ஜூப்பிட்டர், அக்சஸ் ஸ்கூட்டர்களுக்குப் பதிலாக இந்த 125 சிசி ஸ்கூட்டரை வாங்கலாமா?
முன்பை விட இப்போது அதிகளவிலான வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும் போது இப்போது தேர்ந்தெடுப்பதற்கு நிறைய ஸ்கூட்டர் மாடல்களும் சந்தையில் கிடைக்கின்றன. இது அதிகளவிலான விற்பனைக்கும் வித்திட்டிருக்கிறது. ஸ்கூட்டர் என்றவுடன் வாடிக்கையாளர்களின் மனதில் முதலில் தோன்றுவது ஆக்டிவா, ஜூப்பிட்டர் அல்லது அக்சஸ் தான்.
இந்த மூன்று ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் மாடல்களாக இருந்து வருகின்றன. ஆனால் இப்போது இன்னொரு ஸ்கூட்டர் ஒன்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று விற்பனையில் வேகமாக முன்னேறி வருகிறது. அது வேறெதுவும் இல்லை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெஸ்டினி தான். 110 சிசி மற்றும் 125 சிசி என இரண்டு வகையான இன்ஜின்களுடன் டெஸ்டினி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாம் இங்கே பார்க்கப் போவது டெஸ்டினி 125 ஸ்கூட்டரைப் பற்றித் தான்.

டெஸ்டினி என்றவுடன் அய்யோ அந்த ஸ்கூட்டரா என சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையில் இருந்த பழைய டெஸ்டினியை நினைத்து விடாதீர்கள். தற்போது அதனை முழுவதுமாக மாற்றியமைத்து முற்றிலும் மாடர்னான தோற்றம் மற்றும் சிறப்பான வசதிகளுடன் மேம்படுத்தியிருக்கிறது ஹீரோ. இப்போது பார்த்தீர்கள் என்றால் அந்த டெஸ்டினியா இது என்று நீங்களே அசந்து போவீர்கள்.
நான் சொல்வதனால் நீங்கள் நம்ப வேண்டாம், ஆனால் மற்ற வாடிக்கையாளர்கள் கூறினால் நம்புவீர்கள் அல்லவா. இந்தியர்களைப் பொறுத்தவரை வாய்வழி விளம்பரம் அல்லது கருத்துக்கள் வாங்கும் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு தயாரிப்பு நன்றாக இல்லையென்றால் வாய்வழி கருத்துக்களாலேயே அதற்கு முடிவுரை கட்டிவிடுவார்கள் இந்திய வாடிக்கையாளர்கள். அப்படி இருக்கும் போது ஒரு தயாரிப்பின் விற்பனை ஐந்து மடங்கு விற்பனை உயர்ந்திருந்தால், அது நன்றாக இருக்கிறது என்று தானே பொருள்.

ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரின் விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 488 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 4,393 டெஸ்டினி ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்திருக்கிறது. ஆனால் இந்த ஏப்ரல் மாதம் 25,861 யூனிட்டுகளாக விற்பனை அளவு உயர்ந்திருக்கிறது. டெஸ்டினி ஸ்கூட்டர் சிறப்பாக மாறியிருக்கிறது என்பதற்கு இதனை சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம் இல்லையா.
புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரானது மாடர்னான அதே நேரம் மிகவும் கிளாஸியான டிசைனைக் கொண்டுள்ளது. இப்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்களில் சிறப்பான டிசைன் கொண்ட எதுவென்று கேட்டால் கண்களை மூடிக்கொண்டு டெஸ்டினியைக் கை நீட்டலாம். டிசைனில் மேலே கூறிய முன்னணி ஸ்கூட்டர்களை விடவும் சிறப்பாகவே இருக்கிறது டெஸ்டினி 125. டிசைன் மட்டுமல்ல, முந்தைய டெஸ்டினி 125 ஸ்கூட்டருடன் ஒப்பிடும் போது புதிய மாடலின் தரமும் நன்றாகவே மெருகேறியிருக்கிறது.
