மொத்த இந்தியாவே எதிர்பார்த்த முதல் சுஸுகி இ-ஸ்கூட்டர்... சார்ஜ் ஃபுல் பண்ணா இவ்வளவு தூரம் மட்டும்தான் போகுமா?
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 'இ-ஆக்ஸஸ்' (e-Access) மாடலை அறிமுகம் செய்து, அதற்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. புதிய சுஸுகி இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.88 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை தொடங்கியவுடன் ஃப்ளிப்கார்ட் (Flipkart) மூலமாகவும் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.
சுஸுகியின் இந்த புதிய அறிமுகம், நகரப்புற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) பிரிவில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) கண்காட்சியில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதன்முதலில் பொது வெளியில் காட்சிப்படுத்தப்பட்டது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, இ-ஆக்ஸஸ் ஒரு நவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதில், செங்குத்தான டிசைனில் LED DRL மற்றும் செவ்வக வடிவ LED ஹெட்லேம்ப் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. 12-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் முழு LED விளக்குகள் இந்த ஸ்கூட்டரின் அழகை மேம்படுத்துகின்றன.
இதற்கேற்ப, நான்கு கவர்ச்சிகரமான இரட்டை-நிற கலர் ஆப்ஷன்களில் இ-ஆக்ஸஸ் கிடைக்கிறது. மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் நீலம்/மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே, மெட்டாலிக் மேட் கருப்பு/மெட்டாலிக் மேட் பர்டோ சிவப்பு, பளபளப்பான பியர்ல் வெள்ளை/மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே மற்றும் பியர்ல் ஜெட் பச்சை/மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஸ்கூட்டரின் மையத்தில் சுஸுகியின் சொந்தமான 'இ-தொழில்நுட்பம்' உள்ளது. இது 3.07kWh லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP) பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி நீண்ட ஆயுளையும், மேம்பட்ட வெப்ப நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது. இந்த LFP பேட்டரி ஆனது வழக்கமான நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் (NMC) பேட்டரிகளை விட நான்கு மடங்கு அதிக ஆயுள் கொண்டது என்று சுஸுகி கூறுகிறது.

இ-ஆக்ஸஸ் 5.58bhp (4.1kW) மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 15 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் அதிகபட்சமாக மணிக்கு 71கிமீ வேகத்தையும், ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 95கிமீ தூரமும் பயணம் செய்ய முடியும் என்றும் சுஸுகி தெரிவித்துள்ளது. பேட்டரி 10% சார்ஜ் நிலையில் இருக்கும்போதும் சீரான ஆக்ஸலரேஷனை இந்த ஸ்கூட்டர் வழங்குவதாக சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஓட்டுநர்கள் 'சுஸுகி டிரைவ் மோட் செலக்டர்-இ' (SDMS-e) வழியாக ஈக்கோ (Eco), ரைடு ஏ (Ride A) மற்றும் ரைடு பி (Ride B) ஆகிய மூன்று ரைடு மோட்களுள் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ரிவர்ஸ் மோடும் சேர்க்கப்பட்டுள்ளது. இ-ஆக்ஸஸ் ரீஜெனரேடிவ் பிரேக்கிங் அம்சம் மற்றும் பெரியதாக பராமரிப்பு தேவைப்படாத பெல்ட் டிரைவ் அமைப்பையும் கொண்டுள்ளது.
இந்த பெல்ட் டிரைவ் 7 ஆண்டுகள் அல்லது 70,000 கி.மீ. வரை ஆயுள் வழங்கும் என சுஸுகி கூறுகிறது. சார்ஜ் செய்வதற்கான ஆப்ஷன்களாக நிலையான சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை உள்ளன. போர்ட்டபிள் சார்ஜர் மூலம் வீட்டில் மற்றும் அலுவலங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 42 நிமிடங்கள் தேவைப்படும்.
அதுவே, DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சுமார் 2 மணி நேரம் 12 நிமிடங்களில் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். சுஸுகி நிறுவனம் தனது விற்பனை மற்றும் சேவை மையங்கள் அனைத்தையும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்றதாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதனால், 1,200க்கும் மேற்பட்ட அவுட்லெட்டுகளில் சுஸுகி எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கான AC சார்ஜிங் வசதி கிடைக்கிறது.
மேலும், 240க்கும் மேற்பட்ட சுஸுகி டீலர்ஷிப்களில் ஏற்கனவே DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் மற்ற டீலர்ஷிப்களுக்கு விரிவாக்கமும் நடைபெற்று வருகிறது. இவி வாங்குபவர்களுக்கு தடையில்லா அனுபவத்தை வழங்க சொந்தமான இவி தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்கும் பணிகளிலும் சுஸுகி ஈடுப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி இ-ஆக்ஸஸ், நீண்ட உழைப்பு, செயல்முறை சார்ந்த அம்சங்கள் மற்றும் பிரீமியம் தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, அன்றாட பயன்பாட்டிற்கான உயர் தர எலெக்ட்ரிக் வாகனமாக சந்தையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுஸுகி இ-ஆக்ஸஸ் ஆனது ஏத்தர் ரிஸ்டா, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஓலா எஸ்1 போன்ற ஸ்கூட்டர்களுடன் விற்பனையில் போட்டி போடும். அதன் பேட்டரி ஆயுள், பயன்படுத்த எளிதான அம்சங்கள் மற்றும் ஒட்டுமொத்த உழைப்புத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, போட்டி மிகுந்த சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








