தமிழ்நாடே வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடிய ராயல் என்பீல்டு! அடித்து ஆடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னைதான் (Chennai) ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமையிடம் (Headquarters) ஆகும். எனவே இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் மட்டுமே அமைந்துள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பைக்குகள், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சூழலில், இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே தனது முதல் தொழிற்சாலையை அமைக்க தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்சாலை ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலத்தில் அமைகிறது.

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி (Tirupati) மாவட்டத்தில் உள்ள சத்யவேது (Satyavedu) பகுதியில் அமையவுள்ளது. இதற்காக 2,200 கோடி ரூபாயை ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்யவுள்ளது. இந்த தொகை, தொழிற்சாலையை உருவாக்க மட்டுமல்லாது, 'வென்டர் பார்க்' (Vendor Park) அமைக்கவும் பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்காக சத்யவேது பகுதியில், ஆந்திர பிரதேச அரசு, 276 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தி எகனாமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டத்தில் 'வென்டர் பார்க்' அமைக்கப்படும்.

இந்த பணிகள் வரும் 2029ம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2032ம் ஆண்டிற்குள் தொழிற்சாலை அமைக்கப்படும். ராயல் என்பீல்டு நிறுவனத்தால் தற்போது உள்ள தொழிற்சாலைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 1.46 மில்லியன் பைக்குகளை (சுமார் 15 லட்சம் பைக்குகள்) உற்பத்தி செய்ய முடியும்.
புதிய தொழிற்சாலையின் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படவுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள புதிய தொழிற்சாலையில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 9 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தேவை அதிகமாக இருப்பதால், ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் உற்பத்தி திறனை அதிகரித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே புதிய தொழிற்சாலையை அமைக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முடிவு வரவேற்கத்தக்கது.
இதன் காரணமாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு காலதாமதம் இன்றி பைக்குகள் விரைவாக டெலிவரி கிடைக்கும். ஆனால் தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு நிறுவனம், தமிழ்நாட்டிற்கு வெளியே தனது முதல் தொழிற்சாலையை அமைக்கவிருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில்தான் அமைந்துள்ளன. பிஎம்டபிள்யூ (BMW), ஹூண்டாய் (Hyundai) மற்றும் ரெனால்ட்-நிஸான் (Renault-Nissan) என உலகின் பல்வேறு நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக'ஆசியாவின் டெட்ராய்டு' (Detroit Of Asia) என்ற அடைமொழியுடன் சென்னை அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட தமிழ்நாடு, அதே தமிழ்நாட்டை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்க தவறியிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது. மறுபக்கம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) தலைமையிலான ஆந்திர அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணத்தில் (Visakhapatnam), கூகுள் (Google) நிறுவனம் ஏஐ டேட்டா சென்டரை (AI Data Centre) அமைக்கவுள்ளது. இதற்காக கூகுள் நிறுவனம் 87,520 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது. இந்த முதலீட்டை ஈர்த்ததன் மூலம், ஆந்திர பிரதேச அரசு ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் கவர்ந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications