குறைவான விலையில் ABS வசதி கொண்ட டாப் 5 பைக் மாடல்கள் இவை தான்!
டூவீலர்களுக்கான முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று அதன் பிரேக்கிங் செட்டப். தற்போதைய நிலையில் மேம்பட்ட பிரேக்கிங் பெர்ஃபாமன்ஸை வழங்குபவை ABS தான். ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System) என்பதன் சுருக்கம் தான் ABS. அதிக வேகத்தில் செல்லும் போது பிரேக்கை அழுத்தினாலும் வீக் லாக் ஆவதைத் தடுத்து, அதன் மூலம் ஸ்லிப் ஆகிய விபத்து ஏற்படுவதைத் தடுப்பதுடன், விரைவாக பைக்கை நிறுத்தத்திற்கு கொண்டு வரவும் ABS உதவுகிறது.
பைக்குகளில் தற்போது டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வகையான பிரேக்கிங் செட்டப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் டிஸ்க் பிரேக் செட்டப்புடனேயே ABS வசதி கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட அனைத்து பைக்குகளிலும் சிங்கிள் சேனல் ABS வசதி கட்டாயமாகக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சில நிறுவனங்கள் 125 சிசிக்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் மாடல்களிலும் ABS வசதியைக் கொடுத்திருக்கின்றன.

ஒரு பைக்கின் இரண்டு பக்க வீல்களிலும் ABS வசதி இருந்தால் அது டூயல் சேனல் ABS எனவும், ஒரு பக்கம் மட்டும் இருந்தால் அது சிங்கிள் சேனல் ABS எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு பக்கம் கொண்ட பைக்குகளில் அது முன்பக்க வீலிலேயே கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது குறைவான விலையில் ABS வசதியுடன் நாம் வாங்க முடிகிறத டாப் 5 பைக் மாடல்களைப் பார்க்கலாம்.
1. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R
மிகவும் குறைவான விலையில் ABS வசதி கொண்ட பைக்கை நீங்கள் வாங்க நினைத்தால் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக் தான் உங்களுக்கான ஒரே சாய்ஸ். ரூ.93,500 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் சிங்கிள் சேனல் ABS வசதி கொண்ட எக்ஸ்ட்ரீம் 125R பைக்கை நாம் வாங்க முடியும். 125 சிசி பிரிவில், நல்ல மைலேஜைக் கொடுப்பதுடன், ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட ஒரு பைக் மாடலாக இந்த எக்ஸ்ட்ரீம் 125R இருந்து வருகிறது.

2. டிவிஎஸ் ரெய்டர் 125
டிவிஎஸ்ஸின் ஸ்போர்ட்டி கம்யூட்டர் பைக் இந்த ரெய்டர் 125. இதன் ABS வசதி கொண்ட பைக் மாடலை ரூ.95,225 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி நாம் வாங்கலாம். மேலும், இந்த ABS வசதி கொண்ட மாடலின் பின்பக்கமும் டிஸ்க் பிரேக்கையே டிவிஎஸ் கொடுத்துள்ளது. இது பாதுகாப்பிற்கு கூடுதல் உத்தரவாதம் அளிப்பதாக இருக்கிறது. இத்துடன் TFT டிஸ்பிளே வசதி கொண்ட வேரியன்டை ரூ.97,050 என்ற விலையிலேயே நாம் வாங்க முடியும்.
3. பஜாஜ் பல்சர் NS125
ஸ்போர்ட்டியான மற்றும் ஸ்டைலான பல்சர் NS125 பைக்கின் டாப் எண்டான LED BT ABS வேரியன்டிலேயே ABS வசதியைக் கொடுத்திருக்கிறது பஜாஜ். இந்த வேரியன்டானது ரூ.99,073 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ABS மட்டுமின்றி, LED விளக்குகள் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்களையும் இந்த NS125 பைக் கொண்டுள்ளது. NS160 மற்றும் NS200 வரிசையில் சிறிய இன்ஜின் கொண்ட பைக் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது பஜாஜ் பல்சர் NS125.
4. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V
125 சிசி இன்ஜின் கொண்ட எக்ஸ்ட்ரீம் பைக்கிலேயே ABS வசதியை ஹீரோ கொடுத்திருக்கும் போது, 160 சிசி இன்ஜின் கொண்ட எக்ஸ்ட்ரீம் பைக்கில் கொடுக்காமல் இருக்குமா என்ன. ரூ.1.05 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கும் எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் தொடங்கி ABS வசதி கொடுக்கப்படுகிறது. 150 சிசி பிரிவிலேயே ABS வசதியுடன் குறைவான விலையைக் கொண்டிருக்கும் பைக் மாடல் இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V தான்.
5. பஜாஜ் பல்சர் 150 மற்றும் யமஹா FZ Fi
கிளாஸியான பல்சர் 150 பைக் மாடலின் அடிப்படை வேரியன்டில் தொடங்கியே ABS வசதியைக் கொடுத்து வருகிறது பஜாஜ். அதேபோல் யமஹாவின் FZ Fi பைக்கிலும் சிங்கிள் சேனல் ABS வசதி ஸ்டாண்டர்டாகவே அடிப்படை வேரியன்டில் தொடங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பைக் மாடல்களுமே ரூ.1.10 லட்சம் தொடக்க விலையையே கொண்டிருக்கின்றன. எனவே தான் ஐந்தாம் இடத்தை இரண்டு பைக் மாடல்களும் பகிர்ந்து கொண்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைக்கு இவையே குறைவான விலையில் ABS வசதி கொண்ட பைக் மாடல்களாக இருக்கலாம். விரைவில் 100 சிசி பைக்குகளுக்கும் கூட ABS வசதியை நிறுவனங்கள் கொடுக்கத் தொடங்கலாம். அல்லது அரசே அதனை அனைத்து பைக்குகளிலும் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாம்.
2026 ஜனவரி 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் சிங்கிள் சேனல் ABS வசதி கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என அறிவித்தது மத்திய அமைச்சகம். ஆனால், பல்வேறு காரணங்களினால் இதனை செயல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த சில ஆண்டுகளுக்குள் அமைச்சகம் அறிவித்தாலும் இல்லையென்றாலும் நிறுவனங்களே ABS வசதியை அனைத்து இருசக்கர வாகனங்களிலும் கொடுக்கத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








