அதிரடியாக பைக்குகளின் விலையைக் குறைத்த நிறுவனம்.. இவ்வளவு கம்மி விலையில வாங்கலாமா!
குறைக்கப்பட்ட இன்ஜின் அளவு கொண்ட புதிய பைக் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ட்ரையம்ப். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் 398.15 சிசி இன்ஜின் கொண்ட தொடக்கநிலை பைக் மாடல்கள் பலவற்றை வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரியை உயர்த்தியது மத்திய அரசு. இதனால் 400 சிசி பைக்குளின் விலைகளை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது ட்ரையம்ப்.
ஆனால், பைக்குகளின் விலையை உயர்த்தாமல், இன்ஜின் அளவை 350 சிசியாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியது அந்நிறுவனம். இதன் மூலம் 350 சிசி பைக்குகளுக்கு வழங்கப்பட்ட குறைவான வரிச்சலுகையையும் மறுவடிமைப்பு செய்யப்பட்ட பைக்குகள் பெற முடியும். தற்போது 350 சிசியாகக் குறைக்கப்பட்ட இன்ஜின் கொண்ட பைக் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இந்தப் புதிய பைக்குகள் என்ன விலையில் வெளியாகியிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவில் 400 சிசி பிரிவில், ஸ்பீடு T4, ஸ்பீடு 400, ஸ்கிராம்பிளர் 400X, ஸ்கிராம்பிளர் 400XC மற்றும் த்ரக்ஸ்டன் 400 ஆகிய ஐந்து பைக் மாடல்களை விற்பனை செய்து வந்தது ட்ரையம்ப். தற்போது இன்ஜினின் அளவு 350 சிசியாகக் குறைப்பட்டிருந்தாலும், பெயரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய பைக்குகளில் 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விலை விவரம்: ஸ்பீடு T4 பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய மாடலைப் போலவே ரூ.1.95 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே புதிய சிறிய இன்ஜின் கொண்ட பைக் மாடலும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஸ்பீடு 400 பைக் மாடலின் விலையை ரூ.7,000 வரை குறைத்துள்ளது ட்ரையம்ப். இனி இந்த பைக் மாடலானது ரூ.2.32 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

சிறிய இன்ஜின் கொண்ட ஸ்கிராம்பிளர் 400X பைக் மாடலானது ரூ.11,000 குறைவாக ரூ.2.59 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது. ட்ரையம்ப்பின் 400 சிசி பைக்குகளிலேயே அதிகளவு விலை குறைக்கப்பட்டது இந்த பைக்கிற்குத் தான். ஸ்கிராம்பிளர் 400XC பைக்கின் விலை ரூ.7,000 வரையிலும், த்ரக்ஸ்டன் 400-ன் விலை ரூ.10,000 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் முறையே ரூ.2.90 லட்சம் மற்றும் ரூ.2.66 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
ஐந்து பைக்குகளிலும் ஒரே இன்ஜின் தான் என்றாலும், பைக்கின் தன்மைக்கு ஏற்ப பவர் அளவில் கொஞ்சம் மாறுபாடு இருக்கும். விலை குறைவான ஸ்பீடு T4 பைக் மாடலின் இன்ஜினை வேறு மாதிரியாக ட்ரையம்ப் ட்யூன் செய்திருக்கிறது. இதனால் மிகவும் குறைவாக 29 hp பவர் மற்றும் 31 Nm டார்க்கை இந்த பைக்கின் 349 சிசி இன்ஜின் உற்பத்தி செய்கிறது.
ஸ்பீடு 400, ஸ்கிராம்பிளர் 400X மற்றும் ஸ்கிராம்பிளர் 400XC ஆகிய பைக் மாடல்களில் கொடுக்கப்பட்டிருக்கும் 349 சிசி இன்ஜினானது 37 hp பவர் மற்றும் 32 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. த்ரக்ஸ்டன் 400 பைக்கின் 349 சிசி இன்ஜினே அதிகபட்சமாக 40 hp பவர் மற்றும் 32 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அனைத்து பைக்குகளிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸே ஸ்டாண்டர்டாக உள்ளது.
இன்ஜின் அளவு கொஞ்சம் சிறியதாக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து புதிய பைக்குகளில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே விற்பனையில் இருந்த ஐந்து பைக் மாடல்களுடன் புதிதாக ட்ராக்கர் 400 என்ற பைக் மாடலையும் இந்தியாவில் வெளயிட்டுள்ளது ட்ரையம்ப். முன்னதாக வெளிநாட்டு ஆட்டோமொபைல் சந்தைகளில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெளிநாட்டு மாடல்களில் 398 சிசி இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்திய மாடலானது 349 சிசி இன்ஜினுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ட்ராக்கர் 400 பைக் மாடலை ரூ.2.46 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது ட்ரையம்ப். ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பிளர் 400X ஆகிய மாடல்களுக்கு இடைப்பட்டதாக இது இருக்கும். த்ரக்ஸ்டன் 400-ஐ போலவே இந்த ட்ராக்கர் 400 பைக் மாடலில் உள்ள 349 சிசி இன்ஜினும் 40 hp பவர் மற்றும் 32 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சற்று சிறிய இன்ஜினுடன் விலைக்குறைப்பு சில வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே புதிய பைக்குகளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே நேரம் பெர்ஃபாமன்ஸையும் முடிந்தளவிற்கு தக்க வைத்திருக்கிறது ட்ரையம்ப். குறிப்பாக த்ரக்ஸ்டன் பைக்கில் பவர் 3 hp தான் குறைக்கப்பட்டிருக்கிறது. அதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் வரி என்ற பூதத்தை ஒருவழியாக பாட்டிலில் அடைத்துவிட்டது ட்ரையம்ப்.


Click it and Unblock the Notifications








