243 கி.மீ ரேஞ்ச், ரூ1.10 லட்சம் விலை... வந்துவிட்டது புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முழு விபரம்!
பெங்களூரைச் சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் இந்தியாவின் குடும்பப் பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் புதிய மாடலுடன் களமிறங்கி உள்ளது. சிம்பிள் வேவ் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை சிம்பிள் ஒன் வரிசையில் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் சிம்பிள் எனெர்ஜி தற்போது குடும்ப பயன்பாட்டு வரிசையில் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கி உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.1,09,999 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்டுகள் விபரம்
புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது Wave+, Wave மற்றும் Wave S என மூன்று வேரியண்ட்டுகளில் நான்கு விதமான பேட்டரி பேக்குகளில் கிடைக்கும். இதில், சிம்பிள் வேவ் ப்ளஸ் என்ற வேரியண்ட் விலை உயர்ந்த மாடலாக வந்துள்ளது. இதில் 5 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் IDC சோதனைச் சான்றுபடி, 243 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பையும், மணிக்கு 90 கிமீ வேகம் வரை அதிகபட்சமாக செல்லும் திறன் வாய்ந்தது. இதில் பொருத்ப்பட்டுள்ள 6.4 kW PMSM மோட்டார் அதிகபட்சமாக 179என்எம் டார்க் திறனை வழங்கும். 0-40 கிமீ வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டும் திறனையும் கொண்டுள்ளது.
அடுத்ததாக நடுத்தர விலையுடைய சிம்பிள் வேவ் என்ற வேரியண்ட்டில் 3.7kWh பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 171 கிமீ ரேஞ்சை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6.4kW மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து விலை குறைவான சிம்பிள் வேவ் எஸ் வேரியண்ட்டில் 2.7 kWh பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 132 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மேலும் 2.2 kWh பேட்டரி மற்றும் 4.5 kW மோட்டார் கொண்ட மற்றொரு வேவ் எஸ் வேரியண்ட்டானது 110 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது.

70 லிட்டர் பூட்ஸ்பேஸ்
சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 70 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இதில் அதிகபட்சம் 63 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், 4 லிட்டர் கொள்ளளவு கொண்ட Pill எனப்படும் பொருட்கள் வைப்பதற்கான 3 லிட்டர் கொள்திறன் கொண்ட க்ளவ் பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த ஸ்கூட்டரில் 920 மிமீ நீளமான பெரிய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் இருவர் பயணிக்கும் வகையில் இந்த நீளமான சீட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் வீல்பேஸ் 1,347 மிமீ ஆகவும் இருப்பதுடன் 150 கிலோ வரை எடை சுமக்கும் திறனை பெற்றுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் இருக்கை உயரம் 775 மிமீ ஆக இருப்பதுடன், கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மிமீ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 300 மிமீ அளவுக்கு தண்ணீர் தேங்கிய சாலைகளில் கடந்து செல்லும் என்றும் சிம்பிள் எனெர்ஜி தெரிவிக்கிறது.

சார்ஜிங் மற்றும் பேட்டரி
சிம்பிள் வேவ் ஸ்கூட்டருக்கு போர்ட்டபிள் சார்ஜர், ஸ்டான்டர்டு சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர்களை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.இதன் வேவ் ப்ளஸ் டாப் வேரியண்ட் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 0-80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும் என நிறுவனம் கூறுகிறது. வீட்டில் சார்ஜ் செய்வதற்காக 750W போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்படுகிறது. பேட்டரி மற்றும் மோட்டாருக்கு IP67 பாதுகாப்பு தர மதிப்பீட்டு வழங்கப்பட்டுள்ளது.
வசதிகள்
இந்த ஸ்கூட்டரில் 7 அங்குல டிஎஃப்டி திரை அல்லது சாதாரண வகை 5 அங்குல டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்டதாக கிடைக்கும். டிஎஃப்டி திரை கொண்ட வேரியண்ட்டுகளில் புளூடூத் இணைப்பு வசதி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி, ஜிபிஸ் டிராக்கர் ஆகியவை உள்ளன.
மேலும், யுஎஸ்பி சார்ஜர், ஓடிஏ அப்டேட்டுகளையும் பெற முடியும். டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் மோடு உள்ளிட்ட ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளது. தவிரவும், மூன்று விதமான ரைடிங் மோடுகளில் இயக்கும் வாய்ப்பும் உள்ளது.
வண்ணத் தேர்வுகள் மற்றும் வாரண்டி
புதிய சிம்பிள் வேவ் ஸ்கூட்டரானது வெள்ளை, சிவப்பு, கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் பச்சை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
கூடுதலாக பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தையும், போர்ட்டபிள் சார்ஜருக்கு 3 ஆண்டுகள் அல்லது 20,000 கிமீ தூரத்திற்கான வாரண்டியும் கொடுக்கப்படுகிறது.
இன்று முதல் புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த மாதம் கடைசி வாரத்தில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
This article has been updated with more information.


Click it and Unblock the Notifications


