அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட டாப் 5 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இவை தான்!
ஒரு வாடிக்கையாளர் பைக்கை விட்டு விட்டு ஸ்கூட்டரை வாங்குவதற்கு நிறைய காரணங்கள் இருக்கும். அதில் முக்கியமான காரணமாக ஸ்கூட்டரின் பிராக்டிகாலிட்டியே இருக்கும். அனைத்து வகையான பயன்பாடுகளுக்கும், அனைத்து நேரங்களிலும் மிகவும் பிராக்டிகலான ஒரு வாகனமாக ஸ்கூட்டர் இருக்கும். ஸ்கூட்டர்களை அப்படி பிராக்டிகலாக மாற்றுவதில் அண்டர்சீட் ஸ்டோரேஜ் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக அண்டர்சீட் ஸ்டோரேஜுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எரிபொருள் ஸ்கூட்டர் மாடல்களை இங்கே பார்க்கலாம்.
1. டிவிஎஸ் ஜூப்பிட்டர்
இந்தியாவிலேயே அதிக அண்டர்சீட் ஸ்டோரேஜ் கொண்ட எரிபொருள் ஸ்கூட்டர் என்றால் அது டிவிஎஸ்ஸின் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் தான். இது 33 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்கூட்டரை விட சுமார் 11 லிட்டர் கூடுதல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது ஜூப்பிட்டர். இதற்குக் காரணம் பெட்ரோல் டேங்க்கை ஃப்ளோர் போர்டுக்கு கீழே டிவிஎஸ் மாற்றியது தான். இதன் மூலம் எரிபொருள் நிரப்பும் மூடியையும் ஸ்கூட்டரின் முன்பக்கமே ஜூப்பிட்டரில் டிவிஎஸ் கொடுத்துள்ளது.

இவையெல்லாம் சேர்ந்து ஜூப்பிட்டரை இன்னும் பிராக்டிகலான ஒரு வாகனமாக மாற்றுகின்றன. இந்தியாவில் ஜூப்பிட்டர் 110 ஸ்கூட்டரை ரூ.79,835 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரை ரூ.86,550 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் தொடங்கி விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். அண்டர்சீட் ஸ்டோரேஜ் தான் உங்களது முதல் சாய்ஸ் என்றால் ஜூப்பிட்டர் தான் உங்களுக்கான ஸ்கூட்டர்.
2. யமஹா ஏராக்ஸ் 155
இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதிலேயே விலை உயர்ந்த மாஸ் மார்க்கெட் ஸ்கூட்டரான யமஹா ஏராக்ஸ் தான் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டரில் 24.5 லிட்டர் அண்ட்ர்சீட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அண்டர்சீட் ஸ்டோேஜை மட்டும் வைத்து பிராக்டிகலான ஸ்கூட்டராக ஏராக்ஸைக் கூற முடியாது.

இந்த ஸ்கூட்டரில் ஃப்ளோர் போர்டு கிடையாது. எனவே ஸ்கூட்டர் வகையறாவைச் சேர்ந்திருந்தாலும், பிராக்டிகாலிட்டி என்று வரும் போது ஒரு பைக்கிற்கானதையே கொண்டிருக்கிறது, அண்டர்சீட் ஸ்டோரேஜைத் தவிர என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை ரூ.1.40 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
3. சுஸூகி அக்சஸ்
125 சிசி பிரிவில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் மாடலான சுஸூகி அக்சஸ் 24.4 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிராக்டிகலான, அதே நேரம் ஸ்டைலான ஒரு ஸ்கூட்டர் என்ற பட்டியலை எடுத்தால் அதில் முன்னணியில் இந்த அக்சஸ் 125 ஸ்கூட்டர் இருக்கும். ரூ.82,900 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படும் இந்த ஸ்கூட்டர் மாடல், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் முதல் மூன்று ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
4. டிவிஎஸ் என்டார்க்
பட்ஜெட் விலையில், கூடுதல் அண்டர்சீட் ஸ்டோரேஜுடன் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்கள் டிவிஎஸ்ஸின் என்டார்க்கைத் தேர்ந்தெடுக்கலாம். 22 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜுடன், என்டார்க் 125 ஸ்கூட்டரானது ரூ.83,750 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும், என்டார்க் 150 ஸ்கூட்டரானது ரூ.1.10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஸ்கூட்டர்களின் பூட் ஸ்பேஸில் ஒரு அரை முக ஹெல்மெட் மற்றும் ஒரு சிறிய முழு முக ஹெல்மெட் ஆகியவற்றை வைக்க முடியும். இது தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் தாராளமான அளவாகும். இதுதவிர இரவு நேரங்களில் ஸ்டோரேஜை எளிதாகப் பயன்படுத்த LED பூட் லைட்டையும் இந்த ஸ்கூட்டர்களில் டிவிஎஸ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
5. சுஸூகி பர்க்மன் ஸ்ட்ரீட்
21.5 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜுடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை சுஸூகியின் மற்றொரு 125 சிசி ஸ்கூட்டரான பர்க்மன் ஸ்ட்ரீட் பிடித்திருக்கிறது. இந்த ஸ்கூட்டரை ரூ.95,208 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். அதிக ஸ்டோரேஜைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, மேலே நாம் பார்த்த மற்ற ஸ்கூட்டர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமான டிசைனையும் இந்த பர்க்மன் ஸ்ட்ரீட் கொண்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கூட்டர் வாங்கும் போது அண்டர்சீட் ஸ்டோரேஜ் அளவையும் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் முக்கியமான ஒரு அம்சமாகக் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். இல்லையென்றால், மளிகை பொருட்கள் வாங்கிய பிறகு சீட்டிற்கு அடியில் போதுமான இடமில்லாமல் தவிக்க வேண்டியிருக்கும். இது சிறிய அம்சம் தான் எனினும் நம்முடைய தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் முக்கியமான அம்சமும் கூட.


Click it and Unblock the Notifications








