இந்தியாவுக்காக இல்லைனாலும், உலக நாடுகளுக்காகவே ராயல் என்ஃபீல்டு உருவாக்கும் பைக்! ஜிஎஸ்டி அதிகமா இருக்கும்
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் தனது புதிய கான்டினென்டல் ஜிடி 750 (Continental GT 750) பைக்கை 2026ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் சந்தை வெளியீடு 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டின் தற்போதைய ஜிடி இரட்டை சிலிண்டர் பைக் மாடல்கள், இந்தியா மற்றும் உலக சந்தைகளில் மிகவும் பிரபலமான பைக்குகளாகத் திகழ்கின்றன.
வரவிருக்கும் இந்த புதிய மாடல், தற்போதைய பிளாட்ஃபார்மில் இருந்து பெறப்பட்ட, அதி நவீன 750சிசி என்ஜினைக் கொண்டிருக்கும். இதற்கான புதிய 750சிசி பிளாட்ஃபார்மை புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தற்போது உருவாக்கி வருகிறது. இந்த கட்டமைப்பின் அடிப்படையில் உருவான ஹிமாலயன் 750 அட்வென்ச்சர் (750 Adventure) மற்றும் கான்டினென்டல் ஜிடி 750 ஆகியவற்றின் முன்மாதிரிகள் (Concepts), EICMA 2025 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

புதிய 750சிசி பைக்களைக் கண்டு ஆர்வலர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இதன் உற்பத்தி மாடல் இந்த 2026ஆம் ஆண்டிற்குள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. 650சிசி இரட்டை சிலிண்டர் (650 twins) பைக் மாடல்களுக்கான வரவேற்பே ராயல் என்ஃபீல்டை இந்த அதிக திறன் கொண்ட பிளாட்ஃபார்மிற்கு விரிவாக்க ஊக்கப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
இது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் என இரண்டையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 750சிசி பைக்குகள், ராயல் என்ஃபீல்டை உலக அளவில் மிட்-சைஸ் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஒரு சிறந்த பிராண்டாக நிலைநிறுத்த உதவும். அதே நேரத்தில், தற்போதுள்ள 650சிசி இரட்டை சிலிண்டர் பைக் மாடல்கள், புதிய 750சிசி பைக்குகளுடன் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டின் பெரிய 750சிசி பைக் பிளாட்ஃபார்ம் சர்வதேச வாடிக்கையாளர்களை அதிகம் கவரக்கூடும் என்றாலும், 650சிசி பைக்குகள் அவற்றின் சீரான செயல்பாடு மற்றும் குறைந்த விலை காரணமாக இந்திய வாடிக்கையாளர்களிடையே தொடர்ந்து பிரபலமாக இருக்கும். அதேநேரம், 650சிசி பைக்குகளுக்கும் சிறிய அப்கிரேட்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதில் புதிய கலர் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, சஸ்பென்ஷன் அமைப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹேண்டில்பார்ஸ் போன்ற ரைடிங் பொசிஷன் மேம்பாடுகளும் அடங்கும். தொடர்ந்து 650சிசி பைக்குகளுக்கு வரவேற்பு உள்ளதால், அந்த பைக்குகளை நிறுத்தும் முந்தைய திட்டங்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒத்திவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான்டினென்டல் ஜிடி750 வர உள்ள நிலையில் தற்போது, கான்டினென்டல் ஜிடி650 பைக் ஆனது 648சிசி இணையான-இரட்டை (parallel-twin) ஆயில்-கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது. இது சுமார் 47 பிஎச்பி ஆற்றலையும், 52 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் தனித்துவமான இரட்டை எக்ஸாஸ்ட் (Exhaust) குழாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டின் புதிய 750சிசி பைக் இதற்கு முன்னர் வெளிநாடுகளில் சோதனை செய்யப்பட்டபோது அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்போது பைக்கில் இரட்டை முன் டிஸ்க் பிரேக்குகள், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Himalayan 450) பைக்கைப் போன்ற சிங்கிள்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதன் உற்பத்திக்குத் தயாரான மாடல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள EICMA 2026 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரவிருக்கும் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக், அதிக என்ஜின் பவர் மற்றும் டார்க் திறனை வழங்கும் அதே வேளையில், அதன் கேஃப் ரேஸர் (café racer) தன்மையைத் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் 350சிசி-க்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கான வரி விதிப்பு உயர்த்தப்பட்டு இருந்தாலும், ராயல் என்ஃபீல்டு மிட்-சைஸ் பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் தனது உலகளாவிய இருப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், கான்டினென்டல் ஜிடி750 பைக்கை தொடர்ந்து, ஹிமாலயன் 750 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









