முற்றிலும் புதிய ஸ்கூட்டர் மாடல் ஒன்றை வெளியிடுகிறது சுஸூகி.. என்ன தெரியுமா?
ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான சுஸூகி இந்தியாவில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வெளியிடவுள்ளது. தற்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய இருசக்கர வாகன வெளியீடு தொடர்பான புதிய டீஸர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது அந்நிறுவனம். அது பைக்கா, ஸ்கூட்டரா, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இருசக்கர வாகனத்தின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனா அல்லது முற்றிலும் புதிய மாடலா என்பது குறித்த எந்தத் தகவல்களையும் அந்நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.
இன்ஸ்டாகிராமில் அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டிருக்கும் புகைப்படத்தில் ஒரு இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு மட்டும் காட்டப்பட்டிருக்கிறது. சுஸூகி எந்தவொரு தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இந்த முகப்பு விளக்குகளை வைத்தும், இதற்கு முன்னர் சுஸூகியின் திட்டங்கள் தொடர்பமாக நமக்குக் கிடைத்த தகவல்களை வைத்தும் இது என்ன வகையான மாடலாக இருக்கலாம் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. அது தொடர்பான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி புதிய ஸ்கூட்டர் மாடல் ஒன்றையே சுஸூகி வெளியிடவுள்ளது. பைக்குகளை விட ஸ்கூட்டர்களே இந்தியாவில் சுஸூகிக்கு அதிகம் விற்பனையாகும் ஒன்றாக இருந்து வருகின்றன. தற்போது அக்சஸ், அவெனிஸ் மற்றும் பர்க்மன் ஆகிய மூன்று ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது சுஸூகி. அந்நிறுவனம் பகிர்ந்திருக்கும் புகைப்படமானது இவற்றில் பர்க்மன் ஸ்கூட்டருடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டில் இந்திய ஸ்கூட்டர் சந்தையானது 125 சிசியில் இருந்து 150 சிசிக்கு மேலான மேக்ஸி ஸ்கூட்டர் வகையறாவுக்கு மேம்பட்டு வருகிறது. ஹீரோ, டிவிஎஸ் மற்றும் ஏப்ரிலியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் 150 சிசிக்கு மேலான மேக்ஸி ஸ்கூட்டர்களை வெளியிடுவதை நாம் பார்த்தோம். அந்த வரிசையில் சுஸூகியின் முதல் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக இந்தப் புதிய ஸ்கூட்டர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பர்க்மன் 125 ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கும் நிலையில், அதன் பெரிய இன்ஜின் கொண்ட வடிவமாக பர்க்மன் 150 அல்லது அதற்கு மேலான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் மாடலை சுஸூகி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸூகி பகிர்ந்திருக்கும் முகப்பு விளக்கு புகைப்படத்தினை பார்க்கும் போது, வெளிநாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் பர்க்மன் 400 அல்லது முன்னர் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட பர்க்மன் 200 ஸ்கூட்டர் மாடல்களின் சாயல் இருப்பது தெரிகிறது. மேற்கூறிய ஸ்கூட்டர்களில் இருப்பது போலான முகப்பு விளக்கு டிசைன் இல்லையென்றாலும், அதனையொத்த டிசைனைக் கொண்டிருக்கிறது புகைப்படத்தில் இருக்கும் முகப்பு விளக்கின் டிசைன்.
இதனால் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பர்க்மன் ஸ்கூட்டரை விட சற்று பெரிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை சுஸூகி வெளியிடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சந்தை நிலவரங்களும், போட்டிாளர்களும் அதற்கான தேவை இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. இந்தியாவில் சுஸூகியிடம் இருக்கும் மூன்று ஸ்கூட்டர்களில் பெரிய இன்ஜினைப் பெறுவதற்கான சிறந்த ஸ்கூட்டர் மாடலாக பர்க்மனே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை தற்போது சுஸூகி வெளியிட்டிருக்கும் புகைப்படம் பெரிய இன்ஜின் கொண்ட பர்க்மன் ஸ்கூட்டருக்கானதாக இல்லை என்றால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பர்க்மன் 125 ஸ்கூட்டரின் மேம்பட்ட வடிவத்திற்கானதாக இருக்கலாம். பர்க்மன் ஸ்ட்ரீட் 125 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டருக்கு புதிய டிசைன் மற்றும் அம்சங்களைக் கொடுத்து சுஸூகி அப்டேட் செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. சுஸூகி எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸூகியிடமிருந்து வாடிக்கையாளர்கள் தற்போது புதிய தயாரிப்பு ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அது பெரிய இன்ஜின் கொண்ட பர்க்மனாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பையே பெறும். சந்தையில் ஏற்கனவே 150 சிசி மேக்ஸி ஸ்கூட்டர்கள் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








