ஆக்டிவா, ஜூபிடரை விட குறைவான விலை! முழுசா 90 கிமீ மைலேஜ்! பெட்ரோல் விலை எவ்ளோ உயர்ந்தாலும் பிரச்சனையே இல்ல!
ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான டூவீலர்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சுஸுகி ஆக்ஸஸ் ( Suzuki Access) ஸ்கூட்டருக்குதான் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக சுஸுகி ஆக்ஸஸ் உள்ளது.
இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல. சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 70,339 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 8.04 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters April 2026), சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர், 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டர்கள் உள்ளன. நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவற்றின் விற்பனை எண்ணிக்கை முறையே 2,20,774 மற்றும் 1,17,383 ஆக இருக்கிறது.

சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் நேரடி போட்டி மாடல்களான ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகியவை 110 சிசி மற்றும் 125 சிசி என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரானது 125 சிசி வெர்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 83,807 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இது ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களின் 125 சிசி வெர்ஷன்களின் ஆரம்ப நிலை வேரியண்ட்களை விட விலை குறைவானது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 92,848 ரூபாயாக இருக்கிறது.
மறுபக்கம் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 86,890 ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே சுஸுகி, ஹோண்டா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
விலை குறைவானது என்பது, சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருக்க மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. அத்துடன் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளது. சமீபத்திய அளவில் பார்த்தால், அஸர் ஃபாஸ்டர் விருதுகள் 2026 (Acer FASTER Awards 2026)-ன் 2026ம் ஆண்டிற்கான சிறந்த ஸ்கூட்டருக்கான விருதை, சுஸுகி ஆக்ஸஸ் வென்றிருப்பதை குறிப்பிடலாம்.
இது நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த ஸ்கூட்டர் ஆகும். இதன் இருக்கைக்கு அடியில் 24.4 லிட்டர் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹெல்மெட், காய்கறிகள், லேப்டாப் பை போன்றவற்றை எளிதாக வைத்து கொள்ளலாம். அத்துடன் சுஸுகி ஆக்ஸஸ் ஒரு லிட்டருக்கு 50-60 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குவதாக, அதை பயன்படுத்தி வருபவர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் கூடிய விரைவில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த தகவலை சுஸுகி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் எடை குறைவானது. அத்துடன் இதன் இருக்கை உயரமும் கூட குறைவானதுதான். எனவே அனைவராலும் இதை மிகவும் எளிமையாக இயக்க முடியும். எனவே மிகவும் குறைவான விலையில் தினசரி பயன்பாட்டிற்கு ஒரு ஸ்கூட்டரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications