85% எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலில் ஓடும் ராயல் என்ஃபீல்டு பைக் அறிமுகம்?
E85 மற்றும் E100 எரிபொருள்களை மோட்டார் வாகன விதிமுறைகளின் கீழ் கொண்டு வருவதற்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. E85 என்பது 85% எத்தனாலும், 15% பெட்ரோலும் கலந்த எரிபொருளாகும். அப்படியென்றால் E100 எரிபொருள் என்னவென்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். எதிர்காலத்தில் இந்த எரிபொருள்கள் இந்தியாவிற்கு பயன்பாட்டிற்கு வரும் என்பதற்காக தற்போது இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையுடன் தொடர்புபடுத்துக் கொள்ளும் வகையில், சென்னையில் E85 எரிபொருளில் இயங்கும் வகையிலான பைக்கை ராயல் என்ஃபீல்டு சோதனை செய்து வரும் ஸ்பைஷாட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ராயல் என்ஃபீல்டு மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் E85 எரிபொருளில் இயங்கும் வகையிலான கார்கள் மற்றும் பைக்குகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

தற்போது ஸ்பைஷாட்டில் சிக்கியிருப்பது ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 பைக் மாடல். தற்போது விற்பனையில் இருக்கும் நிறங்களில் இல்லாமல், முற்றிலும் புதுவிதமான நிறத்தை இந்த சோதனை பைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமான அம்சமே எரிபொருள் டேங்கின் மீது எழுதி ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் தான். அதில் 'E85 Fuel' என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் E85 எரிபொருள் கொண்ட பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வருவது உறுதியாகியிருக்கிறது.
இதனை நல்ல விதமாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று தான் தெரியவில்லை. கடந்தாண்டு தான் E20 (20% எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல்) எரிபொருளை இந்தியா முழுவதும் ஸ்டாண்டர்டாக்கியது மத்திய அரசு. இதுவே வாகன ஓட்டிகளிடம் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. E20 எரிபொருளில் இயங்கும் திறன் இல்லாத கோடிக்கணக்கான வாகனங்கள் இந்திய சாலைகளில் ஓடி வரும் நேரத்தில் அந்த எரிபொருளை மட்டும் ஸ்டாண்டர்டு ஆக்குவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நேரத்தில E85 எரிபொருள் தொடர்பான விதிமுறை திருத்தம் ஒன்றை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் E85 எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் நாம் எதிர்பார்ப்பதை விட முன்கூட்டியே E85 வாகனங்கள் சந்தையில பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றவா என்ற கேள்வி எழுகிறது.
E85 எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் சந்தைக்கு வருவதில் பிரச்சினையில்லை. ஆனால், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களிலும் இந்த எரிபொருளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு வந்தால் என்ன செய்வது என்பதுதான் வாகன ஓட்டிகளின் கவலையாக இருக்கிறது. ஆனால், அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளுக்கு E85 எரிபொருள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் வகையிலான நிலை ஏற்படாது என்றே தெரிகிறது.
ராயல் என்ஃபீல்டு மட்டுமின்றி, மஹிந்திரா, மாருதி, பஜாஜ் மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் E85 எரிபொருளில் இயங்கும் வகையிலான வாகனங்களை உருவாக்கி வருகின்றன. மாருதி நிறுவனம் ஜப்பான் ஆட்டோ எக்ஸ்போவில் E85 எரிபொருளில் இயங்கும் ஃபிராங்க்ஸ் கார் மாடலை காட்சியும்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனங்களை எல்லாம் கடந்த ஹோண்டா நிறுவனம் E85 எரிபொருளில் இயங்கும் பைக்கை ஏற்கனவே இந்தியாவிற்குக் கொண்டு வந்து விற்பனையும் செய்தது. அது வேறெதுவும் இல்லை, CB300F ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக் தான். ரூ.1.70 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ஆனால், வரும் ஆண்டுகளில் இதே பைக்கையும், இது போல ப்ளெக்ஸ் ஃப்யூலில் இயங்கும் பைக்குகளையும் மீண்டும் அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எது எப்படியோ, இந்திய சந்தை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையான எத்தனால் எரிபொருளை நோக்கி நகர்ந்து வருகிறது. மோட்டார் வாகன விதிமுறைகளும் அதற்கேற்ப மாற்றப்பட்டு வருகின்றன. பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்றே மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கூறி வருகிறார். ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்த மாற்றத்திற்குத் தயாராகி வருவதையே ராயல் என்ஃபீல்டின் புதிய E85 எரிபொருள் பைக் சோதனை நமக்குக் கூறுகிறது.


Click it and Unblock the Notifications