ராயல் என்ஃபீல்டு இப்படி செய்வாங்கன்னு நினைக்கவே இல்ல.. அடுத்து என்ன ஆகும்?
கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே 1 லட்சம் பைக்குகள் என்ற விற்பனை அளவை சராசரியாகப் பதிவு செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதமும் சுமார் 1.04 லட்சம் பைக்குகள் என்ற விற்பனை அளவைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 37 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு ஏப்ரலில் 76,000 பைக்குகளையே இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு புதிய பைக் மாடல்களை இந்தியா உட்பட உலகளவில் வெளியிட்டது. இனி வரும் ஆண்டுகளிலும் பல்வேறு புதிய பைக் மாடல்களை உருவாக்கி வருகிறது. 1.50 லட்சத்திற்கு மேல் உங்கள் பட்ஜெட் எவ்வளவாக இருந்தாலும், அந்த பட்ஜெட்டில் உங்களுக்குப் பிடித்த ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் இருக்கும். அது தான் அந்நிறுவனத்தின் திட்டமும் கூட.

வாங்குவதற்கு நிறைய மாடல்கள் இருப்பதால், வாடிக்கையாளர்களும் அதிகளவில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக அதன் 350 சிசி பைக்குகளையே அதிகளவிலான வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். கிளாஸிக், புல்லட், ஹண்டர் மற்றும் மீட்டியார் ஆகிய நான்கு 350 சிசி பைக்குகளே 95,000 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. இது அந்நிறுவனத்தின் ஒட்டிமொத்த ஏப்ரல் மாத விற்பனையில் 91.25 சதவீதம் ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக 450 சிசி பைக்குகளை 4,415 யூனிட்டுகளும், 650 சிசி பைக்குகளை 4,700 யூனிட்டுகள் அளவிற்கும் கடந்த ஏப்ரல் மாதம் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருக்கிறது. இந்த அனைத்து பைக்குகளிலும் எது அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியுமா. கண்டிப்பாக கண்டுபிடித்திருப்பீர்கள். அது வேறெதுவும் இல்லை. பல ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வரும் கிளாஸிக் 350 பைக் தான்.

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 37,967 கிளாஸிக் 350 பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவாகும். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 26,801 யூனிட்டுகளையே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அத்துடன் ஒப்பிடும் போது தற்போது சுமார் 41.66 சதவீதம் கூடுதலாக விற்பனையாகியிருக்கிறது கிளாஸிக் 350.
இது மட்டுமல்ல புல்லட் 350 பைக்கின் விற்பனை 51.86 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஹண்டர் 350 பைக் 21.19 சதவீதம் உயர்ந்துள்ளது. மீட்டியாரின் விற்பனை 31.61 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரில்லா 450 பைக்கின் விற்பனை 168.91 சதவீதம் வரை உயர்ந்து 2,474 யூனிட்டுகளாக இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு லைன்-அப்பில் சூப்பர் மீட்டியார் மற்றும் ஷாட்கன் ஆகிய பைக்குகளின் விற்பனையே கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது கணிசமான அளவில் குறைந்திருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் பைக்குகளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில, புதிதாக ஹிமாலயன் 440, ஸ்கிராம் 450, ஹிமாலயன் 750, புல்லட் 650 ஆகிய புதிய பைக்குகளை விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர ராயல் என்ஃபீல்டு கடுமையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் பைக்குகள் மட்டுமின்றி புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை வெளியிடுவதிலும் அந்நிறுவனம் தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே C6 வெளியாகியிருக்கும் நிலையில், புதிதாக ஃபிளையிங் ஃபிளியே S6 என்ற எலெக்ட்ரிக் பைக்கின் வெளியீடும் ராயல் என்ஃபீல்டிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிட்டால், ராயல் என்ஃபீல்டு இப்போது முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. அதைவிட பெரும்பான்மை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாகவும் மாறியிருக்கிறது. முன்பை விட நிறைய வாடிக்கையாளர்கள் இப்போது ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வரும் ஆண்டுகளில் இதன் விற்பனை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications