இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட எஸ்யூவி.. ஐரோப்பாவையும் ஒரு கலக்கு கலக்கப் போகுது
கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு கார் மாடல் ஸ்கோடா கைலாக். ஐரோப்பாவில் தற்போது சீன கார் தயாரிப்பு நிறுவனங்களினால் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறது ஸ்கோடா. குறைவான விலையில் சிறப்பான ஒரு காரை அங்கே உடனடியாக வெளியிட வேண்டும் என திட்டமிட, கைலாக்கை அந்நிறுவனம் டிக் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்போர்ட்டியான வைபுடன், போதுமான வசதிகளைக் கொண்டிருக்கும் கைலாக் சப்-காம்பேக் எஸ்யூவியை தங்களின் குறைவான விலை கொண்ட காராக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தலாமா என்பது குறித்து ஸ்கோடா பரிசீலனை செய்து வருகிறதாம். இந்தியாவில் 7.49 லட்சம் என்ற விலையில் (ஐரோப்பிய மதிப்பிற்கு 6,800 யூரோ) ஸ்கோடா கைலாக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவில் ஸ்கோடாவின் விலை குறைவான கார் ஃபேபியா (Fabia) தான். இதனை 20,000 யூரோ (இந்திய மதிப்பிற்கு 22.26 லட்சம் ரூபாய்) என்ற விலையில் அங்கே விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இந்த நிலையல் கைலாக் எஸ்யூவியை பட்டி டிங்கரிங் பார்த்து அனைத்து மேம்பட்ட வசதிகளையும் கொடுத்து வெளியிட்டால் கூட 20,000 யூரோவுக்கும் கீழான விலையிலேயே வெளியிட முடியும் என நினைக்கிறது அந்நிறுவனம்.
இந்த காரணத்தினாலேயே இந்திய சந்தைக்கென தயாரிக்கப்பட்ட கைலாக் மாடலை ஐரோப்பாவில் வெளியிடுவது குறித்து ஸ்கோடா பரிசீலனை செய்து வருகிறது. இந்தியாவில் காரின் விலை குறைவாக இருப்பது முக்கியம் என்பதால், அதற்கேற்ற வகையில் MQB-A0 பிளாட்ஃபார்மில் போதுமான வசதிகளுடன் மட்டுமே இந்தக் காரை ஸ்கோடா உருவாக்கியிருந்தது. ஐரோப்பாவில் வெளியிட வேண்டும் என்றால் இப்படியே வெளியிட முடியாது. ஐரோப்பிய ஆட்டோமொபைல் விதிமுறைகளுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்து தான் வெளியிட முடியும்.

அனைத்து வகையிலும் இல்லை என்றாலும் இரண்டு இடங்களில் கைலாக் எஸ்யூவியை ஸ்கோடா கண்டிப்பாக மேம்படுத்த வேண்டும். ஒன்று பாதுகாப்பு அம்சங்கள். இந்தியாவைப் போல இல்லாமல், ஐரோப்பாவில் பாதுகாப்பு விதிமுறைகள் ரொம்பவே கடினமானவை. இன்னும் சொல்லப்போனால் பாதுகாப்பு உட்பட பல்வேறு விஷயங்களிலும் முன்மாதிரியாகவே ஐரோப்பிய சட்டங்கள் இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே அந்நாட்டு மோட்டார் வாகன சட்டங்களுக்கு உட்படும் வகையில் பல்வேறு மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கைலாக்கில் ஸ்கோடா சேர்க்க வேண்டியிருக்கும். குறிப்பாக அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் டிரைவர் டிரௌஸினஸ் மானிட்டரிங் ஆகிய ADAS பாதுகாப்பு அம்சங்கள் அங்கு கட்டாயமாக அனைத்து கார்களிலும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே அந்த வசதிகளை எல்லாம் கைலாக்கில் ஸ்கோடா கொடுக்க வேண்டும்.
பாரத் NCAP பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது ஸ்கோடா கைலாக். எனவே கட்டமைப்பு பாதுகாப்பாகவே இருக்கும் என்று தெரிகிறது. இரண்டாவது இடம் காற்று மாசுபாடு. சர்வதேச அளவில் மிகவும் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கும் நாடுகளில் ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்று. ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப கைலாக்கின் இன்ஜின் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
கைலாக்கில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூரோ மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் சிக்கினாலும், கஃபே (CAFE) விதிமுறைகளில் ஸ்கோடா சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. CAFE என்பது ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் சராசரி காற்று மாசு அளவாகும். கைலாக் அதிகளவில் விற்பனையாகும் போது, அதற்கு இணையாக ஹைபிரிட் அல்லது எலெக்ட்ரிக் கார்களும் விற்பனையாகி விட்டால் பிரச்சினையில்லை.
ஆனால் கைலாக் மட்டும் அதிகமாக விற்பனையாகத் தொடங்கினால் ஸ்கோடாவின் சராசரி காற்று மாசுபாட்டு அளவு உயர்ந்து CAFE விதிமுறை விதித்த அளவை தாண்டிச் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகிய இடங்களை சட்ட ரீதியாக ஸ்கோடாவை ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்ல ஸ்கோடா சரிபார்க்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்கள் இந்தக் காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் போதுமான இடவசதி, ப்ரீமியமான அம்சங்கள் மற்றும் ப்ரீமியமான பில்ட் குவாலிட்டி ஆகியவை இருக்க வேண்டும். கைலாக் போதுமான அளவில் இருக்கிறது. ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அளவில் இருக்கிறதா என்பது அங்கே வெளியானால் தான் தெரியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கைலாக் எஸ்யூவியானது இந்தியாவிற்கென ஸ்கோடா பிரத்தியேகமாக உருவாக்கிய ஒரு கார். இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு கார் ஐரோப்பாவில் விற்பனைக்குச் செல்வது சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. ஐரோப்பாவில் வெளியிடும் போது கைலாக்கில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பதை வைத்து இரண்டு நாடுகளில் ஆட்டோமொபைல் துறைகள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மற்றும் மோட்டார் வாகன சட்டங்களில் இருக்கும் வித்தியாசங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்ள முடியும். ஸ்கோடா என்ன செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications