400 கிமீ ரேஞ்சுடன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ள நிறுவனம்.. வசதிகள்லயும் அசத்திட்டாங்க!
கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தலைமுறை பிளாட்ஃபார்மைக் கொண்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லைன்-அப்பை வெளியிட்டது பெங்களூருவைச் சேர்ந்த சிம்பிள் எனர்ஜி (Simple Energy) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம். அப்போது அதிக ரேஞ்சு மற்றும் அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட சிம்பிள் அல்ட்ரா (Simple Ultra) என்ற ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். தற்போது இந்த ப்ரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, இந்தியாவில் தற்போது தான் வளர்ந்து வரும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. ஏத்தர், ஓலா போல முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனமாக வளர்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனமாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிம்பிள் ஒன் (Simple One) மற்றும் சிம்பிள் ஒன் எஸ் (Simple One S) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்கு வருகிறது அந்நிறுவனம். அதே வரிசையில் தற்போது மேம்பட்ட அம்சங்கள் கொண்ட சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை இங்கே நாம் பார்க்கலாம்.
இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மாடலில் சற்று பெரிய 6.5 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்தியிருக்கிறது சிம்பிள் எனர்ஜி. இந்த பேட்டரி பேக்குடன் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 400 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளது சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இதுவரை ஓலாவின் S1 ப்ரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகபட்சமாக 320 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டிருந்தது. இப்போது அதற்கும் மேலான ரேஞ்சுடன் சிம்பிள் அல்ட்ரா வெளியாகியிருக்கிறது.

மணிக்கு 0-40 கிமீ வேகத்தை 2.77 நொடிகளில் எட்டும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லு்ம திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பைப் பெற்றுள்ளது. இதுதவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நான்கு நிலைகளிலான ட்ராக்ஷன் கண்ட்ரோல், 7 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகிய மேம்பட்ட அம்சங்களையும் அந்நிறுவனம் கொடுத்திருக்கிறது.
ப்ரீமியமான வசதிகளைக் கொண்டிருக்கும் போது அதற்கேற்ற வகையில் விலையும் சற்று அதிகமாகத் தானே இருக்கும். ரூ.2.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது சிம்பிள் எனர்ஜி. அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லைன்-அப்பில் அதிக விலை கொண்ட ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் அல்ட்ரா தான்.
சிம்பிள் எனர்ஜி லைன்-அப்பில் மற்றும் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான, சிம்பிள் ஒன் மற்றும் சிம்பிள் ஒன் எஸ் ஆகியவை முறையே ரூ.1.90 லட்சம் மற்றும் ரூ.1.65 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் சிம்பிள் எனர்ஜியின் டீலர்ஷிர்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான விலையில் போதுமான ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையில் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மேம்பட்ட வசதிகள் கொண்ட, ப்ரீமியமான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் போதுமான அளவில் விற்பனையில் இருக்க வேண்டியது அவசியம். அதனை இந்த சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் உறுதி செய்கிறது.
விலை பிரச்சினையில்லை, ஆனால் நல்ல பெர்ஃபாமன்ஸுடன் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் வேண்டும் என்னும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிம்பிள் அல்ட்ரா மிகச்சிறப்பான தேர்வாக இருக்கும். 400 கிமீ ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது, இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை கீழ் நோக்கி மட்டுமில்லாமல் மேல் நோக்கியும் பார்க்க வைக்கும்.


Click it and Unblock the Notifications








