்று நமது கவனத்தை ஈர்க்கிறது.
புதிய குரில்லா 450 பைக்கில் வ்ரெடெஸ்டைன் டயர்களை பொருத்தியுள்ளதாக ராயல் என்ஃபீல்டு அறிவித்துள்ளது. அந்த டயர்களை இந்த பைக்குகளில் தெளிவாக பார்க்க முடிகிறது. கோடைகாலம் மற்றும் மழைக்காலம் என எதுவாக இருந்தாலும் சாலைகளில் கூடுதல் பிடிமானத்தை வழங்கக்கூடிய இதே வ்ரெடெஸ்டைன் டயர்கள் தான் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனத்தின் ஸ்பீடு 400 (Speed 400) பைக்கிலும் பொருத்தப்படுகிறது.

தோற்றத்தை பொறுத்தவரையில், டீலர்ஷிப் ஷோரூம்களில் காட்சி தந்துள்ள இந்த 2026 குரில்லா 450 பைக்குகளில் முன்பக்கத்தில் சிறிய அளவிலான கௌல் (Cowl)-ஐ பார்க்க முடிகிறது. மேலும், பைக்கின் பின்பக்கத்திலும் கௌல் வழங்கப்பட்டுள்ளதை காணலாம். இவை குரில்லா 450 பைக்கிற்கு கூடுதல் ஸ்போர்டியான தோற்றத்தை வழங்கியுள்ளன என்றாலும், இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கின் தோற்றம் பெரிய அளவிற்கு மாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது ஷோரூமில் இருந்து வெளியாகி உள்ள படங்களில் குரில்லா 450 பைக்கில் தட்டையான ஹேண்டில்பாரையும் பார்க்க முடிகிறது. இது, சவுகரியமான ரைடிங் பொசிஷனை வழங்கும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. புதிய குரில்லா 450 பைக்கில் சஸ்பென்ஷன் செட்-அப் மாற்றப்படும் என்று அறிமுகத்திற்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறான சஸ்பென்ஷன் அப்டேட் எதுவும் வழங்கப்படவில்லை.
அதனை தற்போது வெளியாகி இருக்கும் படங்களிலும் பார்க்க முடிகிறது. தோற்றத்தை தவிர்த்து 2026 குரில்லா 450 பைக் வேறெந்த மாற்றத்தையும் பெறவில்லை. முக்கியமாக, பைக்கின் என்ஜின் சிஸ்டம் அப்படியே உள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்படும் 452சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 39.5 பிஎச்பி மற்றும் 40 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2026 ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டதால், எதிர்பார்த்ததை போல் ஷோரூம்களில் பைக் ஓட்டிப் பார்க்க வழங்கப்படுவது மார்ச் 31 முதல் துவங்கிவிடும். ஷோரூம்களில் இந்த பைக் காட்சிக்காக நிறுத்தப்படும் என்பதால், அருகில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களுக்கு சென்றால், 2026 குரில்லா 450 பைக்கை பார்க்கலாம். புதியதாக குரில்லா 450 அபெக்ஸ் வேரியண்ட்டை தவிர்த்து, இந்த பைக்கில் பெரியதாக எந்த அப்டேட்டும் வழங்கப்படவில்லை என்பதால், விரைவாகவே டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.


Click it and Unblock the Notifications








