ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வரும் புதிய பைக் மாடல்.. 2027ல் வெளியீடு.. என்ன பைக் தெரியுமா?
450 இன்ஜின் பிளாட்ஃபார்மில் தற்போது ஹிமாலயன் 450 மற்றும் கொரில்லா 450 ஆகிய இரண்டு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. விரைவில் இதில் மூன்றாவது பைக் ஒன்றும் இணையவிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய பைக்கைக் குறித்து பேசுவதற்கு முன்னாள், ராயல் என்ஃபீல்டின் லைன்-அப்பில் இருக்கும் இன்ஜின் பிளாட்ஃபார்ம்களைப் புரிந்து கொண்டால், புதிய பைக் எந்த இடத்தில் பொருந்தும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
350 சிசி, 440 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி என நான்கு இன்ஜின் பிளாட்ஃபார்ம்களில் பல்வேறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. இந்தக் கட்டுரையில் நாம் பிரதானமாகப் பார்க்கப்போவது 440 சிசி மற்றும் 450 சிசி இன்ஜின் பிளாட்ஃபார்ம்களைப் பற்றித் தான்.

440 சிசி இன்ஜின் பிளாட்ஃபார்மில் ஸ்கிராம் 440 என்ற பைக் மாடலையும், 450 சிசி இன்ஜின் பிளாட்ஃபார்மில் மேலே கூறியது போல ஹிமாலயன் 450 மற்றும் கொரில்லா 450 ஆகிய இரண்டு பைக் மாடல்களையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்த 440 சிசி இன்ஜின் பிளாட்ஃபார்ம் வேறெதுவும் இல்லை, முன்னர் ஹிமாலயன் 411 என்ற பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த 411 சிசி இன்ஜினின் மேம்படுத்தப்பட்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்டது தான் 440 சிசி இன்ஜின். இந்த 440 சிசி இன்ஜினைக் கொண்டு புதிய ஹிமலாயன் 440 பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது 450 சிசி இன்ஜினுடன் ஸ்கிராம் 450 என்ற புதிய பைக் மாடலை உருவாக்கி வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மேலே கூறியது போல 440 சிசி இன்ஜினுடன் ஸ்கிராம் 440 பைக்கும் விற்பனையில் இருக்கிறது. K2K என்ற குறியீட்டுப் பெயரில் புதிய ஸ்கிராம் 450 பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வருகிறதாம்.
ஹிமலாயன் 450 பைக்கில் இருக்கும், அதே 452 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் புதிய ஸ்கிராம் 450 பைக்கிலும் பயன்படுத்தப்படவுள்ளது. வசதிகள் மற்றும் மற்ற அம்சங்களும் தற்போது விற்பனையில் இருக்கும் 450 சிசி பைக்கில் இருப்பது தான் புதிய ஸ்கிராம் 450 பைக்கிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிராம்பிளர் வகை பைக்கிற்கு ஏற்ப சின்னச் சின்ன வசதிகள் மாற்றத்தை ராயல் என்ஃபீல்டு செய்யலாம்.
பைக்கின் டிசைனைப் பொறுத்தவரை, ஸ்கிராம் 440 பைக்கின் டிசைனை ஒற்றிருக்காமல், கொரில்லா 450-யின் டிசைனையே புதிய ஸ்கிராம் 450 பைக் மாடல் அதிகம் ஒற்றிருக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக எரிபொருள் டேங்க் மற்றும் சிங்கள் பீஸ் சீட் ஆகியவை கொரில்லா 450 பைக்கில் இருக்கும் டிசைனை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள் புதிய ஸ்கிராம் 450 பைக்கில் கொடுக்கப்படவிருக்கும் நிலையில், சஸ்பென்ஷன் டிராவல் அளவு ஹிமாலயன் 450-யில் இருப்பதை விட சற்று குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ஹிமாலயன் 411 பைக்கை அடிப்படையாகக் கொண்டு ஸ்கிராம் 411 பைக்கை உருவாக்கிய போது இது போன்று தான் சஸ்பென்ஷன் செட்டப்பை ராயல் என்ஃபீல்டு வடிவமைத்திருந்தது. அந்தத் திட்டமே இங்கேயும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் மேப்ஸ் ஸ்கிரீன்கேஸ்ட் வசதியுடன் கூடிய வட்ட வடிவ TFT டிஸ்பிளேவே புதிய 450 சிசி பைக்கிலும் இருக்கும். இத்துடன் ஸ்விட்சபிள் டூயல் சேனல் ABS, ரைடிங் மோடுகள் மற்றும் ஸ்லிப்/ அசிஸ்ட் கிளட்ச் ஆகிய வசதிகளையும் புதிய பைக்கில் நாம் எதிர்பார்க்கலாம். முன்பக்கமும், பின்பக்கமும் 19 இன்ச்/ 17 இன்ச் வீல் செட்டப் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கொரில்லா 450 மற்றும் ஹிமாலயன் 450 பைக்குகளுக்கு இடைப்பட்டு இந்த ஸ்கிராம் 450-ஐ ராயல் என்ஃபீல்டு பிளேஸ் செய்யலாம். கொரில்லா 450 பைக் மாடலானது ரூ.2.49 லட்சம் முதல் ரூ.2.72 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹிமலாயன் 450 பைக்கானது ரூ.3.06 லட்சம் முதல் ரூ.3.37 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ஸ்கிராம் 450 பைக்கை ரூ.2.60 லட்சம் முதல் ரூ.3.10 லட்சத்திற்குள்ளான விலையில் நாம் எதிர்பார்க்கலாம். தற்போது விற்பனையில் இருக்கும் ட்ரையம்ப் ஸ்கிராம்பிளர் 400 பைக் மாடல்களுக்குப் போட்டியாக புதிய ஸ்கிராம் 450 இருக்கும். 2027ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தப் புதிய ராயல் என்ஃபீல்டு 450 சிசி பைக் வெளியாகலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டிருக்கும் இந்த ஹிமாலயன் 440 மற்றும் ஸ்கிராம் 450 பைக்குகள் வெளியாகும் போது, இந்தியாவில் ரூ.1.50 லட்சத்தில் தொடங்கி, ரூ.4.50 லட்சம் வரை அனைத்து விலைகளிலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனையில் இருக்கும். இந்த விலைப் பட்டியலுக்குள் எந்தப் புள்ளியை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனையில் இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பைக்கை வாங்கிக் கொள்ளலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வித விதமான வகைகளில் இத்தனை பைக்குகள் விற்பனையில் இருக்கும் என்று யார் சொல்லியிருந்தாலும் நாம் நம்பியிருக்க மாட்டோம். இப்போது இந்தியாவில் சுமார் 14 பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. இரண்டு புதிய பைக்குகள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இது தவிர மேலும் சில பைக் மாடல்களையும் அடுத்த சில ஆண்டுகளில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஃபிளையிங் ஃபிளியே பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் பைக்குகளின் விற்பனையையும் ராயல் என்ஃபீல்டு தொடங்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு பின்பு ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்களின் எண்ணிக்கை 25-ஐக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதில் நாம் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், எந்தவொரு பைக் மாடலும் வாடிக்கைாயளர்களுக்கு பிடிக்காத ஒன்று என்று சொல்ல முடியாதது தான். புதிய ஸ்கிராம் 450 பைக்கை இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. உங்களுக்கு எப்படி?


Click it and Unblock the Notifications