ரூ.2.02 லட்சத்தில் புதிய வண்ணத்தில் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ்! என்ன புதுசு?
சாகசப் பயணம் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற பைக்குகளை விரும்புபவர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் (V-Strom SX) தற்போது புதிய வண்ணத் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே என்ற இரட்டை வண்ணக் கலவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய வண்ணத்துடன் உடல் பகுதியில் புதிய கிராபிக்ஸ் டிசைனும் இடம்பெற்றுள்ளன. இதனால் ஏற்கனவே அட்வென்ச்சர் டூரர் தோற்றம் கொண்ட இந்த பைக், தற்போது சற்று ஸ்போர்ட்டியான தோற்றத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், வடிவமைப்பின் அடிப்படை அம்சங்கள் மாற்றப்படவில்லை. முன்புறத்தில் சுஸுகியின் தனித்துவமான பறவை அலகு போன்ற வடிவ அமைப்பு தொடர்கிறது.

இந்த புதிய வண்ணத் தே்ரவு ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சாம்பியன் யெல்லோ நம்பர் 2 - கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், பேர்ல் கிளேசியர் ஒயிட் - மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய நிறங்களுடன் இணைகிறது. புதிய வண்ணத் தேர்வும் மற்ற வண்ணத்தேர்வுகல் போன்றே அதே விலையில் கிடைக்கும்.
சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் பைக்கிற்கு ரூ.2,02,118 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், பைக்கை வாங்குபவர்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான ரைனாக்ஸ் (Rynox) ஆடை வவுச்சர் வழங்கும் சலுகையையும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 249 சிசி ஆயில்கூல்டு தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது 9,300 ஆர்பிஎம்மில் 26.5 எச்பி பவரையும், 7,300 ஆர்பிஎம்மில் 22.2 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
சாகசப் பயணத்தை கருத்தில் கொண்டு முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் வழங்கப்படட்டு இருக்கிறது. மேலும், 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால் மோசமான சாலைகள் மற்றும் ஆஃப்ரோடு பாதைகளில் பயணிக்கவும் இது உதவுகிறது. பாதுகாப்புக்காக முன்பக்கமும் பின்பக்கமும் டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
வசதிகளைப் பொறுத்தவரை எல்இடி விளக்குகள், சுஸுகி ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம், ப்ளூடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. சுஸுகி ரைடு கனெக்ட் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்கு விண்ட்ஸ்கிரீன், நக்கிள் கவர்கள், யூஎஸ்பி சார்ஜிங் வசதி மற்றும் பின்புற கேரியர் ஆகியவை கூடுதல் பயனுள்ளதாக இருக்கின்றன.
புதிய சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் பைக்கில் எஞ்சின், சேஸி, சஸ்பென்ஷன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் மாற்றம் இல்லை. இந்த புதிய வண்ணத் தேர்வு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கும். குறிப்பாக, பண்டிகை காலத்தில் புதிய அட்வென்ச்சர் ரக பைக் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த புதிய வண்ணத் தேர்வு கவரும் வகையில் அமைந்துள்ளது.
250 சிசி அட்வென்ச்சர் பைக் சந்தையில் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ், கேடிஎம் 250 அட்வென்ச்சர், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது. சிறந்த பயண வசதி, 19 அங்குல முன்பக்க சக்கரம், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கும் நீண்ட தூரப் பயணத்துக்கும் ஏற்ற அமைப்பு இதன் முக்கிய பலங்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications


