ராயல் என்ஃபீல்டு விற்பனை இதுவரை இல்லாத உச்சம் தொட்டு சாதனை
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த மாதம் 1,33,958 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து புதிய சாதனை எண்ணிக்கையை தொட்டுள்ளது.. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,24,328 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 8 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விற்பனை 1,21,326 யூனிட்டுகளாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,13,573 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 7 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. வெளிநாட்டு சந்தைகளிலும் ராயல் என்ஃபீல்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்றுமதி 17 சதவீதம் உயர்ந்து 12,632 யூனிட்டுகளாக உள்ளது.

ராயல் என்ஃபீல்டின் 350சிசி வரையிலான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் மின்சார வாகனங்கள் அடங்கிய பிரிவு இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்தப் பிரிவில் செப்டம்பர் மாதத்தில் 1,21,495 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு 1,07,478 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது இது 13 சதவீத வளர்ச்சியாகும். அதேநேரத்தில் 350சிசிக்கு மேற்பட்ட மாடல்களின் விற்பனை 26 சதவீதம் குறைந்து 12,463 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது.
அண்மையில் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹிமாலயன் 440க்கு எதிர்பார்ப்பை விட அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவு ஆறு மாதங்களுக்கான உற்பத்தி திட்ட அளவை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த மாடலுக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரையிலான ஆறு மாத காலத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த விற்பனை 7,09,096 யூனிட்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 5,91,903 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 20 சதவீத வளர்ச்சி கிடைத்துள்ளது. உள்நாட்டு விற்பனை மட்டும் 23 சதவீதம் உயர்ந்து 6,42,021 யூனிட்களாகியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திந் விற்பனை வளர்ச்சியில் கிளாசிக் 350, ஹன்ட்டர் 350, புல்லட் 350 மற்றும் மீட்டியோர் 350 போன்ற 350சிசி மாடல்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகின்றன. நகர்ப்புற பயன்பாடு முதல் நீண்ட தூரப் பயணங்கள் வரை பல்வேறு தேவைகளுக்கு ஏற்றதாக இருப்பதால், இந்த மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலையான வரவேற்பு உள்ளது. இதனுடன் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதும் நிறுவனத்தின் விற்பனை வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.
பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக புதிய ஹிமாலயன் 440 மீதான அதிக வரவேற்பு நிறுவனத்திற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வலுவான விற்பனை தளத்தைக் கொண்டுள்ள நிலையில், புதிய தயாரிப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மூலம் சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்த ராயல் என்ஃபீல்டு முயற்சி செய்து வருகிறது.
அண்மையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் 440 மற்றும் கிளாசிக் 350 ஒயிட் மாடல்களை சந்தைக்கு கொண்டு வந்தது. இதில், இரண்டு மாடல்களுக்கும் அதிக வரவேற்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, இந்த மாதமும் ராயல் என்ஃபீல்டு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications


