ஜூலை விற்பனையில் இந்தியாவின் டாப்-10 பைக் மாடல்கள்... கொடிகட்டி பறக்கும் ஸ்பிளென்டர்!!

கடந்த ஜூலை மாதத்தில் இந்திய பைக் சந்தையில் கம்யூட்டர் எனப்படும் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற சாதாரண வகை மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளாக விற்பனையில் முன்னிலை வகித்து வரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் மீண்டும் போட்டியாளர்களை விற்பனையில் பெரிய வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில், டிவிஎஸ் அப்பாச்சி மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, புல்லட் 350 ஆகியவை ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளதும் இந்த பட்டியல் மூலமாக தெரிய வருகிறது.

கடந்த மாதம் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள்களின் பட்டியலை பார்க்கும்போது, மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் தினசரி பயன்பாடு ஆகியவற்றுக்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெளிவாக தெரிகிறது. அதே சமயம், 350cc பிரீமியம் பைக்குகளுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Hero Splendor

1. ஹீரோ ஸ்பிளென்டர்

ஜூலை மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்தான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் பைக் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் 3,35,346 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,46,715 யூனிட்கள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 88,631 யூனிட்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 36 சதவீதம் கூடுதலாகி உள்ளது.

Also Read

இந்திய பைக் சந்தையில் ஸ்பிளெண்டரின் ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்பதற்கு இந்த எண்ணிக்கை சாட்சியாக அமைந்துள்ளது. அதிக மைலேஜ், எளிதான கையாளுமை, நம்பகமான எஞ்சின், சரியான பட்ஜெட், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பரந்து விரந்த சர்வீஸ் நெட்வொர்க் போன்றவை இந்த பைக்கிற்கு வலு சேர்த்து வருகின்றன.

Honda Shine

2. ஹோண்டா ஷைன்

இரண்டாவது இடத்தை ஹோண்டா ஷைன் பைக் பிடித்துள்ளது. ஜூலை மாதத்தில் 1,91,950 ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவான 1,59,658 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, இந்த முறை விற்பனை 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஸ்பிளெண்டருக்கு அடுத்தபடியாக ஷைன் தொடர்ந்து வலுவான வாடிக்கையாளர் ஆதரவை பெற்றுள்ளது. மென்மையான ஓட்டுதல் சுகத்தை தரும் எஞ்சின், அதிக மைலேஜ் போன்றவை இந்த பைக்கிற்கு சிறப்பான விற்பனையை தொடர்ந்து பெற்றுத் தருகிறது.

3. பஜாஜ் பல்சர்

அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையிலும், டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் சிறப்பான மதிப்பை தரும் மாடலாக பல்சர் விளங்குகிறது. கடந்த மாத விற்பனை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பல்சர் வரிசையில் பல மாடல்கள் விற்பனையாகும் நிலையில், மொத்த விற்பனை 66,156 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Also Read

அதாவது, விற்பனை பட்டியலில் இடத்தை தக்க வைத்திருந்தாலும், வளர்ச்சி அடிப்படையில் பல்சருக்கு ஜூலை மாதம் சிறப்பானதாக அமையவில்லை. புதிய மாடல்கள் வருகை குறித்த செய்தி காரணமாக, சிறிது தொய்வு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில், தற்போது புதிய பல்சர் பைக் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டிசைனில் மாற்றங்களுடன், புதிய சேஸி, எல்இடி ஹெட்லைட், டிஎஃப்டி கன்சோல் உள்ளிட்டவற்றுடன் பல்சர் பைக்குகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TVS Apache

4. டிவிஎஸ் அப்பாச்சி

நான்காவது இடத்தை டிவிஎஸ் அப்பாச்சி பைக் மாடல் பிடித்துள்ளது. கடந்த மாதம் 59,404 அப்பாச்சி பைக் மாடல்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 37,566 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதன் மூலம் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை 58 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. செயல்திறன் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் விரும்பும் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைந்து வருகிறது.

5. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

கடந்த மாதம் விற்பனையில் ஐந்தாவது இடத்தில் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 55,978 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது இதன் விற்பனை 21.68 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, ஒரே நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், எச்எஃப் டீலக்ஸ் சரிவை சந்தித்துள்ளது. இன்னமும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த பட்ஜெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

RE Classic 350

6. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350

கடந்த மாதம் விற்பனைப் பட்டியலில் ஆறாவது இடத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் உள்ளது. கடந்த மாதத்தில் 39,197 க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் 26,516 யூனிட்கள் விற்பனையாகி இருந்தன. இதனை ஒப்பிடும்போது 48 சதவீதம் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கம்யூட்டர் பைக்குகள் ஆதிக்கம் செலுத்தும் பட்டியலில் 350cc பைக் இவ்வளவு வலுவாக இருப்பது கவனிக்கத்தக்கது. பார்த்தவுடனே பிடித்துப்போகும் ஆஜானுபாகுவான தோற்றம், தனித்துவமான சைலென்சர் சப்தம் உள்ளிட்டவற்றுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

7. ஹோண்டா யூனிகார்ன்

கடந்த மாதம் ஹோண்டா சிபி யூனிகார்ன் பைக் 35,007 யூனிட்டுகளுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் விற்பனை கடந்த ஜூலையுடன் ஒப்பிடும்போது, 14.51 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தையில் நீண்டகாலமாக இருந்தாலும், பல்சர் பைக் போன்று இதன் பாரம்பரியமான அலட்டல் இல்லாத டிசைன், மென்மையான எஞ்சின், சிறந்த மைலேஜ் போன்றவை தொடர்ந்து இந்த பைக்கிற்கு சிறப்பான விற்பனையை பெற்றுத் தருகிறது.

TVS Raider

8. டிவிஎஸ் ரெய்டர்

பட்ஜெட் விலையில் சிறந்த பைக்கை வாங்க விரும்பும் இளைஞர்களுக்கு டிவிஎஸ் ரெய்டர் நம்பர்-1 தேர்வாக இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் 34,125 டிவிஎஸ் ரெய்டர் பைக்குகள் விற்பனையாகி எட்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையை விட டிவிஎஸ் ரைடர் பைக்கின் விற்பனை 39.22 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9. பஜாஜ் பிளாட்டினா

குறைவான பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் பைக் மாடலை விரும்புவோருக்கு டிவிஎஸ் பிளாட்டினா சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மேலும், மோசமான சாலைகள் இருக்கும் கிராமப்புறங்களில் கூட பயன்படுத்துவதற்கு ஏதுவான மாடலாக பெயர் பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் ஒன்பதாவது இடத்தில் பஜாஜ் பிளாட்டினா உள்ளது. ஜூலையில் 27,421 யூனிட்டுகள் விற்பனையானாலும், கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது 6.81 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

10. ராயல் என்ஃபீல்டு புல்லட் 350

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 26,245 யூனிட்டுகள் விற்பனையான இந்த மோட்டார்சைக்கிள், கடந்த ஆண்டு ஜூலையைவிட 65.61 சதவீத கூடுதல் வளர்ச்சியுடன் பட்டியலில் வேகமாக வளர்ந்து வரும் மாடலாக மாறியுள்ளது. பாரம்பரியமும், கம்பீரமும் மிக்க டிசைனும், சைலென்சர் சப்தமும் இந்த பைக்கிற்கு சிறப்பான விற்பனையை கொடுத்து வருகிறது.

Article Published On: Tuesday, August 25, 2026, 9:19 [IST]
English summary
Top 10 best selling bikes july 2026 splendor shine pulsar
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X