ஒட்டுமொத்த இந்தியாவே இந்த சென்னை பைக் கம்பெனியை தான் விரும்புது! மாத விற்பனை லட்சத்தை தாண்டி போகுது!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், 2025 டிசம்பர் மாதத்தில் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. 2024 டிசம்பர் மாதத்தை காட்டிலும் மற்றும் 2025 நவம்பர் மாதத்தை காட்டிலும் என இரு மாதங்களை விடவும் நிலையான வளர்ச்சியைப் கடந்த டிசம்பரில் பதிவு செய்ததுடன், நடப்பு 2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியிலும் வலுவான விற்பனை எண்ணிக்கையைக் எட்டியுள்ளது.
இது, அதன் முக்கிய 350சிசி பைக்குகளுக்கான தொடர்ச்சியான தேவையை எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம், ராயல் என்ஃபீல்டின் 350சிசி-க்கு மேற்பட்ட என்ஜினை கொண்ட பைக்குகள் பிரிவில் சற்று குறைவான விற்பனை காணப்படுகிறது. 2025 டிசம்பரில், ராயல் என்பீல்டு மொத்தம் 1,03,574 பைக்குகளை விற்றுள்ளது. இது 2024 டிசம்பரில் விற்பனையான 79,466 பைக்குகளை விட 30.34% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், 350சிசி மோட்டார்சைக்கிள் வரிசையே ஆகும். ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகள் 95,480 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டின் 69,476 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 37.43% வளர்ச்சி கண்டுள்ளது. மாறாக, 350சிசி-க்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிள் பிரிவின் விற்பனை 18.98% குறைந்து, 8,094 யூனிட்களாக சரிந்துள்ளது.
இது உயர்-திறன் கொண்ட பைக்குகளுக்கான தேவை சற்றே குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்திய உள்நாட்டு சந்தையில், கடந்த 2025 டிசம்பரில் ராயல் என்பீல்டு 93,177 பைக்குகளை விற்றுள்ளது. இது 2024 டிசம்பரில் உள்நாட்டு சந்தையில் விற்பனையான 67,891 ராயல் என்பீல்டு பைக்குகளை விட 37.24% வலுவான ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியாகும்.

இருப்பினும், ராயல் என்ஃபீல்டின் ஏற்றுமதி கடந்த மாதத்தில் 10.18% குறைந்து, 10,397 யூனிட்களாக சரிந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு இதே மாதத்தில் 11,575 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்தமாக விற்பனையில் ராயல் என்ஃபீல்டு நிலைத்தன்மையைப் பேணியுள்ளது.
2025 நவம்பரில் 1,00,670 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனையான நிலையில், டிசம்பரில் 1,03,574 யூனிட்களாக 2.88% வளர்ச்சி அடைந்துள்ளது. 350சிசி பைக்குகள் விற்பனையில் 5.72% வளர்ச்சி பதிவாகி, 5,168 யூனிட்கள் கூடுதலாக விற்கப்பட்டுள்ளன. அதேநேரம், 350சிசி மேலான என்ஜின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பிரிவு ஆனது 21.86% சரிவைக் கண்டு, 2,264 யூனிட்கள் விற்பனை குறைந்துள்ளது.
| Royal Enfield | Dec-25 | Diff | Growth % YoY | ||
|---|---|---|---|---|---|
| Dec-25 | Dec-24 | % Share Dec 25 | |||
| 95,480 | 69,476 | 26,004 | 37.43 | 92.19 | |
| > 350cc | 8,094 | 9,990 | -1,896 | -18.98 | 7.81 |
| Domestic | 93,177 | 67,891 | 25,286 | 37.24 | 89.96 |
| Exports | 10,397 | 11,575 | -1,178 | -10.18 | 10.04 |
| Total | 1,03,574 | 79,466 | 24,108 | 30.34 | 100.00 |
கடந்த நவம்பரை காட்டிலும் ராயல் என்ஃபீல்டின் உள்நாட்டு விற்பனை மிதமாக 3.07% வளர்ந்த நிலையில், ஏற்றுமதி 1.29% உயர்ந்து, வெளிநாட்டு சந்தைகளில் ஒப்பீட்டளவில் நிலைத்தன்மையை பெற்றுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ராயல் என்பீல்டு மொத்தம் 9,21,098 பைக்குகளை விற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 7,27,077 பைக்குகளை விட ஆரோக்கியமான 26.69% வளர்ச்சியாகும்.
இதில் 350சிசி மோட்டார்சைக்கிள்கள் 8,06,276 யூனிட்களை பங்களித்து, 2024 டிசம்பரை விட 29.05% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதேபோல், 350சிசி-க்கு மேற்பட்ட பைக்குகள் விற்பனையும் 12.23% வளர்ச்சி கண்டு 1,14,822 யூனிட்களை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டு முழுவதுமான ராயல் என்ஃபீல்டின் உள்நாட்டு விற்பனை 8,21,908 யூனிட்களாக வலுவாக வளர்ந்து 25.89% ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடப்பு நிதியாண்டில் ராயல் என்ஃபீல்டின் ஏற்றுமதியும் 33.64% அதிகரித்துள்ளது. இது ராயல் என்ஃபீ்ல்டின் உலகளாவிய பயணத்தின் விரிவாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மொத்தத்தில், ராயல் என்பீல்டின் டிசம்பர் மாத மற்றும் நிதியாண்டு முழுவதுமான விற்பனை எண்கள், நடுத்தர திறன் கொண்ட 350சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் அதன் தொடர்ச்சியான பலத்தை உறுதிப்படுத்துகின்றன. வலுவான உள்நாட்டு தேவையும், மேம்பட்ட ஏற்றுமதி செயல்திறனும் இதற்கு துணைபுரிகின்றன. அதேநேரம், உயர் திறன் கொண்ட பைக் மாடல்களில் மாறிவரும் வாடிக்கையாளர்கள் விருப்பங்களுக்கு ஏற்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








