ரொம்ப கம்மி விலையில் 'இந்த' வசதி இருக்க பைக் மாடல் எதுன்னு தெரியுமா.. இங்க பாருங்க!
முன்னதாக விலையுயர்ந்த, பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதி தற்போது சிறிய இன்ஜின் கொண்ட பட்ஜெட் பைக்குகளிலும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பைக்கின் ஆக்சிலரேட்டரை முறுக்காமலேயே நிலையான வேகத்தில் தொடர்ந்து பைக்கை செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வசதி தான் க்ரூஸ் கண்ட்ரோல்.
ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் போது இதனை ஆன் செய்து விட்டால், பைக் தொடர்ந்து அதே வேகத்திலேயே செல்லும். நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரப் பயணம் செய்யும் போது இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் தற்போது குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட டாப் 5 பைக் மாடல்கள் எவை எனப் பார்க்கலாம்.

5. டிவிஎஸ் அப்பாச்சி RTR 310
மேலே நாம் பார்த்த RR 310 பைக் மாடலின் ஸ்ட்ரீட் நேக்கட் வெர்ஷன் தான் இந்த RTR 310. எனவே இந்த பைக்கிலும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை டிவிஎஸ் கொடுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்த ஸ்ட்ரீட் நேக்கட் 310 சிசி பைக் மடாலை ரூ.2.23 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். RR 310 பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் இன்ஜினே அதே பெர்ஃபாமன்ஸுடன் RTR 310 பைக்கிலும் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
4. டிவிஎஸ் அப்பாச்சி RTX
கடந்தாண்டு டிவிஎஸ் வெளியிட்ட அட்வென்சர் பைக் மாடல் இந்த அப்பாச்சி RTX. டிவிஎஸ் லைன்-அப்பில் குறைவான விலையில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியைக் கொண்டிருக்கும் பைக் மாடல் இது தான். இந்த பைக்கை ரூ.1.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். 299 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கொண்ட இந்த பைக் மாடலில் ரைடிங் மோடுகள், ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஆல்டர் ABS உள்ளிட்ட மேம்பட்ட ரைடிங் அம்சங்களையும் டிவிஎஸ் கொடுத்துள்ளது.

3. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V
எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் மாடலின் டாப் எண்டு வேரியன்டில் மட்டும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியைக் கொடுத்துள்ளது ஹீரோ. இந்த டாப் எண்டு வேரியன்டை ரூ.1.34 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். 150 சிசி முதல் 200 சிசிக்குள்ளான பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பைக்குகளிலேயே க்ரூஸ் கண்ட்ரோல் வசதியைக் கொண்டிருக்கும் ஒரே பைக் மாடல் இந்த எக்ஸ்ட்ரீம் 160R 4V தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R
125 சிசி பிரிவில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியைக் கொண்டிருக்கும் இரண்டு பைக்குகளில் ஒன்று இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R. இந்த பைக் மாடலின் டாப் எண்டு வேரியன்டில் மட்டுமே க்ரூஸ் கண்ட்ரோல் வசதி உள்ளது. இந்த டாப் எண்டு வேரியன்டானது ரூ.1.07 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்த்து டூயல் சேனல் ABS, ரைடு-பை-வயர் திராட்டில் மற்றும் ரைடிங் மோடுகள் ஆகிய வசதிகளும் இந்த வேரியன்டில் உள்ளன.
1. ஹீரோ கிளாமர் X
இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட பைக் மாடல் ஹீரோவின் கிளாமர் X தான். கம்யூட்டர் பைக் மாடலான இது ரூ.86,567 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லிட்டருக்கு 65 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் இந்த பைக் மாடலில் 124.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான தூரப் பயணங்களுக்கு க்ரூஸ் கண்ட்ரோல் பெரிதாக தேவைப்படாது என்றாலும், இந்த வசதி பைக்கில் இருப்பதனால் குறையேதும் இல்லை. மேலும், காலத்திற்கு ஏற்ற வகையில் பைக்குகள் மேம்பட்டுத் தான் ஆக வேண்டும். எனவே கம்யூட்டர் பைக்குகளிலும் இது போன்ற சொகுசு அம்சங்களை நிறுவனங்கள் கொடுக்கத் தொடங்குவதை வரவேற்கத்தக்கதாகவே நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








