கம்மி விலையில, 200 கிமீ ரேஞ்சோட புத்தம் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இதை வாங்க கூட்டம் அலை மோதப் போகுது!
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமானது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புதிய ஸ்கூட்டர் என்ன வகையானது, என்னென்ன அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது உள்ளிட்ட தகவல்களை எல்லாம் விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.
இது முற்றிலும் புதிய தகவல் இல்லை தான். இந்தப் புதிய ஸ்கூட்டர் மாடலின் டிசைனை சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் காப்புரிமைக்காகப் பதிவு செய்திருக்கிறது. தற்போது சாலையில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், அந்தத் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அரைவ் (Arrive) என்ற பெயரை அந்நிறுவனம் பயன்படுத்தலாம் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அரைவ், சிம்பிள் அரைவ் பிளஸ், சிம்பிள் அரைவ்+, அரைவ்+ மற்றும் அரைவ் பிளஸ் ஆகிய பெயர்களின் வேர்டுமார்க்கிற்கும் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதனைக் கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அரைவ் என்ற பெயரையே அந்நிறுவனம் பயன்படுத்தலாம் என்பதை கிட்டத்தட்ட நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
தற்போது இந்தியாவில் ஒன் (One) மற்றும் ஒன் எஸ் (One S) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது சிம்பிள் எனர்ஜி. இரண்டு இரண்டு ஸ்கூட்டர்களுமே ஸ்போர்ட்டியான டிசைன் லாங்குவேஜைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன. ஆனால் புதிதாக சோதனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரோ, மிகவும் சிம்பிளான, ஷார்ப்னஸ் இல்லாத மேலே குறிப்பிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் லாங்குவேஜிற்கு எதிரான ஒரு டிசைன் லாங்குவேஜைக் கொண்டிருக்கின்றன.

இதனைக் கொண்டு அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலான ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிம்பிள் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வருவதை யூகிக்க முடிகிறது. ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட, சிம்பிளான டிசைன் கொண்ட ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே சந்தையில் அதிக டிமாண்டு இருக்கிறது.
இது ஏத்தரின் ஃபார்முலா. அனைத்து வசதிகளும் கொண்ட, விலை அதிகமான ஸ்போர்ட்டியான ஏத்தரின் 450 சீரிஸ் ஸ்கூட்டர்களை விட, விலை குறைவான, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற டிசைன் கொண்ட அந்நிறுவனத்தின் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே சந்தையில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. ரிஸ்டாவைத் தொடர்ந்து அதற்குப் போட்டியாக டிவிஎஸ் நிறுவனமும் ஆர்பிட்டர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்தாண்டு சந்தையில் களமிறக்கியது. தற்போது அந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிம்பிள் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.
ட்வின் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் சிஸ்டம், நீளமான மற்றும் ஃபிளாட்டான சிங்கிள் பீஸ் சீட், ஸ்டோரேஜ் கப்பி, TFT டிஸ்பிளே, சிங்கிள் பீஸ் கிராப் ரெயில், LED விளக்குகள் ஆகிய அம்சங்களை இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. குறைவான விலையிலும் சிம்பிள் எனர்ஜி கவனம் செலுத்தும் என்பதால் அதற்கேற்ற வகையிலான வசதிகளையே இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நாம் எதிர்பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்கூட்டரில் சிம்பிள் எனர்ஜி கொடுக்கவிருக்கும் பவர்ட்ரெயின் மற்றும் பேட்டரி பேக் குறித்த தகவல்கள் எதுவும் இப்போது பகிர்ந்து கொள்ளப்படவில்லை. எனினும் சிம்பிள் ஒன் அல்லது ஒன் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி பேக் மற்றும் பவர்ட்ரெயினை இந்தப் புதிய ஸ்கூட்டருடனும் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் பகிர்ந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரி ஸ்கூட்டர்களில் ஒன்றாக சிம்பிள் ஒன் சீரிஸ் ஸ்கூட்டர்களும் உள்ளன. இதன் ஒன் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கானது 190 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. நிஜ உலகப் பயன்பாட்டில் 150 கிமீக்கும் குறையான ரேஞ்சை இந்த ஸ்கூட்டரில் நாம் எதிர்பார்க்கலாம். இதே பேட்டரி பேக் மற்றும் ரேஞ்சு தற்போது உருவாக்கப்பட்டு வரும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைவான விலையையும் முக்கிய நோக்கமாகக் கருதும் பட்சத்தில் இதனை விட சற்று சிறியதாக 2.0 kWh பேட்டரி பேக்கையும் கூட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிம்பிள் எனர்ஜி கொடுக்கலாம் என எதிர்பார்ப்பு இருக்கிறது. ரூ.1 லட்சத்தை ஒட்டிய விலையிலேயே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட சிம்பிள் எனர்ஜி முயற்சி செய்யும். சந்தை நிலவரங்கள் அதனையே சுட்டிக் காட்டுகின்ரன. சிம்பிள் எனர்ஜி என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மானியத்திற்காக இல்லாமல் விரும்பி வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடுவதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. சிம்பிள் எனர்ஜி நிறுவனமும் அதே பாதையிலேயே பயணிக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்களைப் பார்க்கும் போது அனைவரும் வாங்கும் விலையிலான, போதுமான வசதிகள் கொண்ட மற்றும் போதுமான ரேஞ்சு கொண்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








