இந்தியாவில் மிகவும் கம்மி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பைக்குகள் இவை தான்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையானது உலகிலேயே மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தை என்றாலும், இங்கே விலை குறைவான பட்ஜெட் வாகனங்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதுவும் இருசக்கர வாகனப் பிரிவில் கேட்கவே வேண்டாம், குறைவான விலை கொண்ட பைக்குகள் தான் கிங். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் விலை குறைவான டாப் 5 பைக் மாடல்கள் எவை என்பதை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
5. பஜாஜ் பிளாட்டினா 100:
100 சிசி கம்யூட்டர் பைக்கானது இந்த பஜாஜ் பிளாட்டினாவில் 102 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கானது தற்போது ரூ.66,015 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஜிஎஸ்டி வரிக்குறைப்பிற்குப் பின்பு இதன் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜினானது 7.9 hp பவர் மற்றும் 8.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. விலை குறைவான பைக்காக மட்டுமில்லாமல் அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாகவும் இந்த பிளாட்டினா 100 இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
4. ஹோண்டா ஷைன் 100:
ஸ்ப்ளெண்டருக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட விலை குறைவான கம்யூட்டர் பைக் இந்த ஷைன் 100. இந்த பைக்கை ரூ.65,393 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. இந்தியாவில் குறைவான விலையைக் கொண்டிருக்கும் பைக் மாடல்களில் இந்த ஷைன் 100ம் ஒன்று.

இந்த பைக்கில் 7.38 hp பவர் மற்றும் 8.04 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 98.98 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கிலும் மைலேஜுக்குக் குறைவிருக்காது. சமீபத்தில் தான் சற்று கூடுதல் அம்சங்கள் கொண்ட ஷைன் 100 DX பைக்கை ஹோண்டா வெளியிட்டது.
3. ஹீரோ HF 100:
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே இன்ஜின் தான் இந்த HF 100 பைக்கிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஸ்ப்ளெண்டரை விடக் குறைவாக ரூ.59,839 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த கம்யூட்டர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைவான விலையிலும் சிறப்பான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கும் பைக்காக இது இருந்து வருகிறது.
மேலே கூறியது போல ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் இந்த HF 100 பைக்கிலும் உள்ளது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 7.9 hp பவர் மற்றும் 8.05 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
2. ஹீரோ HF டீலக்ஸ்:
ஹீரோவின் லைன்-அப்பில் விலை குறைவான மற்றொரு பைக் மாடல். HF 100-ன் இன்னொரு வெர்ஷன் என இதனைக் கூறலாம். இரண்டு பைக்குகளுக்கும் இடையில் கலர்கள் மற்றும் ஸ்டிக்கரிங்கில் மட்டுமே வேறுபாடு. ஆனால் HF 100-ஐ விட குறைவாக ரூ.56,657 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது HF டீலக்ஸின் ஆல்-பிளாக் வேரியன்ட்.
இன்ஜின் அதே 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு தான். HF 100 மற்றும் ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸுடன் ஒப்பிடும் போது பவர் மற்றும் டார்க் அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. மிகவும் குறைவான விலையில் ஸ்மூத்தான இன்ஜின் கொண்ட பைக் வேண்டும் என்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
1. டிவிஎஸ் ஸபோர்ட் ES:
இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான பைக் மாடல் என்றால் அது இது தான், டிவிஎஸ் ஸ்போர்ட். ES என்பது எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என்பதைக் குறிக்கிறது. முன்னர் 100 சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டு வந்தத நிலையில், தற்போது அது 109.7 சிசியாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கை ரூ.55,500 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் நாம் வாங்க முடியும்.
இதன் 109.7 சிசி இன்ஜினானது 8.3 hp பவர் மற்றும். 8.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் ஃப்யூல் இன்ஜெக்ஷன் கொடுக்கப்பட்டிருப்பதால், அதிக மைலேஜ் தரும் டிவிஸ் பைக்குகளில் ஒன்றாகவும் இந்த ஸ்போர்ட் ES மாடல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை குறைவாக இருப்பதனால் தரம் எப்படி இருக்குமோ என இந்த பைக்குகள் குறித்து நினைக்க வேண்டும். குறைவான விலையைக் கொண்டிருந்தாலும் தரமான பைக்குகளாக இருப்பதனாலேயே சந்தையில் இன்னும் தாக்குப் பிடித்து வருகின்றன. மேலும், குறைவான விலைக்கேற்ப இந்த பைக்குகளின் பராமரிப்புச் செலவு மற்றும் பயன்பாட்டுச் செலவும் மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதனால் இவற்றை வாடிக்கையாளர்கள் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








