ஸ்கூட்டர்களின் 'கிங்' என மீண்டும் நிரூபித்த ஹோண்டா ஆக்டிவா.. அடிச்சு தூள் கிளப்பிடுச்சு
இந்தியாவில் சில காலத்திற்கு முன்பு வரை ஸ்கூட்டர் இரண்டாவது வாகனமாகவே கருத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி, முதன்மையான வாகனமாகவே ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதற்கு தனியே எந்தக் காரணமும் நாம் தேடத் தேவையில்லை. பைக்குகளை விட அனைத்து வகையும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனங்களாகவே ஸ்கூட்டர்கள் இருந்து வருகின்றன.
அடுத்த சில ஆண்டுகளில் பைக்குகளை விட அதிக ஸ்கூட்டர்கள் விற்பனையாகத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. சரி, தற்போது கடந்த மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்கள் குறித்த தரவுகள் வெளிாகியிருக்கின்றன. கடந்த மாதம் எந்தெந்த ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையில் எந்தெந்த இடங்களைப் பிடித்திருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்கள் என்று குறிப்பிடும் போதே, எந்த ஸ்கூட்டர் முதலிடத்தில் இருக்கும் என்பதனை கண்களை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். ஆம், அது ஹோண்ட ஆக்டிவாவே தான். பைக்குகளில் எப்படி ஸ்ப்ளெண்டரின் விற்பனையை எந்த பைக்காலும் நெருங்க முடியவில்லையோ, அதேபோல் ஸ்கூட்டர்களில் ஆக்டிவா முதலிடத்தை ஆட்சி செய்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் சுமார் 2.59 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது ஹோண்டா. இது 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 36.86% அதிகமாகும். 2025 மார்ச்சில் 1.89 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களையே ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் வழக்கம் போல டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுஸூகி அக்சஸ் ஆகிய ஸ்கூட்டர் மாடல்கள் உள்ளன. ஜூப்பிட்ட மாடலானது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 17.89% அதிகமாக மார்ச் மாதம் 1.24 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. அதேபோல் அக்சஸ் மாடலானது 9.49% அதிகமாக 72,658 யூனிட்டுகள் அதிகமாக விற்பனையாகியிருக்கின்றன.
நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் டிவிஎஸ்ஸின் ஐக்யூப் மற்றும் பஜாஜின் சேட்டக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டாப் 10 இடங்களில் கூட வராமல் இருந்தன. தற்போது டாப் 10 பட்டியலில் நிரந்தரமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 46.26% அதிகமாக 38,757 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது.
அதேபோல், சேட்டக் ஸ்கூட்டரானது 18.75% அதிகமாக 34,416 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. ஆறாவது இடத்தில் டிவிஎஸ்ஸின் ஸ்போர்ட்டியான என்டார்க் ஸ்கூட்டர் உள்ளது. இது இந்த டாப் 10 பட்டியில் டிவிஎஸ்ஸின் மூன்றாவது ஸ்கூட்டர் மாடலாகும். கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 48.52% அதிகமாக கடந்த மார்ச் மாதம் 32,598 என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன.
கடைசி நான்கு இடங்களில், ஹோண்டா டியோ, சுஸூகி பர்க்மன், யமஹா ரேZR மற்றும் ஹீரோ டெஸ்டினி ஆகிய நான்கு ஸ்கூட்டர்களும் முறையே ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்தப் பட்டியலில் டியோ ஸ்கூட்டர் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது அதிகபட்சமாத 85.25% விற்பனை உயர்வைச் சந்தித்திருக்கிறது. மார்ச் மாதம் 31,180 டியோ ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹோண்டா.
இந்த டாப் 10 பட்டியலில் கடந்தாண்டோடு ஒப்பிடும் போது விற்பனை குறைந்த ஒரேயொரு ஸ்கூட்டர் மாடல் என்றால் அது சுஸூகியின் பர்க்மன் தான். எட்டாம் இடத்தில் இருக்கும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை 13.87% குறைந்து கடந்த மார்ச் மாதம் 26,889 யூனிட்டுகளாக உள்ளது. இந்தப் பட்டியலில் இருக்கும் ஒரேயொரு யமஹா ஸ்கூட்டரான ரேZR, 25,798 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. இது 77.79% விற்பனை உயர்வாகும்.
பத்தாவது இடத்தில் ஹீரோவின் டெஸ்டினி மாடல் உள்ளது. பைக்கில் கிங்காக இருந்தாலும், ஸ்கூட்டர்களில் இப்போது தான் வளர்ந்து வரும் நிறுவனமாக இருக்கிறது ஹீரோ. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் குறைவாகவே டெஸ்டினி ஸ்கூட்டர் விற்பனையாகி வந்தது. ஆனால், கடந்தாண்டு இதனை கிளாஸியான டிசைனுடன் அந்நிறுவனம் அப்டேட் செய்த பிறகு விற்பனை உயர்ந்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 53.96% கூடுதலாக 24,177 யூனிட்டுகள் என்ற விற்பனையைப் பதிவு செய்துள்ளது ஹீரோ டெஸ்டினி. இதுவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15,703 டெஸ்டினி ஸ்கூட்டர்களை மட்டுமே ஹீரோ விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்த ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 29.61% வரை உயர்ந்திருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே வீட்டில் இரண்டு பைக்குகள் வாங்குவார்களா எனத் தெரியாது. ஆனால் ஒரு வீட்டில் இப்போது எல்லாம் இரண்டு ஸ்கூட்டர்களைக் கூட யோசிக்காமல் வாங்குகிறார்கள். பிராக்டிகலான வாகனமாக இருக்கும் ஒன்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், அனைவருமே பயன்படுத்தலாம் என்பது. 18 வயதுடையவர்கள் தொடங்கி, பெண்கள், முதியவர்கள், ஆண்கள் என அனைவரும் பயன்படுத்தும் வாகனமாக இருப்பதும் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








