வெறும் ரூ.2,125ல் அட்வென்ச்சர் பைக் ரைடர்களுக்கு சூப்பரான ஹெல்மெட்... ஸ்டட்ஸ் நிறுவனம் அறிமுகம்!
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ஸ்டட்ஸ் (STUDDS), இந்திய சந்தையில் தனது புதிய Trooper Trail மாடுலர் ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்ச்சர் பைக் ஓட்டுபவர்களை கவரும் வகையில் புதிய தோற்றம், வசதியான அம்சங்கள் மற்றும் மலிவு விலை ஆகியவற்றுடன் இந்த ஹெல்மெட் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக அட்வென்ச்சர் மற்றும் டூரிங் பைக்குகளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹிமாலயன், கேடிஎம் அட்வென்ச்சர், யெஸ்டி அட்வென்ச்சர், சுசுகி வி-ஸ்ட்ரோம், எக்ஸ்பல்ஸ் போன்ற பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், பாதுகாப்புடன் ஸ்டைலான தோற்றத்தையும் விரும்புகின்றனர். அந்த தேவையை கருத்தில் கொண்டு Trooper வரிசையில் புதிய Trail பதிப்பை ஸ்டட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற ரகம்
Trooper Trail என்பது முழு முகத்தையும் பாதுகாக்கும் Full Face ஹெல்மெட். அதே நேரத்தில், இது Flip-up அல்லது Modular வகையைச் சேர்ந்தது. அதாவது, சிக்னல், டோல் பிளாஸா அல்லது சிறிய ஓய்வுக்காக வாகனத்தை நிறுத்தும்போது முன்பக்க Chin Bar பகுதியை மேலே தூக்கிக்கொள்ள முடியும். நீண்ட தூர பயணங்களின் போது இந்த வசதி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வசீகர டிசைன்
இந்த ஹெல்மெட்டின் மிகப்பெரிய சிறப்பு அதன் புதிய தோற்றம். இளைஞர்களை கவரும் வகையில், வழக்கமான கிராபிக்ஸ்களுக்கு பதிலாக அட்வென்ச்சர் ரைடிங் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கூர்மையான கோடுகள், புதிய டீக்கல் வடிவமைப்பு மற்றும் ஆறு வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் Black-Grey மற்றும் Chameleon Blue நிற கலவையில் வரும் மாடல், ஒளி படும் கோணத்திற்கு ஏற்ப நிறம் மாறும் கலர்-ஷிப்ட் பெயிண்டுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சம் ஸ்டட்ஸ் நிறுவனத்தின் Trooper வரிசையில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பிலும் இந்த ஹெல்மெட் குறைவில்லாமல் வருகிறது. அதிக தாக்கத்தைத் தாங்கக்கூடிய ABS வெளிப்புற ஷெல், பல அடுக்குகள் கொண்ட EPS லைனர், ISI (BIS) மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதனால் நகரப் பயணங்களிலும், நெடுஞ்சாலை பயணங்களிலும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் Scratch Resistant வைசர், Quick Release Visor அமைப்பு, மாற்றக்கூடிய உள் லைனர், Quick Release Chin Strap, துருப்பிடிக்காத Stainless Steel Buckle மற்றும் UV Resistant Paint Finish போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஹெல்மெட்டை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு சுத்தம் செய்வதும், பராமரிப்பதும் எளிதாக இருக்கும் வகையில் கீழ்புற டிரிம் பகுதியையும் அகற்ற முடியும்.
ஹெல்மெட் அளவுகள்
Trooper Trail ஹெல்மெட் Medium, Large மற்றும் Extra Large ஆகிய மூன்று அளவுகளில் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட Studds டீலர்கள், பிரத்யேக ஷோரூம்கள் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தின் மூலம் வாங்கலாம்.
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன், கேடிஎம் 390 அட்வென்ச்சர், ஹீரோ எக்ஸ்பல்ஸ், சுசுகி வி-ஸ்ட்ரோம் SX, யெஸ்டி அட்வென்ச்சர் போன்ற மாடல்களை பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கும். அதேபோல் வார இறுதிகளில் டூரிங் செல்லும் ரைடர்கள், நீண்ட தூர பயணங்களை விரும்புபவர்கள், மாடுலர் ஹெல்மெட்டின் வசதியை விரும்பும் தினசரி அலுவலக பயணிகள் ஆகியோருக்கும் இது நல்ல ஆப்ஷனாக அமையும்.
என்ன சிறப்பு?
Trooper Trail என்பது ஏற்கனவே விற்பனையில் உள்ள Trooper Modular ஹெல்மெட்டின் புதிய Trail பதிப்பாகும். இது முழு முகத்தை மூடும் (Full-face) ஹெல்மெட்டாகவும், தேவையான போது முன்பகுதியை மேலே தூக்கக்கூடிய மாடுலர் (Flip-up) வடிவமைப்புடனும் வருகிறது. இதனால் நகரப் பயணங்களுக்கும், நீண்ட தூர டூரிங் பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும். மேலும், அட்வென்ச்சர் பைக்குகளுக்கு பொருத்தமாக முன்புறத்தில் Sun Peak Visor வழங்கப்பட்டுள்ளது. இது வெயில் மற்றும் தூசி தாக்கத்தை ஓரளவு குறைக்க உதவுகிறது.
நிறுவனத்தின் கருத்து
இந்த ஹெல்மெட் அறிமுகம் குறித்து ஸ்டட்ஸ் ஆக்சஸரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் பூஷண் குரானா கூறுகையில், "Trooper வரிசை ஹெட்மெட்டுகள் எங்களின் வலுவான மாடுலர் ஹெல்மெட் வரிசைகளில் ஒன்றாக உள்ளது. புதிய Trail பதிப்பு, பாதுகாப்புடன் சேர்த்து அட்வென்ச்சர் தோற்றத்தையும் விரும்பும் ரைடர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
விலை விபரம்
ரூ.2,125 என்ற ஆரம்ப விலையில் Flip-up மாடுலர் வடிவமைப்பு, அட்வென்ச்சர் ஸ்டைல், Chameleon Finish போன்ற அம்சங்களை வழங்குவதால், இந்த ஹெல்மெட் நகரப் பயணத்திற்கும், வார இறுதி டூரிங் பயணங்களுக்கும் ஏற்ற தேர்வாக இருக்கலாம். குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் மாடுலர் ஹெல்மெட் வாங்க நினைப்பவர்களுக்கு இது கவனிக்க வேண்டிய புதிய ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications