ஆக்டிவா, ஜூப்பிட்டர், அக்சஸ்.. இந்திய ஸ்கூட்டர் சந்தையை ஆளும் மூன்று முக்கிய ஸ்கூட்டர்கள் இவை தான்
இந்த 2026ம் ஆண்டு ஸ்கூட்டர்களுக்கான ஒரு திருப்புமுனையான ஆண்டாகக் கூறலாம். இந்த ஆண்டு நான்காவது முறையாக கடந்த மே மாதம் 7 லட்சம் யூனிட்டுகளுக்கும் மேலான ஸ்கூட்டர்கள் விற்பனையாகி அசத்தியிருக்கின்றன. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களைத் தொடர்ந்து மே மாதமும் 7 லட்சம் யூனிட்டுகளுக்கும் மேலாக சுமார் 7.39 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 7 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் 6.92 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன. அதேநேரம் கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது இது சுமார் 27 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்தாண்டு, அதாவது 2025ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் சுமார் 5.80 லட்சம் ஸ்கூட்டர்களே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல இந்த மே மாதமும் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருப்போது ஹோண்டா தான். ஆக்டிவா தான் ஹோண்டாவின் பெரிய பலம். அத்துடன் டியோவும் கணிசமான அளவில் விற்பனையாகி வருகிறது. இத்துடன் ஆக்டிவா e: மற்றும் QC1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எல்லாம் சேர்ந்து 2.53 லட்சம் ஸ்கூட்டர்கள் என்ற விற்பனையைப் பதிவு செய்துள்ளது ஹோண்டா.
இந்த விற்பனை அளவுடன் 34 சதவீதம் சந்தைப் பங்குகளையும் கைப்பற்றியிருக்கிறது ஹோண்டா. கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் கடந்த மே மாதம் ஹோண்டாவின் ஸ்கூட்டர் விற்பனை 17 சதவீதம் உயர்ந்து தான் இருக்கிறது. எனினும் ஸ்கூட்டர்களில் ஹோண்டாவின் விற்பனை பங்கு 37 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதன் மூலம் மற்ற நிறுவனங்களின் ஸ்கூட்டர் விற்பனை உயர்ந்து வருவதைப் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் உள்ளது. கடந்த மே மாதம் சுமார் 2.10 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது டிவிஎஸ். ஜூப்பிட்டர் டிவிஎஸ்ஸுக்கு மிகவும் ஸ்ட்ராங்கான ஒரு ஸ்கூட்டர் மாடலாக இந்தியாவில் இருந்து வருகிறது. அதனைத் தவிர்த்து என்டார்க் ஸ்கூட்டரும் நல்ல விற்பனையையே பதிவு செய்து வருகிறது. குறிப்பாக விற்பனையில் நான்காவது இடத்தில் உள்ளது என்டார்க். டிவிஎஸ் வேகமாக முன்னேறி வருவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் தான்.
ஐக்யூப் மற்றும் ஆர்பிட்டர் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் டிவிஎஸ், கடந்த மே மாதம் 42,192 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 53 சதவீதம் விற்பனை உயர்வாகும். எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு வழிகளிலும் ஸ்கூட்டர் விற்பனை மேம்பட்டு வருவது டிவிஎஸ்ஸுக்கு விற்பனையில் ஒட்டுமொத்தமாக பெரிய பூஸ்டைக் கொடுத்திருக்கிறது. மேலும், டிவிஎஸ்ஸின் சந்தைப் பங்கும் 1 சதவீதம் உயர்ந்து 28 சதவீதம் ஆக உள்ளது.
மூன்றாம் இடத்தில் 1.08 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையுடன் சுஸூகி உள்ளது. சுஸூகியின் பெரிய போட்டியாளர் அக்சஸ். மேலே நாம் பார்த்த மற்ற நிறுவனங்கள் எல்லாம் 110 சிசி ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து வரும் நிலையில், சுஸூகி நிறுவனமானது 125 சிசி ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அக்சஸ், அவெனிஸ் மற்றும் பர்க்மன் ஆகிய எரிபொருள் ஸ்கூட்டர்களுடன், e-அக்சஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனை செய்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர்களிடம் பெரி அளவில் வரவேற்பில்லை.
நான்காம் இடத்தில் 62,307 யூனிட்டுகள் ஸ்கூட்டர்கள் விற்பனையுடன் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது ஹீரோவுன் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனை அளவு 91 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் 20,130 யூனிட்டுகள் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அடங்கும். விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 141 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
டெஸ்டினி 125 மாடல் தான் ஹீரோவிற்கு வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. கடந்தாண்டு இந்த ஸ்கூட்டரை ஹீரோ அப்டேட் செய்ததில் இருந்தே டெஸ்டினி ஸ்கூட்டரின் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஹீரோவின் (விடா) சந்தைப் பங்கு 28 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக 5.60 சதவீதத்தில் இருந்து 8.42 சதவீதமாக விற்பனை பங்கு உயர்ந்திருக்கிறது.
ஐந்தாம் இடத்தில் 39,226 யூனிட்டுகளுடன் பஜாஜ் உள்ளது. மற்ற நிறுவனங்களைப் போல இல்லாமல், இந்தியாவில் பஜாஜ் எரிபொருள் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டும் தான். கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 52 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. இத்துடன் சந்தைப் பங்குகளும் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாத உயர்ந்திருக்கின்றன.
ஆறாம் இடத்தில் 31,990 யூனிட்டுகள் விற்பனையுடன் மற்றொரு ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா இருக்கிறது. ஃபேஸினோ, ரேZR மற்றும் ஏராக்ஸ் ஆகிய எரிபொருள் ஸ்கூட்டர்களையும், EC-06 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது யமஹா. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது யமஹாவின் ஸ்கூட்டர் விற்பனை கடந்த மே மாதம் 60 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
ஏழாம் இடத்தில் எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. முழுவதுமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரிக்கும் இந்த நிறுவனம் 26,857 யூனிட்டுகளை கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 67 சதவீதம் அதிகமாகும். இந்த விற்பனை அளவுடன் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் 4 சதவீதம் சந்தைப் பங்குகளையும் கைப்பற்றியிருக்கிறது ஏத்தர் எனர்ஜி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்கூட்டர் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. அதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தங்களுடைய பங்குக்கு வளர்ச்சியை இன்னும் கொஞ்சம் வேகமாக்கியிருக்கின்றன. இந்தியாவில் பைக்குகளுக்கு இணையாக ஸ்கூட்டர்களும் விற்பனையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பின்தங்கியிருக்கும் நிறுவனங்கள் வேகமாக போட்டியில் நுழைய வழி பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications