1 லட்ச ரூபாயில் ஆவலுடன் எதிர்பார்த்த சுஸுகி ஸ்கூட்டர்! ஏப்ரல் 7இல் இருந்து ஷோரூம்களில் பார்க்கலாம்!
சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycles) நிறுவனம் அதன் புதிய 2026 பர்க்மேன் ஸ்ட்ரீட் (Burgman Street) ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. சுஸுகியின் மேக்ஸி-ரக ஸ்கூட்டராக மக்கள் மத்தியில் கவனத்தை பெற்ற பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் 2026ஆம் ஆண்டிற்கான புதிய தோற்றத்தில் புதிய வசதிகளுடன் களமிறக்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சத்து 1,944 என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) 2026 பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரூ.1,01,944 என்கிற விலையில் புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் ரைடு கனெக்ட் எடிஷன் (Ride Connect Edition) கிடைக்கும். இது உள்பட மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டரை சுஸுகி அறிமுகம் செய்துள்ளது.

மற்ற இரு வேரியண்ட்களாவன, இ.எக்ஸ் மற்றும் ரைடு கனெக்ட் டிஎஃப்டி எடிஷன் (Ride Connect TFT Edition) ஆகும். இதில், இஎக்ஸ் ஆனது பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேரியண்ட் ஆகும். அதில் எந்த அப்கிரேடும் வழங்கப்படவில்லை. இதனால், அதன் விலையும் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1,07,902 ஆக தொடர்கிறது. அதுவே, இந்த ஸ்கூட்டரின் புதிய டாப் வேரியண்ட்டான ரைடு கனெக்ட் டிஎஃப்டி எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,13,220 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 2026 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அனைத்து சுஸுகி மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப் ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பர்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் 124சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு SOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

முந்தைய வெர்சனில் சற்று திருத்தம் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜின் தற்போது அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய இயக்க ஆற்றல் 8.3 பிஎச்பி மற்றும் 10.2 என்.எம் டார்க் திறன் ஆகும். இதில் பிஎச்பி-இல் மாற்றமில்லை என்றாலும், டார்க் திறன் 0.4 என்.எம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் தற்போது குறைந்த வேகத்திலும், மிட் வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளதாக சுஸுகி தெரிவித்துள்ளது.
அதேபோல், என்ஜின் உடன் அப்டேட் செய்யப்பட்ட சிவிடி கியர்பாக்ஸ் (CVT Gearbox) இணைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களினால் ஸ்கூட்டரை மணிக்கு 30கிமீ-இல் இருந்து 60கிமீ வேகத்தில் செல்லும்போது மேம்படுத்தப்பட்ட பெர்ஃபார்மன்ஸை பெறலாம் என்கிறது சுஸுகி மோட்டார்சைக்கிள். மேலும், அப்டேட்டான பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் சற்று மாற்றியமைக்கப்பட்ட ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்பை விட அரை கிலோ எடை குறைந்த ஸ்கூட்டரின் அடிப்படையான இந்த ஃபிரேமின் வலிமை முன்பை விட 25% அதிகரித்துள்ளது. இதனால், ஸ்கூட்டரை ஹேண்டில் செய்வதும், இயக்குவதும் மேம்பட்டுள்ளதாக சுஸுகி குறிப்பிடுகிறது. சஸ்பென்ஷன் செட்-அப்பின் பாகங்கள் மாற்றப்படவில்லை என்றாலும், வாகனத்திற்கு கூடுதல் ஸ்டெபிலிட்டியை வழங்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
2026 பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் வழக்கம்போல் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது. இவற்றுடன், காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் (Combi-braking System) இடம்பெற்றுள்ளது. அதேபோல், ஸ்கூட்டரின் 12-இன்ச் சக்கரங்களிலும் மாற்றமில்லை. ஜப்பானிய 'ஸ்லீக் மாடர்ன்' என்கிற டிசைனில் புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு மார்க்கெட்டை உருவாக்கிய ஸ்கூட்டர்களுள் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் முக்கியமானது ஆகும். இதனாலேயே இதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறக்காமல் சுஸுகி அப்கிரேட் செய்துவிடுகிறது. அவ்வாறு தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள பர்க்மேன் ஸ்ட்ரீட் எந்த அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








