400 கிமீ ரேஞ்சு தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கம்மி விலையில் விற்பனை செய்ய திட்டமிடும் நிறுவனம்
இந்தியாவில் ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது சிம்பிள் எனர்ஜி (Simple Energy). பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஏத்தர் எனர்ஜியைப் போலவே தற்போது ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே இந்தியா முழுவதும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் 9வது இடத்தில் இருந்து வருகிறது இந்த சிம்பிள் எனர்ஜி. இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நிறுவனங்களைத் தவிர்த்து மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் 10,000-த்திற்கும் குறைவான அளவிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

அந்த வகையில் இந்த சிம்பிள் எனர்ஜி நிறுவனமும் குறைவாக 1,500 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து வருகிறது. ஆனால் அந்நிறுவனம் தயாரிக்கும் அளவும் குறைவு தான். ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை தயாரிக்கும் திறனையே சிம்பிள் எனர்ஜி கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் என்று சொன்னாலும் வட இந்தியாவில் குறைவான அளவிலேயே இதன் விற்பனை மையங்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களிலேயே அதிகவிளவிலான விற்பனை மையங்களைக் கொண்டிருக்கிறது சிம்பிள் எனர்ஜி. இந்நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, தயாரிப்பையும் உயர்த்தவிருக்கிறது அந்நிறுவனம். அதற்காக 250 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களிடமிருந்து தற்போது முதலீட்டையும் ஈர்த்திருக்கிறது சிம்பிள் எனர்ஜி. இந்த முதலீட்டைக் கொண்டு பேட்டரி தயாரிப்பு கட்டமைப்பை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது சிம்பிள் எனர்ஜி.

இந்தியாவில் தற்போது 38 நகரங்களில் 71 விற்பனை மையங்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம். விரைவிலேயே இந்தியா முழுவதும் விற்பனை மையங்களை விரிவுபடுத்துவதோடு, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை மாதம் 10,000 யூனிட்டுகள் என்ற அளவிற்கு உயர்த்தவும் அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது சிம்பிள ஒன் (Simple One), சிம்பிள் ஒன் எஸ் (Simple One S) மற்றும் சிம்பிள் அல்ட்ரா (Simple Ultra) ஆகிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. 190 கிமீ முதல் 400 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை, 1.65 லட்சம் ரூபாய் முதல் 2.35 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸில் மிரட்டும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சிம்பிள் எனர்ஜி வடிவமைத்திருக்கிறது. எனவே வீட்டிற்கு அருகில் இந்த நிறுவனத்தின் சர்வீஸ் செண்டர் இருப்பவர்கள் இதனை நம்பி வாங்கலாம். விரைவிலேயே குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது சிம்பிள் எனர்ஜி.
தற்போதே அந்த ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. எனவே விரைவிலேயே அதன் வெளியீடு இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பிள் எனர்ஜியின் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அது இருக்கும். இந்தியாவில் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிம்பிள் எனர்ஜியின் ஸ்கூட்டர்களும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும். குறைவான தயாரிப்பு மற்றும் குறைவான சர்வீஸ் நெட்வொர்க் காரணமாக அதிகம் விற்பனையாகாமல் இருக்கின்றன சிம்பிள் எனர்ஜியின் ஸ்கூட்டர்கள். விரைவிலேயே அந்தப் வரம்புகளைக் களைய புதிய திட்டங்களை அந்நிறுவனம் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் இந்த சிம்பிள் எனர்ஜியின் விற்பனை உயரவே வாய்ப்புகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications