50 கிமீ மைலேஜ் தரும் ஸ்போர்ட் பைக்.. இப்போ விலைய உயர்த்திட்டாங்க.. இனிமே இந்த விலை தான்!
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 'ஜிக்ஸர் SF' (Gixxer SF) பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது சுஸூகி. அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் நான்கு மாஸ் மார்க்கெட் பைக்குகளில் முக்கியமான ஒன்றாக ஜிக்ஸர் SF இருந்து வருகிறது. பார்ப்பதற்கு ஸ்டைலான ஃபேர்டு (Faired) பைக்காகவும் ஜிக்ஸர் SF இருக்கிறது.
ஜிக்ஸர் சீரிஸிலேயே நான்கு பைக் மாடல்களை சுஸூகி விற்பனை செய்து வந்தாலும், ஜிக்ஸர் SF பைக்கின் விலையை மட்டுமே அந்நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. ஜிக்ஸர், ஜிக்ஸர் SF, ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் SF 250 ஆகிய நான்கு மாஸ் மார்க்கெட் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். ஜிக்ஸர் சீரிஸைத் தவிர்த்து V-ஸ்டார்ம் SX என்ற மற்றொரு பைக்கும் சுஸூகியின் இந்திய லைன்-அப்பில் இருக்கிறது.

தற்போது ஜிக்ஸர் SF-ஐ தவிர்த்து மற்ற பைக்குகளின் விலையில் சுஸூகி எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கின் விலையை தற்போது 3,800 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது சுஸூகி. இனி ஜிக்ஸர் SF (ஸ்டாண்டர்டு எடிஷன்) பைக்கை 1.38 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஸ்பெஷல் எடிஷன் மாடலை 1.39 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
சுஸூகி இந்தியாவில் விற்பனை செய்து வரும் இரண்டாவது விலை குறைவான பைக்காக இருக்கிறது ஜிக்ஸர் SF. இதனை விட குறைவாக 1.31 லட்சம் ரூபாய் என்ற விலையில் ஜிக்ஸர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பைக்குகளிலும் 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினையே சுஸூகி பயன்படுத்தியிருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 13.4 hp பவர் மற்றும் 13.8 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த இரண்டு பைக்குகளைத் தவிர்த்து, ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 மற்றும் V-ஸ்டார்ம் SX ஆகிய மூன்று பைக்குகளிலும் 249 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜினை சுஸூகி பயன்படுத்தி வருகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 26.13 hp பவர் மற்றும் 22.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அனைத்து இன்ஜினும் E20 எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜிக்ஸர் SF பைக்கின் விலையை மட்டும் உயர்ந்தியிருந்தாலும் அடுத்தடுத்து மற்ற பைக்குகளின் விலைகளையும் சுஸூகி உயர்த்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. விலை குறைவான பைக்காக இருந்தாலும், மேம்பட்ட வசதிகளைக் கொண்ட பைக்காகவே சுஸூகி ஜிக்ஸர் SF இருக்கிறது. இந்த பைக்கில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சஸ்பென்ஷனுக்காக முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் 5-ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. முகப்பு விளக்கு மற்றும் பின்பக்க விளக்கு LED-யாகவே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் இந்த 150 சிசி பைக்கில் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
இப்போது கொஞ்சம் விலை உயர்ந்திருந்தாலும் வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவை மாற்றும் அளவிற்கு இந்த விலை உயர்வு விற்பனையைப் பாதிக்காது என்றே தெரிகிறது. மேலும் ஃபேர்டு பைக்குளிலேயே ஜிக்ஸர் SF சீரிஸ் பைக்குகளுக்கு என்று தனி இடம் இருக்கிறது. 150 சிசி ஸ்போர்ட் பைக்காக இருந்தாலும் நல்ல மைலேஜ் கொடுக்கும் ஒன்றாகவே இது இருக்கிறது. லிட்டருக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வரையிலான மைலேஜை இந்த பைக்கில் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications