ஒரே மாதத்தில் 1 லட்சம் பைக்குகளை விற்ற சென்னை பைக் கம்பெனி! எந்த ஷோரூமை பார்த்தாலும் கூட்டம் அலை மோதுது!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், கடந்த 2026 மார்ச் மாதத்தில் சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025-26 நிதியாண்டை ஒரு சாதனை ஆண்டாக நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, அதன் 350சிசி பைக்குகளுக்கான வலுவான சந்தைத் தேவையால், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
2026 மார்ச் விற்பனை விவரங்களின்படி, ராயல் என்ஃபீல்டு மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 334 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2025 மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட 1 லட்சத்து ஆயிரத்து 21 பைக்குகளுடன் ஒப்பிடுகையில், 11.20% ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இதில், உள்நாட்டு விற்பனை 14.03% உயர்ந்து 1 லட்சத்து 406 யூனிட் பைக்குகள் விற்பனையை எட்டியுள்ளது.

அதேசமயம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவைகளின் எண்ணிக்கை 8.04% சரிந்து 11,928 யூனிட்களாக கடந்த மாதத்தில் பதிவாகி உள்ளது. பிரிவு வாரியாகப் பார்க்கும்போது, ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி, 97 ஆயிரத்து 933 யூனிட்கள் விற்பனை உடன் மொத்த விற்பனையில் 87.18% பங்கை வகித்துள்ளன.
ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகள் விற்பனை 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் 12.16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 350சிசி-க்கு மேற்பட்ட பைக்குகளின் விற்பனை 5.05% அதிகரித்து 14,401 யூனிட்களாக பதிவாகி உள்ளதுடன், மொத்த விற்பனையில் 12.82% பங்களிப்பை அளித்துள்ளது. 2026 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில், ராயல் என்ஃபீல்டின் கடந்த மார்ச் மாத மொத்த பைக்குகள் விற்பனை 11.33% வளர்ச்சி அடைந்துள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்), ராயல் என்ஃபீல்டு மொத்தமாக 3,17,561 யூனிட் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே முதல் காலாண்டை விட 12.28% அதிகமாகும். உள்நாட்டு விற்பனை 14.22% அதிகரித்து 2,85,435 யூனிட்களாக பதிவாகி உள்ளது. இருப்பினும், ஏற்றுமதி 2.42% குறைந்து 32 ஆயிரத்து 126 யூனிட்களாக மட்டுமே பதிவாகி உள்ளது.
350சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனையில் 15.12% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான 2025-26 நிதியாண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு சாதனையாக அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 12,38,659 யூனிட் பைக்குகளை விற்பனை செய்துள்ளது, இது முந்தைய 2024-25 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 22.65% வலுவான வளர்ச்சியாகும்.
| Royal Enfield | Mar-26 | Mar-25 | Diff | % Share Mar 26 |
| 350cc | 97,933 | 87,312 | 10,621 | 87.18 |
| > 350cc | 14,401 | 13,709 | 692 | 12.82 |
| Domestic | 1,00,406 | 88,050 | 12,356 | 89.38 |
| Exports | 11,928 | 12,971 | -1,043 | 10.62 |
| Total | 1,12,334 | 1,01,021 | 11,313 | 100.00 |
| Royal Enfield | Mar-26 | Feb-26 | Diff | % Share Feb 26 |
| 350cc | 97,933 | 89,844 | 8,089 | 89.04 |
| > 350cc | 14,401 | 11,061 | 3,340 | 10.96 |
| Domestic | 1,00,406 | 91,248 | 9,158 | 90.43 |
| Exports | 11,928 | 9,657 | 2,271 | 9.57 |
| Total | 1,12,334 | 1,00,905 | 11,429 | 100.00 |
இதில், ராயல் என்ஃபீல்டின் உள்நாட்டு விற்பனை 22.66% உயர்ந்து 11,07,343 யூனிட்களையும், ஏற்றுமதி 22.56% அதிகரித்து 1,31,316 யூனிட்களையும் 2025-26 நிதியாண்டில் எட்டியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு, 350சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகள் முக்கிய காரணமாக அமைந்தன. இந்தப் பிரிவில் 10,87,051 யூனிட் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனையாகி 25.14% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
350சிசி-க்கு அதிகமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை 7.35% அதிகரித்து 1,51,608 யூனிட்களை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக, ராயல் என்ஃபீல்டு மிட்-வெயிட் மோட்டார்சைக்கிள் சந்தையில் தனது நிலையை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. ராயல் என்ஃபீல்டின் அட்வென்ச்சர் ரக பைக்குகளும் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Himalayan) மோட்டார்சைக்கிள் இந்தியா மற்றும் பிரேசிலில் தனது பிரிவில் அதிகம் விற்பனையாகும் அட்வென்ச்சர் பைக்காக உருவெடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையை தலைமையிடமாக கொண்டு, உலகளவில் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் விற்பனை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய பைக் ஒன்றை அறிமுகப்படுத்துவதை ராயல் என்ஃபீல்டு வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வரிசையில் மிக சமீபத்தில் புதிய 2026 குரில்லா 450 அபெக்ஸ் (Guerrilla 450 Apex) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் ராயல் என்ஃபீல்டின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








