சுஸூகி பர்க்மன் ஸ்ட்ரீட்.. பழைய மற்றும் புதிய ஸ்கூட்டர்களுக்கு இடையில் இவ்வளவு மாறியிருக்கிறதா?
மேம்படுத்தப்பட்ட பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலை சமீபத்தில் வெளியிட்டது சுஸூகி. ரூ.1 லட்சத்திற்கும் மேலான விலையில் இந்த மேம்படுத்தப்பட்ட 125 சிசி ஸ்கூட்டர் மாடல் வெளியானது. அப்டேட்டிற்கு முந்தைய பர்க்மன் ஸ்ட்ரீட் மாடலுக்கும், அப்டேட்டிற்கு பிந்தைய மாடலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய மற்றும் பழைய பைக்குகளுக்கு இடையில் என்னென்ன மாறியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
அடிப்படைக் கட்டமைப்பு:
வெளியிலிருந்து பார்க்கும் போது தெரியாது. ஆனால் புதிய பர்க்மன் ஸ்கூட்டரின் அடிப்படை மெக்கானிக்கல் கட்டமைப்பையே மேம்படுத்தியிருக்கிறது சுஸூகி. கடந்தாண்டு அக்சஸ் 125 ஸ்கூட்டர் வெளியான போதும் அந்த ஸ்கூட்டரின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தது சுஸூகி. அதன் அடிப்படையிலான பிளாட்ஃபார்மையே புதிய பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கும் கொடுத்திருக்கிறது.

புதிய ஸ்கூட்டரின் ஃபிரேம் முன்பை விட உறுதித்தன்மையுடன் இருக்கும் அதே நேரத்தில், 500 கிராம் வரை குறைவான எடையையும் கொண்டிருக்கிறது. புதிய பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலில் இரண்டு பக்கமும் 12 இன்ச் வீல்களையே கொடுத்துள்ளது சுஸூகி. மற்று பெரிய ரியர் வீலானது அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்ஜின்:
முந்தைய ஸ்கூட்டரில் இருந்த அதே இன்ஜின் தான், ஆனால் இன்ஜின் உள்ளே இருக்கும் பாகங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்ஜின் உள்ளே இருக்கும் முக்கியமான பாகங்களான கேம்ஷாப்ட், கிராங்க்ஷாப்ட் மற்றும் கிராங்க்கேஸ் ஆகிய அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. கிராங்க்கேஸானது புதிய ஸ்டார்ட்டர் கிளட்சுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் முன்பை விட குறைவான சத்தத்துடனும், ஸ்மூத்தாகவும் புதிய பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்டார்ட் ஆகும்.

இந்த மேம்படுத்தப்பட்ட இன்ஜினானது 8.4 hp பவர் மற்றும் 10.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது முன்பை விட 0.2 hp குறைவான பவர் மற்றும் 0.2 Nm கூடுதல் டார்க்காகும். புதிய ஸ்கூட்டரின் எரிபொருள் சிக்கனமும் மேம்பட்டிருப்பதாக சுஸூகி தெரிவித்துள்ளது. இதனால் முன்பை விட கூடுதல் மைலேஜை பர்க்மன் ஸ்ட்ரீட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைன்:
புதிய பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் ஒட்டுமொத்தமாக எதுவும் மாறவில்லை, ஆனால் ஒவ்வொரு டிசைனும் மாறியிருக்கிறது. பார்த்தவுடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிற வகையான மாற்றங்கள் என்றால் புதிய ஸ்கூட்டரின் விளக்குகள் தான். முகப்பு விளக்கு மற்றும் பின்பக்க விளக்குகளை முன்பை விட ஸ்டைலாக மாற்றியிருக்கிறது சுஸூகி. இவை முற்றிலும் புதிய டிசைனில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சைடு இண்டிகேட்டர்களும் கூட மறுவடிவமைப்பு செய்யப்பட்டு புதிய டிசைனில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதனைத் தவிர்த்து பைக்கின் ஒவ்வொரு டிசைன் அம்சத்திலும் நாம் புதுமையைப் பார்க்க முடிகிறது. முந்தைய பைக்கில் இருந்து அனைத்து அம்சங்களிலும் வேறுபாடு காட்டியிருக்கிறது சுஸூகி. வைஸர், சைடு பேனல்கள், ரியர் பேனல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது முன்பு போலவே இருக்கின்றன, ஆனால் புதிய ஸ்கூட்டரில் தனித்துவமான டிசைனையும் கொண்டிருக்கின்றன. பழைய மாடலை விட 3.1 லிட்டர் அதிகமாக 24.6 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது புதிய பர்க்மன் ஸ்ட்ரீட்.
வேரியன்ட்கள் மற்றும் வசதிகள்:
ரைடு கனெக்ட், ரைடு கனெக்ட் TFT என இரண்டு வேரியன்ட்களாக புதிய பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது சுஸூகி. அடிப்படையான ரைடு கனெக்ட் வேரியன்டில், ப்ளூடூத் கனெக்டிவிட்டுயுடன் கூடிய LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், கிரீன், ஒயிட், மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் ப்ளூ ஆகிய ஐந்து சிங்கிள் டோன் நிறங்களில் இந்த வேரியன்ட் விற்பனை செய்யப்படுகிறது.
டாப் எண்டான ரைடு கனெக்ட் TFT வேரியன்டில், பெயருக்கேற்றது போலவே 4.2 இன்ச் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் கீலெஸ் இக்னிஷன் வசதியையும் கொடுத்துள்ளது சுஸூகி. சாவி உங்கள் பாக்கெட்டில் இருந்தால் போதும், ஸ்கூட்டரில் செருக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ப்ளூ, சில்வர், பிரான்ஸ் மற்றும் ஒயிட் ஆகிய நிறங்களுடன் காப்பர் ஷேடு கலந்த டூயல் டோன் நிறங்களில் இந்த வேரியன்ட் விற்பனை செய்யப்படுகிறது.
விலை என்ன?
முன்னதாக ரூ.93,676 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது பர்க்மன் ஸ்ட்ரீட். தற்போது அது ரூ.1.02 லட்சமாக உயர்ந்துள்ளது. டாப் எண்டு வேரியன்டானது ரூ.1.13 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பர்க்மன் ஸ்ட்ரீட் மாடலை விரும்பும் வாடிக்கையாளர்கள், பர்க்மன் ஸ்ட்ரீட் EX மாடலை வாங்கலாம். அதனை சுஸூகி இன்னும் அப்டேட் செய்யவில்லை. அது ரூ.1.08 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனித்துவமான டிசைன் கொண்ட ஸ்கூட்டர் மாடல் வேண்டும் என்பவர்களுக்கு பர்க்மன் ஸ்ட்ரீட் ஒரு சிறந்த சாய்ஸாக இருக்கும். முன்பை விட அதிக வசதிகள் நிறைந்ததாக, பயன்பாட்டு அனுபவமும் சிறப்பான ஒன்றாக இருக்கும் வகையில் இந்த ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. விலை சற்று அதிகம் தான் என்றாலும், அதற்கேற்ற வசதிகள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. கீலெஸ் இக்னிஷன் வசதி கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்டாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








