சிங்கிளா சுத்த ஏற்ற ராயல் என்ஃபீல்டு பைக்... விலையை கேட்டா தான் கொஞ்சம் மயக்கம் வருது!!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட 2026 கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பதிப்பு, சில நுட்பமான மேம்பாடுகளைப் பெற்றுள்ள போதும், அதன் விலைகளில் பெரிய மாற்றம் இல்லை. இதன்படி, சிங்கிள்-டோன் கலர் ஆப்ஷனான ஷாக் பிளாக் (Shack Black) மற்றும் பர்பிள் ஹஸ் (Purple Haze)-இல் ரூ.2,19,787 (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலையில் இந்த புதிய பைக் கிடைக்கும்.
அதேசமயம், இரட்டை வண்ண ஆப்ஷன்களான ட்ரிப் டீல் க்ரீன் (Trip Teal Green) மற்றும் ரேவ் ரெட் (Rave Red) ஆகியவற்றுக்கு ரூ.2,22,593 (எக்ஸ்-ஷோரூம்) விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 4 கலர் ஆப்ஷன்களும் இந்த பைக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் ஒன்றாகும். அதாவது, புதிய 2026ஆம் ஆண்டிற்காக புதியதாக எந்தவொரு கலர் ஆப்ஷனும் சேர்க்கப்படவில்லை.

2026 கோன் கிளாசிக் 350 பைக்கின் முக்கிய மேம்பாடுகளாக, புதிய ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் (Slip & Asist Clutch) சேர்க்கப்பட்டுள்ளது. இது கியர் மாற்றங்களை எளிதாக்குவதோடு, திடீரென பைக்கின் வேகத்தைக் குறைக்கும்போது பின் சக்கரம் இயங்காமல் போவதைத் தடுத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.
மேலும், இந்த பைக்கில் ஏற்கனவே இடம்பெற்றுவரும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் (USB Type-C Charging Port) ஆனது தற்போது அதிவேக சார்ஜிங் வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது; இது அன்றாடப் பயன்பாட்டை மேம்படுத்துகிறது. கோன் கிளாசிக் 350 அதன் தனித்துவமான பாப்பர்-ஸ்டைல் (Bobber-style) வடிவமைப்பால் உடனடியாக அடையாளம் காணப்படுகிறது.

குறைந்த உயரமான தோற்றம், மிதக்கும் எஃபெக்ட்டில் ஒற்றை இருக்கை, ஸ்டைலான மினி ஏப்-ஹேங்கர் ஹேண்டில்பார் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இவற்றை விட முக்கியமாக, வெள்ளை நிற பக்கவாட்டு சுவருடன் கூடிய டியூப்லெஸ் கிராஸ்-ஸ்போக் சக்கரங்கள் மற்ற பைக்குகளில் இருந்து இந்த பைக்கை தனித்து காட்டுகிறது.
நேர்த்தியான வடிவில் ஃபெண்டர்கள் மற்றும் ஸ்லாஷ்-கட் டிசைனில் எக்சாஸ்ட் குழாய் ஆகியவை இதன் தனித்துவமான அழகிற்கு மேலும் வலு சேர்க்கின்றன. மோட்டார்சைக்கிளுக்கு ஆற்றல் வழங்க, அதே நம்பகமான 349சிசி ஏர்/ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தொடர்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 bhp குதிரைத்திறனையும், 4,000 ஆர்பிஎம்-இல் 27 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

2026 கோன் கிளாசிக் 350 பைக்கில் இந்த அளவீடுகளில் எந்த மாற்றமும் இல்லை. சீரான மற்றும் சக்திவாய்ந்த பயணத்தை வழங்கும் இந்த என்ஜின், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது. 2026 ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக் இந்தியாவில் உள்ள ராயல் என்ஃபீல்டின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தத்தில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2026 கோன் கிளாசிக் 350 பைக்கின் தனித்துவமான பாப்பர் ஸ்டைலிங்கைத் தக்க வைத்துக்கொண்டு, நவீனப் பயன்பாட்டிற்கான சில முக்கியமான அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. இந்த மேம்பாடுகள் அன்றாடப் பயணத்தை மேலும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுகின்றன. ஆதலால், கிளாசிக் தோற்றத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களை இது கவரும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு பைக்காக கிளாசிக் 350 இருந்தாலும், கோன் கிளாசிக் 350 பெரிய அளவில் விற்பனையாகுவது இல்லை என்பது சாலையில் அதிகமாக இந்த பைக் தென்படாததில் இருந்து அறிய முடிகிறது. இந்த நிலைமையை புதிய மேம்படுத்தப்பட்ட 2026 கோன் கிளாசிக் பைக் மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









