முழுசா சார்ஜ் பண்ணிட்டா, சென்னை-டூ-பெங்களூரு நிற்காம செல்லலாம்! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!
எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி (Simple Energy), தனது 2ஆம் ஜெனரேஷன் (Gen 2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி, தனது தயாரிப்பு உத்தியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இதில், இந்தியாவிலேயே அதிக தூரம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான புதிய சிம்பிள் அல்ட்ரா (Simple Ultra)-வும் உள்ளது. இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக சுமார் 400 கி.மீ தூரம் இயங்கக்கூடிய IDC சான்றளிக்கப்பட்டுள்ளது.
இந்த 2ஆம் ஜென் சிம்பிள் இ-ஸ்கூட்டர்களின் வெளியீடு ஆனது நிறுவனத்தின் முந்தைய ஜெனரேஷன்-1.5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இடத்திற்கானது ஆகும். இது சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான தயாரிப்பு மேம்படுத்தலாகக் கருதப்படுகிறது. புதிய சிம்பிள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.49 லட்சம் (பெங்களூரு எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள் ரூ.1.77 லட்சம் வரை செல்கின்றன. இருப்பினும், குறுகிய கால அறிமுக சலுகையாக ரூ.1.39 லட்சம் முதல் இந்த விலைகள் வழங்கப்படுகின்றன. இந்த வரிசையில் முதன்மையான தயாரிப்பு என்றால், அது சிம்பிள் அல்ட்ரா ஆகும். இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே மிகப்பெரிய 6.5 kWh பேட்டரியுடன் வந்துள்ள இது, 400 கி.மீ IDC ரேஞ்சை வழங்குகிறது.
0-40 கி.மீ/மணிநேரம் வேகத்தை வெறும் 2.77 வினாடிகளில் எட்டும் திறன் கொண்ட புதிய சிம்பிள் அல்ட்ராவின் டாப்-ஸ்பீடு 115 கி.மீ/மணிநேரம் ஆகும். இது நாட்டின் இரண்டாவது வேகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகத் திகழ்கிறது. சிம்பிள் அல்ட்ரா உடன், சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது ஜென்-2 சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், 4.5 kWh வேரியண்ட் 236 கி.மீ IDC ரேஞ்ச் உடன் ரூ.1.69 லட்சம் விலையிலும், 5 kWh வேரியண்ட் 265 கி.மீ ரேஞ்ச் உடன் ரூ.1.77 லட்சம் விலையிலும் கிடைக்கும். இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆறு ரைடிங் மோட்கள், CBS டிஸ்க் பிரேக்குகள், நான்கு-நிலை ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், தரையில் இருந்து 780 மி.மீ உயரத்தில் ரைடர் இருக்கை மற்றும் 35 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியுடன் வந்துள்ளன.
சிம்பிள் எனர்ஜியின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சிம்பிள் ஒன்ஸ் ஜென் 2 (OneS Gen 2) முன்பை விட சற்று அதிகமான 190 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இதன் விலை ரூ.1.49 லட்சம் ஆகும். ஆனால், அறிமுக சலுகையாக குறுகிய காலத்திற்கு இதை ரூ.1.39 லட்சத்திற்குப் பெறலாம். 3.7 kWh பேட்டரியுடன், இது 118 கிலோ எடை கொண்டதாகவும், 0-40 கி.மீ/மணிநேரம் வேகத்தை 3 வினாடிகளில் அடையும் திறனையும் கொண்டுள்ளது.

அதிகப்பட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தை எட்டக்கூடிய இதன் பிரேக்கிங் தூரம் 18.49 மீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பிரேக் பிடித்த பின் நிற்பதற்கு முன் ஸ்கூட்டர் செல்லும் சராசரி தூரம் 18.49 மீட்டர் ஆகும். சிம்பிள் எனர்ஜியின் ஜென் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வடிவமைப்பு மற்றும் தொழிற்நுட்ப வசதிகளில் மேம்பாடுகளைப் பெற்றிருப்பதுடன், வழக்கமான உத்தரவாதங்களையும் பெற்றுள்ளன.
இதன்படி, எட்டு வருட மோட்டார் வாரண்டி மற்றும் மூன்று வருட வாகனம் மற்றும் சார்ஜர் வாரண்டி ஆகியவை கிடைக்கும். முக்கியமாக, இந்த நிறுவனம் தனது டீலர் நெட்வொர்க்கில் ஸ்கூட்டர்களை முன்பே ஸ்டாக் வைத்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் காத்திருப்பு இல்லாமல் உடனடியாக ஸ்கூட்டர்களை டெலிவரிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஸ்கூட்டர்கள் சிம்பிள் எனர்ஜியின் 61-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது வெறும் ஒரு மேம்படுத்தல் மட்டுமல்ல. பேட்டரி ஒருங்கிணைப்பை மறுவடிவமைத்து, ஸ்கூட்டர்களை இலகுவாக்கி, செயல்திறனை சிம்பிள் எனர்ஜி மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் உண்மையான பயன்பாட்டுத் தேவைகளின் அடிப்படையில் சிறந்த சிம்பிள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10-க்கும் குறைவான ஷோரூம்கள் மூலம் 500-600 யூனிட்டுகளாக இருந்த சிம்பிள் எனர்ஜியின் மாத விற்பனை, கடந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 60-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மூலம் மாதத்திற்கு சுமார் 1,000-1,200 யூனிட்டுகளாக வளர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications









