புதிய சிம்பிள் வேவ் EV ஸ்கூட்டர்... முதல்முறையாக வெளியான படங்களுடன் சில முக்கிய விஷயங்கள்!
குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக டிமான்ட் இருக்கிறது. இதற்கு சாட்சியாக டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் ரிஸ்டா ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மாத விற்பனை சான்றாக மாறி இருக்கிறது. எனவே, இந்த சந்தையை குறிவைத்து ஏராளமான புதிய மாடல்கள் வரிசை கட்ட துவங்கி இருக்கின்றன. அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் செப்டம்பர் 2ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிம்பிள் வேவ் (Simple Wave) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் ஸ்போர்ட்டியான மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், இது முற்றிலும் தினசரி நடைமுறை பயன்பாட்டை குறிவைத்து பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே விற்பனையில் உள்ள மூன்று ஸ்கூட்டர் மாடல்களுமே பிரிமீயம் மாடல்களாக இருப்பதால் விலையும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 29ந் தேதி ஏத்தர் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் கோனார்க் குடும்ப பயன்பாட்டு ஸ்கூட்டருக்கு நேர் போட்டியாக களமிறக்கப்பட உள்ளது.
சிம்பிள் வேவ் ஸ்கூட்டரின் டிசைன் மிகவும் எளிமையாகவும், அதேநேரத்தில் அனைத்து விதமான வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருப்பது இப்போது கிடைத்துள்ள படங்களின் மூலமாக தெரிந்துகொள்ள முடுகிறது. டிசைன் நிச்சயம் எல்லோரையும் கவரும் என்பது நேற்று பெங்களூரில் நடந்த பிரிவியூ நிகழ்ச்சி மூலமாக கூறலாம்.

கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேர் செல்வதற்கு ஏதுவாக அகலமும், நீளமும் சிறப்பான அமைப்புடன் கூடிய இருக்கைகள் முக்கிய அம்சமாக கூறலாம். குறிப்பாக, பின்னால் அமர்ந்து செல்பவருக்கு சவுகரியமான உணர்வை தரும். அதேபோன்று, ஃப்ளோர்போர்டு அமைப்பும் தட்டையாக பொருட்களை வைத்து செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது.
சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படை கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சில மாறுதல்கள் உள்ளன. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்களும் உள்ளன. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்பிள் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் இந்த புதிய மாடலை கொண்டு வர இருக்கிறது. நாடுமுழுவதும் தற்போது 75 டீலர்களை பெற்றிருக்கும் இந்நிறுவனம் விரைவில் 150 முதல் 200 வரையிலான டீலர் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோன்று, ஓசூரில் உள்ள தனது உற்பத்தி ஆலையையும் மாதத்திற்கு 12,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக வாடிக்கையாளர்களை கவரும் அதிக சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. ரேஞ்ச், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும். இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் ரிஸ்டா மற்றும் விரைவில் வரும் ஏத்தரின் மற்றொரு மாடலான கோனார்க் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


