ராயல் என்ஃபீல்டு கிட்ட கூட வேற எந்த நிறுவனமும் வர முடியாது.. அடிச்சு தூள் கிளப்பிடுச்சுல!
150-200 சிசி பைக் பிரிவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக பைக்குகள் விற்பனையாகும் பிரிவாக 350-450 சிசி பைக் பிரிவு இருந்து வருகிறது. இந்தப் பிரிவில் கடந்த மார்ச் மாதம் 1.18 லட்சம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 22.93% கூடுதல் விற்பனை அளவாகும். கடந்தாண்டு மார்ச் மாதம் இந்தப் பிரிவில் 96,060 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
350 சிசி என்ற இன்ஜின் அளவைப் பார்த்தவுடன் இந்தப் பிரிவில் எந்த நிறுவனம் தாதாவாக இருக்கும் என்பதைக் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம், ராயல் என்ஃபீல்டே தான். 350-450 சிசி பிரிவில் அதிக பைக்குகளை விற்பனை செய்வது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான். சுமார் 96,683 பைக்குகளை இந்தப் பிரிவில் அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அப்படியென்றால் 350-450 சிசி பிரிவில் 81.88% விற்பனை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மூலமாக மட்டுமே வருகிறது.

ராயல் என்ஃபீல்டைத் தவிர்த்து, ஜாவா, யெஸ்டி, BSA, ட்ரையம்ப், கேடிஎம், ஹோண்டா, பஜாஜ், ஏப்ரிலியா மற்றும் கவாஸாகி ஆகிய நிறுவனங்களின் பைக்குகள் கணிசமான அளவில் விற்பனையாகி வருகின்றன. இந்த அனைத்து நிறுவனங்களும் சேர்த்து 18.12% பைக்குகளை இந்த 350-450 சிசி பிரிவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலும், கிளாஸிக் 350, புல்லட் 350, ஹண்டர் 350 மற்றும் மீட்டியார் 350 ஆகிய நான்கு பைக்குகள் தான் மிக அதிக விற்பனை அளவையும், சந்தைப் பங்குககளையும் கொண்டுள்ளன. முதலிடத்தில் இருக்கும் கிளாஸிக் 350 பைக்கானது 37,144 யூனிட்டுகள் விற்பனையுடன், இந்தப் பிரிவில் 31.91% சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளது. இரண்டானது இடத்தில் இருக்கும் புல்லட் 350 பைக் மாடலே 23,767 யூனிட்டுகள் விற்பனையுடன் 20.30% சந்தைப் பங்குகளைக் (350-450 சிசி பிரிவில் மட்டும்) கொண்டுள்ளது.

ஹண்டர் 350 மற்றும் மீட்டியார் 350 ஆகிய பைக் மாடல்கள் முறையே 20,881 யூனிட்டுகள் மற்றும் 10,701 யூனிட்டுகள் விற்பனையைக் கொண்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் ஜாவா, யெஸ்டி மற்றும் BSA ஆகிய மூன்று பிராண்டுகளும் சேர்த்து 4,617 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து 4,365 யூனிட்டுகள் விற்பனையுடன் ஹோண்டா CB 350 பைக் மாடல் உள்ளது.
ராயல் என்ஃபீல்டின் 450 சிசி பைக் மாடல்களான ஹிமாலயன் 450 மற்றும் கொரில்லா 450 ஆகியவை முறையே 2,284 யூனிட்டுகள் மற்றும் 1,906 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையின் கீழ் இந்த பைக்குகளின் விலைகள் உயர்ந்திருக்கும் போதும் விற்பனையில் தொய்வில்லாமல் அதிகரித்தே இருக்கிறது.
ட்ரையம்ப் 400 பைக் மாடல்களானது 2,823 யூனிட்டுகளும், ட்ரையம்ப் 350 பைக் மாடல்களானது 2,165 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளது. ஹோண்டா ஹைனஸ் 350 மற்றும் ஹார்லி டேவிட்சன் X440 பைக்குகளானது முறையே 2,523 யூனிட்டுகள் மற்றும் 2,202 யூனிட்டுகள் வரை விற்பனையாகியுள்ளன. கேடிஎம் 390 பைக் மாடல்கள் 1,002 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கும் நிலையில், பஜாஜ், ஏப்ரிலியா மற்றும் கவாஸாகி ஆகிய நிறுவனங்களின் பைக்குகள் ஒவ்வொன்றும் 1000 யூனிட்டுகளுக்கும் கீழாகவே விற்பனையாகியுள்ளன.
பஜாஜ் பல்சர் 400 மற்றும் டாமினார் 400 ஆகிய இரண்டு பைக் மாடல்களும் முறையே 22 யூனிட்டுகள் மற்றும் 38 யூனிட்டுகளே விற்பனையாகியுள்ளன. கவாஸாகி நின்தா, எலிமினேட்டர் மற்றும் KLX ஆகிய மூன்று பைக் மாடல்களும் சேர்ந்து 15 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் இது வெறும் 3 யூனிட்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் மூலம் 350 சிசி பிரிவில் கிங் யார் என்பது மீண்டும் ஒரு முறை பறை சாற்றியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அதன் 350 சிசி பைக்குகள் தான் இந்தப் பிரிவையே போட்டியிடும் ஒன்றாக மாற்றி உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. தற்போது ட்ரையம்ப், பஜாஜ் மற்றும் கேடிஎம் ஆகிய நிறுவனங்களின் 350 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளும் களமிறங்கியிருக்கும் நிலையில், இந்த 350-450 சிசி பிரிவில் வரும் மாதங்களில் புதிய திருப்பங்களை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications