வாயைப் பிளக்க வைக்கும் சுஸூகி அக்சஸ் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை.. இந்த விலையைக் குறைப்பது எப்படி?
இருசக்கர வாகனம் வாங்குதில் இன்றைய வாடிக்கையாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் ஆன்-ரோடு விலைகளுக்கு இடையிலான வேறுபாடு. நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் போது பெரும்பாலும் அதன் தொடக்கவிலையை மட்டுமே குறிப்பிடும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் ஒரே விலையில் ஒரு வாகனம் விற்பனை செய்யப்படாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு நகரத்திற்கும் கூட எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே மாற்றம் இருக்கும்.
ஆனால் நம்முடைய நகரத்தில் இருக்கும் ஒரு ஷோரூமிற்குச் சென்று வாகனத்தை வாங்க முற்படும் போது, எக்ஸ்-ஷோரூம் விலைக்கும், ஆன்-ரோடு விலைக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கும். இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் 125 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றாக அக்சஸ் 125 இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை குறித்த பட்டியல் ஒன்றை இணையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பகிர்ந்து அதிர்ச்சியளிக்கச் செய்திருக்கிறார்.

அதில் அக்சஸ் ஸ்கூட்டருக்கான ஆன்-ரோடு விலை 1.38 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்சஸ் 125 ஸ்கூட்டரை விளம்பரங்களில் நீங்கள் பார்க்கும் போது 80,585 ரூபாய் மட்டுமே என்ற விலையைத் தான் பார்ப்பீர்கள். இது டெல்லியில் அக்சஸ் 125 ஸ்கூட்டரின் தொடக்க நிலை வேரியன்டின் விலையாகும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அதே தொடக்க நிலை வேரியன்டின் விலை 84,649 ரூபாய் ஆகும். இங்கேயே 4,000 ரூபாய் வரை நீங்கள் வாங்க நினைக்கும் ஸ்கூட்டரின் விலை உயர்ந்துவிட்டது.
அடுத்தாக வேரியன்ட்கள். அடிப்படை வேரியன்டில் மிகவும் அடிப்படையான அம்சங்களையே நிறுவனங்கள் கொடுத்திருக்கும். இன்னும் சில ஆயிரங்களை கூடச் சேர்த்துப் போட்டால் கொஞ்சம் அதிக வசதிகள் கொண்ட வேரியன்டை வாங்கி விடலாம் எனத் திட்டமிட்டு டாப் எண்டு வேரியன்டில் வந்து நிற்பீர்கள். அக்சஸ் 125 ஸ்கூட்டரின் டாப் எண்டு வேரியன்டானது 1.04 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

எக்ஸ்-ஷோரூம் விலை என்பது ஸ்கூட்டருக்கானது மட்டும் தான், அதில் இருக்கும் அக்சஸரீஸ்களுக்கானது இல்லை. எனவே சைடு மிரர்கள் உள்ளிட்ட ஸ்கூட்டருக்கு அவசியம் தேவையான அம்சங்களையும் நீங்கள் தனியே விலை கொடுத்து வாங்கும் வகையில் தான் இருக்கும். இந்த வகையில் நாம் வாங்கும் போது சில ஆயிரங்கள் வரை விலை கூடிவிடும்.
பின்னர் சாலை வரி, இன்சூரன்ஸ், RTO கட்டணம் ஆகியவை இருக்கும். வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ள தகவலில் இவை 25,000 ஆக இருக்கிறது. இதனை நாம் தவிர்க்க முடியாது. ஸ்கூட்டரின் விலைக்கு ஏற்ப இவற்றின் சதவீதமும் மாறும். இறுதியாக எக்ஸ்டண்டட் வாரண்டி மற்றும் ஸ்கூட்டருக்கு மிகவும் அவசியம் இல்லாத அக்சஸரீஸ்களை டீலர்ஷிப்கள் விற்பனை செய்ய முற்படுவார்கள். எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட 1.40 லட்சம் ரூபாய் என்ற ஆன்-ரோடு விலையில் வந்து நிற்கும்.
இதனைத் தவிர்ப்பது எப்படி? ஷோரூமுக்கு செல்வதற்கு முன்பே எந்த ஸ்கூட்டர் எந்த வேரியன்ட் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்து விடுங்கள். இல்லையெனில் டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக மட்டும் தனியே ஒரு முறை ஷோரூமுக்குச் செல்லுங்கள். டெஸ்ட் டிரைவ் செய்து பின்பு, ஸ்கூட்டரின் வேரியன்ட்கள் மற்றும் அவற்றுக்கிடையிலான விலை மற்றும் வசதிகள் வேறுபாடு ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வகையில் எந்த வேரியன்டை வாங்குவது என்பதனை நீங்கள் தெளிவாகத் தேர்ந்தெடுக்க முடியும். நிறைய நேரங்களில் ஷோரூமுக்குச் சென்ற பின்னர், சேல்ஸ்மேன்கள் சொல்லவதைக் கேட்டு அந்த நேரத்தில் முடிவு எடுக்கும் போதே இவ்வளவு அதிகமான விலைக்கு ஸ்கூட்டரை வாங்கி விடுவோம். மேலும், உங்களுக்கு என்னென்ன அக்சஸரீஸ்கள் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை ஸ்டரிக்ட்டாக டீலர்ஷிப்களிடம் பேசுங்கள்.
இல்லையென்றால் இதெல்லாம் கண்டிப்பாக ஸ்கூட்டருடன் வாங்க வேண்டும் என்று நிறைய தேவையில்லாத அக்சஸரீஸ்களையும் உங்கள் தலையில் கட்டிவிடுவார்கள். வீட்டிலேயே எந்த ஸ்கூட்டர் அல்லது வேரியன்டை வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை உங்களுடைய புதிய இருசக்கர வாகனத்தை வாங்கும் போது மிச்சம் பிடிக்கலாம்.
ஸ்கூட்டரை வாங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஷோரூக்குச் செல்வதற்குத் தயக்கப்படாதீர்கள். அதேபோல் கேள்வி கேட்கவும் தயங்காதீர்கள். இந்த தயக்கத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை தான் மேலே கூறிய 20,000 தான். நாம் விரும்பும் விலையில் அல்லது தெளிவான திட்டமிடலுடன் ஸ்கூட்டர் வாங்கும் போது, அதன் மொத்தப் பயன்பாடுமே இனிமையாக இருக்கும். இல்லையெனில் விலைக்கேற்ற ஸ்கூட்டராக இல்லையோ என்ற எண்ணமும் உங்கள் வாகனத்தின் பெர்ஃபாமன்ஸ் மீது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு வாகனத்தின் விலையைப் பார்க்கும் போதே அதிலிருந்து 30 சதவீதமும் முதல் 40 சதவீதம் வரை ஆன்-ரோடு விலை அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பின்னர் எது எதற்கெல்லாம் பணம் கூடுதலாக தேவைப்படுகிறது, எதனையெல்லாம் குறைக்கலாம் என்பதைப் யோசித்து திட்டமிடுங்கள், அவ்வளவு தான்.


Click it and Unblock the Notifications