ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஒருத்தரும் வாங்க போறது இல்ல! பஜாஜ் சைலண்ட்டா போடும் மாஸ்டர் பிளான்!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) இந்தியாவிற்கு ஏற்ற விலை குறைவான 350சிசி மோட்டார்சைக்கிளை புதியதாக அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்துக் கொண்டிருந்த நிலையில், இந்த புதிய பைக் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் விலைமிக்க மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வந்த டிரையம்ப், கடந்த சில வருடங்களாக இந்தியாவிற்கும், இந்திய சந்தைக்கும் ஏற்ற விலை குறைவான பைக்குகளை களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டில் ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400X) பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியதை அடுத்து, இன்னும் குறைந்த விலையில் ரூ.1.95 லட்சத்தில் ஸ்பீடு டி4 (Speed T4), கேஃப் ரோசர் ரக பைக்காக த்ரக்ஸ்டன் 400 (Thruxton 400) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ்சி (Scramblerm 400XC) பைக்குகளை அடுத்தடுத்ததாக அறிமுகப்படுத்தி அதிரடி காட்டியது.
இந்த நிலையில், 400சிசி பைக்குகளை காட்டிலும் குறைந்த விலையில் 350சிசி பைக்குகளை களமிறக்க டிரையம்ப் தயாராகி வருகிறது. இந்த புதிய 350சிசி டிரையம்ப் பைக்கின் சோதனை ஓட்டங்கள் கடந்த சில வாரங்களாக பொது வெளியில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த பைக் வருகிற ஏப்ரல் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டிரையம்ப் தற்போது உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த வகையில் ஒரேயொரு 350சிசி டிரையம்ப் பைக் இல்லாமல், ஸ்பீடு, ஸ்க்ராம்ப்ளர், த்ரக்ஸ்டன் என வரிசையாக 350சிசி டிரையம்ப் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இன்னும் சொல்லப்போனால், விலை குறைவான ஸ்பீடு டி4 பைக்கும் 350சிசி என்ஜின் உடன் களமிறக்கப்பட உள்ளது. அதாவது, தற்போதைய 400சிசி டிரையம்ப் பைக்குகள் அனைத்தும் அப்படியே 350சிசி-க்கு மாற்றப்பட உள்ளன.
அதன்படி, தற்போதைய 398சிசி என்ஜின் 349சிசி என்ஜினாக தரம் குறைக்கப்பட உள்ளது. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய 350சிசி என்ஜின் எந்த அளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போதைக்கு இல்லையென்றாலும், எங்களுக்கு தெரிந்தவரையில் அதிகப்பட்சமாக 35 பிஎச்பி மற்றும் 32- 33 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
தோற்றத்தை பொறுத்தவரையில், தற்போதைய 400சிசி டிரையம்ப் பைக்குகளையே இது பெரிதும் ஒத்ததாக இருக்கும். இருப்பினும், பைக்கின் அடிப்படையான சேசிஸில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். தொழிற்நுட்ப அம்சங்களில், தற்போதைய டிரையம்ப் 400சிசி பைக்குகளில் டிஎஃப்டி திரைகள், ரைடு மோட்கள் மற்றும் குயிக்-ஷிஃப்டர்கள் உள்ளிட்டவை இல்லை. இவற்றை புதிய 350சிசி பைக்குகளில் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 350சிசி பைக்குகளை டிரையம்ப் களமிறக்குவதன் முக்கிய காரணமே, அவற்றின் விலைகளை தற்போதைய 400சிசி பைக்குகளை காட்டிலும் வெகுவாக குறைவாக நிர்ணயிக்க முடியும் என்பதாகும். ஏனெனில், 350சிசி-க்கு கீழ் திறன் கொண்ட என்ஜினை கொண்ட பைக்குகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் ஜிஎஸ்டி (GST)-ஐ குறைத்திருந்தது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி சலுகையை பயன்படுத்திக் கொள்வதற்காக டிரையம்ப் இந்த புதிய முயற்சியை செயல்படுத்த உள்ளது. அதேநேரம், இதன் மூலமாக ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளின் ஆதிக்கத்தையும் முறியடிக்க முடியும் என பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நம்புகிறது. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ்தான் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








