இப்பதான் 9 ஆயிரம் கோடில டாடா ஃபேக்டரி வந்துச்சு! அதுக்குள்ள இன்னொன்னு வருதா! இந்தியாவையே மிரள விடும் தமிழ்நாடு
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு வயது வித்தியாசம் இன்றி மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழமையும், புதுமையும் கலந்த ரெட்ரோ கிளாசிக் பைக்குகளை வாங்க வேண்டும் என விரும்புகின்றனர்.
இதனால் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் உச்சமாக கடந்த 2025ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 10,71,809 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து அசத்தியது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வரலாற்றிலேயே இதுதான் ஒரு வருடத்தின் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கை ஆகும்.

இதற்கு முன்பு வேறு எந்தவொரு வருடத்திலும் இவ்வளவு அதிகமான பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்தது கிடையாது. அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் விற்பனை ஒரு வருடத்தில் 1 மில்லியன், அதாவது 10 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்ததும், இதுவே முதல் முறை ஆகும்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 1,32,132 பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. இப்படி பைக் விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தால் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக வருடத்திற்கு 14.60 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும்.

அதாவது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலைகள் தற்போது கிட்டத்தட்ட முழுமையான உற்பத்தி திறனில் இயங்கி கொண்டுள்ளன. மறுபக்கம் சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு 'டிமாண்ட்' அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனம் தனது தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி திறனை ஒரு வருடத்திற்கு 20 லட்சம் பைக்குகள் என்ற அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதாவது ராயல் என்பீல்டு நிறுவனம் தனது உற்பத்தி திறனை 37 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 958 கோடி ரூபாயை ராயல் என்பீல்டு நிறுவனம் முதலீடு (Investment) செய்யவுள்ளது. இந்த 958 கோடி ரூபாய் முதலீட்டிற்கான அனுமதியை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான (Parent Company) ஈச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) தற்போது வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டத்தில் உள்ள செய்யாறு (Cheyyar) பகுதியில் இயங்கி வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், இந்த 958 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த ஆலையின் விரிவாக்க பணிகள், 2026-27ம் நிதியாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதாவது இன்னும் ஒரு சில மாதங்களில் செய்யாறு ஆலை விரிவாக்க பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தொடங்கவுள்ளது. அதே நேரத்தில் வரும் 2027-28ம் நிதியாண்டில், செய்யாறு ஆலையின் விரிவாக்க பணிகள் முழுமையாக முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கார் அண்டு பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகன உற்பத்தியில் தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது. எனவே தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி துறையில் பல ஆயிரக்கணக்கான கோடி முதலீடுகள் குவிந்து வருகின்றன. வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் எலெக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி தொழிற்சாலையை தூத்துக்குடி (Thoothukudi) அருகே திறந்தது.
இதை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் (Tata Motors) 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார் உற்பத்தி தொழிற்சாலையை ராணிப்பேட்டை (Ranipet) அருகே வெகு சமீபத்தில் திறந்தது. இந்த வரிசையில் ராயல் என்பீல்டு நிறுவனம் மேலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய்யவிருப்பது மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம்தான். இது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரவும் உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications








