அவெனிஸ் ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது சுஸூகி.. குறைவான விலையில் நிறைவான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது!
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் மாடலான அவெனிஸுக்கு (Avenis) புதிய நிறத்தைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது சுஸூகி. இந்தியாவில் சுஸூகி விற்பனை செய்து வரும் மூன்று ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது அவெனிஸ். இதனைத் தவிர, அக்சஸ் மற்றும் பர்க்மன் ஆகிய ஆகிய ஸ்கூட்டர் மாடல்களையும் இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
சமீப காலமாக அவெனிஸின் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. எனவே விற்பனையை உயர்த்தும் பொருட்டு புதிய நிறத்தைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது. இந்த 125 சிசி ஸ்கூட்டர் மாடலை, அவெனிஸ், அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷன் மற்றும் அவெனிஸ் ஸ்பெஷல் எடிஷன் என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது சுஸூகி. இதில் ஸ்பெஷல் எடிஷன் வேரியன்டிற்கே புதிய நிறத்தைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது.

அவெனிஸ் ஸ்பெஷல் எடிஷன் வேரியன்டிற்கு பியர்ல் கிளேசியர் ஒயிட்/ மெட்டாலிக் ஊர்ட் கிரே என்ற டூயல் டோன் நிறத்தைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது. இந்தப் புதிய நிறத்தைத் தவிர்த்து ஸ்கூட்டரில் மெக்கானிக்கலாகவோ, வசதிகள் ரீதியாகவோ வேறு எந்த மாற்றமும் இல்லை. இதனால் விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பு விற்பனை செய்யப்பட்டு வந்த அதே விலையிலேயே இனியும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மிகவும் ஷார்ப்பான டிசைன் லாங்குவேஜைக் கொண்டுள்ளது அவெனிஸ். அக்சஸ் ஸ்கூட்டரை குடும்ப வாடிக்கையார்களை மையப்படுத்தி கிளாஸியான டிசைனுடன் சுஸூகி விற்பனை செய்து வருகிறது. எனவே இளைஞர்களைக் கவரும் விதமாக, ஷார்ப்பான மற்றும் ஸ்போர்ட்டியான டிசைனை அவெனிஸுக்குக் கொடுத்தது. டிவிஎஸ் என்டார்க் மற்றும் ஹோண்டா டியோ ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுக்குப் போட்டியாக இந்த சுஸூகி அவெனிஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அக்சஸில் இருக்கும் அதே 124.2 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் அவெனிஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 8.6 hp பவர் மற்றும் 10 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜை ஒருசேர தரும் சில இன்ஜின்களில் சுஸூகியின் இந்த 125 சிசி இன்ஜினும் ஒன்று.
இந்த ஸ்கூட்டரில் LED முகப்பு விளக்கு மற்றும் பின்பக்க விளக்கு, சுஸூகி ரைடு கனெக்ட் மூலமாக ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொள்ளும் வகையிலான ப்ளூடூத் வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், USB சார்ஜிங் சாக்கெட்டுடன் கூடிய முன்பக்க ஸ்டோரேஜ் பாக்ஸ், 21.8 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்பிளிட் கிராப் ரெயில்கள் மற்றும் ஸ்போர்ட்டியான கிராஃபிக்ஸுடன் கிடைக்கும் இந்த அவெனிஸ் ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு எடிஷனை ரூ.84,293 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஸ்பெஷல் எடிஷனை ரூ.86,677 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்து வருகிறது சுஸூகி. சற்று குறைவான விலையைக் கொண்டிருந்தாலும் அக்சஸுடன் ஒப்பிடும் போது அவெனிஸின் விற்பனை அதல பாதாளத்தில் உள்ளது.
ப்ரீமியமான ஸ்கூட்டராக இருக்கும் போதிலும் கடந்த மார்ச் மாதம் வெறும் 3,691 அவெனிஸ் ஸ்கூட்டர்களையே இந்தியாவில் விற்பனை செய்துள்ளது சுஸூகி. இது கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 44.45% குறைவாகும். மேலும், கடந்த ஆறு மாதங்களில் 25,796 அவெனிஸ் ஸ்கூட்டர்களையே சுஸுகி விற்பனை செய்துள்ளது. பிப்ரவரி மாதத்தைத் தவிர்த்து மற்ற ஐந்து மாதங்களும் அவெனிஸின் விற்பனை சரிவையே சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது முன்னணியில் விற்பனையாகும் எந்தவொரு ஸ்கூட்டர் மாடலுக்கும் சற்றும் சளைக்காத, அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு ஸ்கூட்டர் மாடல் சுஸூகி அவெனிஸ். இளைஞர்களையே மையப்படுத்தியே வெளியிடப்பட்டிருந்தாலும், குடும்பப் பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு ஸ்கூட்டராகவே அவெனிஸ் இருக்கிறது. அக்சஸ், ஜூப்பிட்டர், என்டார்க் உள்ளிட்ட ஸ்கூட்டர்களை வாங்கத் நினைக்கும் போது இந்த அவெனிஸையும் பரிசீலனையில் வைத்துக் கொள்ளலாம் என்பதே எங்களின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








