ராயல் என்ஃபீல்டு எவ்வளவு கனவோட கொண்டுவந்த பைக்! அறிமுகம் செய்து 2 வருடம் கூட ஆகல!!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) தனது நவீன ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளான குரில்லா 450 (Guerrilla 450)-ஐ 2024 ஜூலையில் அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் பல வண்ண ஆப்ஷன்களுடன் வந்த இந்த மாடல், பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது சந்தை யுக்தியின் ஒரு பகுதியாக, 'மஞ்சள் ரிப்பன்' (Yellow Ribbon) நிறத் தேர்வை இந்திய சந்தையில் இருந்து நீக்கியுள்ளது.
டீலர்களிடம் பழைய ஸ்டாக் இருக்கலாம், ஆனால் ராயல் என்ஃபீல்டு தனது இணையதளத்தில் இருந்து இந்த நிறத்தை நீக்கியுள்ளது. முன்னதாக ஏழு வண்ணங்களில் கிடைத்த குரில்லா 450, இப்போது ஆறு கவர்ச்சிகரமான வண்ணங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. 'மஞ்சள் ரிப்பன்' ஆனது இந்த பைக்கின் 'ஃபிளாஷ்' வேரியண்ட்டில் பிரத்தியேகமாக வழங்கப்பட்டது.

கருப்பு மற்றும் மஞ்சள் கலவையில், ஊதா கிராபிக்ஸ் மற்றும் தனித்துவமான 'குரில்லா' பிராண்டிங்குடன் இது கவர்ச்சிகரமான் கலர் ஆப்ஷனாக இருந்தது. இந்த பைக்கிற்கு தற்போது கிடைக்கும் மற்ற ஆறு வண்ணங்களாவன, பிராவா ப்ளூ, பைக்ஸ் ப்ரோன்ஸ், ஸ்மோக் சில்வர், பிளாயா பிளாக், கோல்டு டிப் மற்றும் ஷேடோ ஆஷ் ஆகும்.
'ஷேடோ ஆஷ்' ஆனது ஆலிவ்-பச்சை நிற பெட்ரோல் டேங்க் மற்றும் கருப்பு நிற ஹைலைட்களைக் கொண்டு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. பைக்ஸ் ப்ரோன்ஸ் மற்றும் ஸ்மோக் சில்வர் ஆகியவை சிங்கிள்-டோன் வண்ணங்களில் நேர்த்தியான வடிவமைப்பை வழங்குகின்றன. 'பிராவா ப்ளூ' பொதுவாக காணப்படும் ஒரு விருப்பம் ஆகும். இது வெள்ளை நிற பெட்ரோல் டேங்க்கை நீல நிற கோடுகளுடன் கொண்டுள்ளது.

'பிளாயா பிளாக்' மற்றும் 'கோல்டு டிப்' ஆகியவை குரில்லா 450 பைக்கின் 'டாஷ்' வேரியண்ட்டில் கிடைப்பவை ஆகும். பிளாயா பிளாக் ஆனது முழு கருப்பு நிறத்துடன், ஃபெண்டர் மற்றும் பின்புற டேங்கில் சிவப்பு, தங்க நிற ஹைலைட்டுகளைக் கொண்டுள்ளது. கோல்டு டிப் கலர் ஆப்ஷனில் பைக்கின் ஃபெண்டர் மற்றும் பெட்ரோல் டேங்கில் சிவப்பையும், பக்கவாட்டுப் பேனல்கள் மற்றும் பின் பகுதியில் தங்க நிறத்தையும் இணைத்து பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.
கலர் ஆப்ஷன் மாற்றத்தைத் தவிர, குரில்லா 450 பைக்கின் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றம் இல்லை. இது ஷெர்பா 450 பிளாட்ஃபார்மில் இருந்து பெறப்பட்ட 452சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 39.4 பிஎச்பி ஆற்றலையும், 40 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

குரில்லா 450 ஆனது 'அனலாக்', 'டாஷ்' மற்றும் 'ஃபிளாஷ்' என மூன்று வேரியண்ட்களில் வருகிறது. அனலாக் வேரியண்ட்டில் ஸ்மோக் சில்வர் ரூ.2.56 லட்சம், டாஷ் வேரியண்ட்டில் பைக்ஸ் ப்ரோன்ஸ் ரூ.2.67 லட்சம் மற்றும் ஷேடோ ஆஷ் ரூ.2.67 லட்சம், ஃபிளாஷ் வேரியண்ட்டில் பிராவா ப்ளூ ரூ.2.72 லட்சம் ஆகிய எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
குரில்லா 450 ஒரு ரோட்ஸ்டர் வகையைச் சேர்ந்தது என்றாலும், ஹிமாலயன் 450 (Himalayan 450) அட்வென்ச்சர் பைக்கில் இருப்பது போல யுஎஸ்டி (USD) ஃபோர்க்குகள் இதன் முன்பக்கத்தில் இல்லை. இருப்பினும், இரு முனைகளிலும் 17 அங்குல அலாய் சக்கரங்களும், டிஸ்க் பிரேக் அமைப்பும் உள்ளன. இதன் 160-பிரிவு பின்புற டயர், போட்டியாளர்களில் வேறு எந்த பைக்கிலும் இல்லாத தனித்துவமான அம்சமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த தேவை காரணமாக, ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கில் எதிர்காலத்தில் 'பிளாயா பிளாக்' மற்றும் 'கோல்டு டிப்' ஆகிய கலர் ஆப்ஷன்களும் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு வண்ணங்களும் நீக்கப்பட்டால், குரில்லா 450 பைக்கின் வண்ணத் தேர்வு நான்காகக் குறையும். இந்த நடவடிக்கையை தொடர்ந்து புதிய கலர் ஆப்ஷன்களை குரில்லா 450 பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டு வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