வசதிகள் என்று வரும் போது, தனித்துவமான வசதிகளை இந்த டெஸ்டினி 125-யில் ஹீரோ கொடுத்திருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் போட்டியாளர்களுடன் போட்டியிடும் அளவிற்கான மேம்பட்ட வசதிகளைப் பெற்றிருக்கிறது. டாப் எண்டு வேரியன்டில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஸ்பிளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் எஸ்எம்எஸ் அலர்ட்கள், ஆட்டோ கேன்சலிங் இன்டிகேட்டர்கள் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
அடிப்படை வேரியன்டில் கூட சைடு ஸ்டாண்டு இன்ஜின் கட்-ஆஃப், USB சார்ஜிங் போர்ட், பூட் லைட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிகுக்கின்றன. இந்த அடிப்படை வேரியன்டில் டிஜிட்டல் டிஸ்பிளே கிடையாது, மாறாக அனலாக் ஸ்பீடோமீட்டருடன், சிறிய LCD இன்செட் ஒன்று மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறைவான வசதிகளுக்கு ஏற்ப இந்த டெஸ்டினி அடிப்படை வேரியன்டின் விலையும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
125 பிரிவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களில் மிகவும் ஸ்மூத்தான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டராக இந்த டெஸ்டினி 125-யையும் கூறலாம். இந்த ஸ்கூட்டரில் 124.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 9 hp பவர் மற்றும் 10.4 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. நல்ல மைலேஜ் தரக்கூடிய இன்ஜினாகவும் இது இருக்கிறது. லிட்டருக்கு 60 கிமீ மைலேஜை இந்த ஸ்கூட்டர் கொடுக்கும் என ஹீரோ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இடத்தில் இந்த ஸ்கூட்டர் சறுக்குகிறது என்றால் அது பூட் ஸ்பேஸ் தான். ஸ்கூட்டர்களை வாங்குவதே அதன் பிராக்டிகாலிட்டிக்குத் தான். அந்த பிராக்டிகாலிட்டியை வழங்குவதில் பூட் ஸ்பேஸுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 19 லிட்டர் பூட் ஸ்பேஸை மட்டுமே ஹீரோ கொடுத்திருக்கிறது. ஒரு லேப்டாப் பேகை இந்த பூட் ஸ்பேஸில் வைப்பதே சற்று சிரமம் தான்.
மற்ற அம்சங்கள் எல்லாம் ஓகே தான். ஸ்கூட்டரின் இரண்டு பக்கமும் 12 இன்ச் வீல்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 770 மிமீ சீட் உயரத்துடன் ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருமே எளிதாகக் கையாளும் வகையிலேயே இந்த 125 சிசி ஸ்கூட்டர் இருக்கிறது. இரண்டு பெரியவர்கள் நன்றாக அமர்ந்து செல்லும் வகையில் இடவசதி மற்றும் நன்கு பேடு செய்யப்பட்ட சீட்களையும் பெற்றிருக்கிறது. CBS பிரேக்கிங் இருப்பதால், முழுவதுமாக நிறுத்தத்திற்கு வர குறைவான தூரத்தையே எடுத்துக் கொள்கிறது டெஸ்டினி.
VX, ZX மற்றும் ZX+ என மூன்று வேரியன்ட்களாக இந்த 125 சிசி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப். அடிப்படையான VX வேரியன்டானது 77,888 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. ZX மற்றும் ZX+ ஆகிய வேரியன்ட்கள் முறையே 86,947 ரூபாய் மற்றும் 88,119 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கிளாஸியான 125 சிசி ஸ்கூட்டரை வாங்கலாமா?
உங்களது முதன்மையான பயன்பாட்டிற்கான ஸ்கூட்டராக இந்த ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரை வாங்கலாம் என நிச்சயமாக நாங்கள் பரிந்துரைக்கிறோம். எந்தவொரு தயாரிப்பிலும் இருப்பதைப் போலவே இந்த டெஸ்டினி 125 ஸ்கூட்டரிலும் சில குறைகள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் கடந்து நம்பி வாங்குவதற்கு சிறப்பான ஸ்கூட்டராகவே டெஸ்டினி 125 இருக்கிறது.
இதுவரை இந்த ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர்களும் இதனையே கூறுகிறார்கள். எனினும் தனிப்பட்ட விருப்பங்களும் பலருக்கு இருக்கும். மற்ற ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு முன் இந்த டெஸ்டினி 125 ஸ்கூட்டரை ஒரு முறை டெஸ்ட் டிரைவாவது செய்து பார்த்துவிட்டு முடிவெடுங்கள் என்பதே எங்களின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications