எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறதுக்கு முன்ன இதையெல்லாம் செக் பண்ணுங்க.. இல்லைனா கஷ்டம் தான்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இப்போது மக்களின் முதன்மை வாகனமாக மாறி வருகின்றன. இது வரை எரிபொருள் ஸ்கூட்டர்களையே பயன்படுத்தி வந்த பலரும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க முன்வருவதைப் பார்க்க முடிகிறது. எரிபொருள் ஸ்கூட்டர்கள் பல ஆண்டுகளாக விற்பனையில் இருப்பதால் எந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதில் நம்மிடம் ஒரு தெளிவு இருக்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அப்படி இல்லை.
எரிபொருள் ஸ்கூட்டர் மாடல்களைப் பொறுத்தரை இன்ஜின் மிகவும் முக்கியம். ஸ்மூத்தான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்கள் எவை என்பது அனைவரும் அறிந்ததே. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அப்படி அல்ல, குறிப்பிட்ட சில விஷயங்களைப் பார்த்துத் தான் வாங்க வேண்டும். அப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கும் போது எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இங்கேநாம் பார்க்கலாம்.

ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கும் முன் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அதன் ரேஞ்சு. பெட்ரோலுக்கு எப்படி மைலேஜோ அதைப் போல எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரேஞ்சு. மைலேஜ் குறைவாக இருந்தால் கூட பணம் தான் கூடுதலாக செலவாகுமே தவிர நடுரோட்டில் ஸ்கூட்டர் நின்று நாம் சங்கடப்படும் நிலை வராது. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. எனவே அதனை முதலில் பார்க்க வேண்டும்.
குறைந்தபட்சமாக 100 கிமீ முதல் 150 கிமீ வரையிலான ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றன. நாம் பேசிக் கொண்டிருப்பது அனைத்து தரப்பினரும் வாங்கும் விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களைப் பற்றி மட்டுமே. அதிக விலையில் அதிக ரேஞ்சு கொண்ட ஸ்கூட்டர்களும் விற்பனையில் இருக்கின்றன. பட்ஜெட் கவலையில்லை என்பவர்கள் அதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

ரேஞ்சு என்று சொல்லும் போது நிறுவனங்கள் குறிப்பிடும் IDC ரேஞ்சு அல்லது பிற சான்றளிக்கப்பட்ட ரேஞ்சுகளைப் பார்க்கக்கூடாது. அதன் உண்மையான ரேஞ்சு என்ன என்பதை ஏற்கனவே அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களைக் கேட்டு நாம் தெரிந்து கொள்ளலாம். இல்லையெனில் பலரும் தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அனுபவங்களை இணையத்தில் பகிர்கிறார்கள், அதனை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவதாக பேட்டரிக்கான வாரண்டி. ஒரு எரிபொருள் ஸ்கூட்டரின் முக்கியமான அம்சம், பாகம் எல்லாமே இன்ஜின் தான். இன்ஜினில் பிரச்சினை வந்தால் ஸ்கூட்டரே வேஸ்ட் தான் என்று நமக்குத் தெரியும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அது போலத் தான் பேட்டரி. ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிகவும் காஸ்ட்லியான பாகமும் பேட்டரி தான். பேட்டரி எவ்வளவு காலத்திற்கு உழைக்கிறதோ அது தான் ஸ்கூட்டரின் மதிப்பையும் தீர்மானிக்கும்.
பேட்டரி நல்லதா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? அது முடியாது தான். மற்றவருக்கு நன்றாக வேலை செய்யும் பேட்டரி கூட நாம் வாங்கும் ஸ்கூட்டரில் பிரச்சினை செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அதிக பேட்டரி வாரண்டி கொடுக்கும் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்ய வேண்டும். ஸ்டாண்டர்டாக மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வாரண்டியையும், கூடுதல் தொகைக்கு எட்டு ஆண்டுகள் வரையிலான பேட்டரி வாரண்டியையும் நிறைய நிறுவங்கள் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான சார்ஜிங் கட்டமைப்பு. எரிபொருள் ஸ்கூட்டர்களைப் போல பெட்ரோலை பாட்டிலில் வாங்கி வந்தெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஊற்ற முடியாது. எனவே அதனை முறையாக சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, வீட்டிலும், நாம் வசதிக்கும் இடத்திற்கு அருகிலும் இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான ஸ்கூட்டர்களில நிலையான பேட்டரியையே நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன. அப்படியென்றால் ஸ்கூட்டரை பார்க் செய்துவிட்டு அதிலேயே தான் நாம் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். எனவே ஸ்கூட்டரை நீண்ட நேரத்திற்கு முறையாக பார்க் செய்ய நம் வீட்டஞில் இடவசதி இருக்கிறதா, பார்க் செய்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக சார்ஜ் செய்ய வழி இருக்கிறதா, பார்க் செய்யும் இடம் மழை வெயில் படாமல் மூடியிருக்கும் வகையில் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே போல் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றவா என்பதையும் பார்க்க வேண்டும். பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. கிராப்புறங்களில் அல்லது சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் உங்கள் ஊரில் சார்ஜிங் ஸ்டேஷன் குறித்த தகவல்களை ஸ்கூட்டரை வாங்கும் முன்பே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால், அனைத்து நேரமும் வீட்டில் சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடைசி மற்றும் மிகவும் முக்கியமான விஷயம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உங்கள் பிராண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சர்வீஸ் செண்டர் இருக்க வேண்டியது அவசியம். எரிபொருள் ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருப்பதால் அருகே கிடைக்கும் மெக்கானிக்கை வைத்து சரி செய்து கொள்ளலாம். மேலும் அவை மெக்கானிக்கல் ஸ்கூட்டர்கள் என்பதால் பிரச்சினைகளை எளிதாக சரி செய்து விட முடியும்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அப்படி. அதில் நகரும் பாகங்கள் குறைவு தான் என்றாலும் சிறிய ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டால் கூட ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், அதில் என்ன பிரச்சினை என்பதை அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டர் ஊழியர்களாலேயே எளிதாகக் கண்டறிய முடியும். எனவே சர்வீஸ் செண்டர் குறித்து பார்க்க மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்துவிடாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தத் தகவல்களை எல்லாம் தெரிந்து கொண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினீர்கள் என்றால், அதன் பயன்பாட்டு அனுபவம் சிறப்பான ஒன்றாக இருக்கும். இல்லையெனில் ஏதாவது ஒரு கட்டத்தில் மேலே கூறியது போல சங்கடப்பட்டு நிற்க நேரலாம். இந்தத் தகவல்களைப் பின்பற்றி சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications