டிரையம்ப் போனிவில் டி40 vs ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350: எது சிறந்தது? - ஒப்பீடு

இந்தியாவின் பழமையான அம்சங்களை பிரதிபலிக்கும் ரெட்ரோ மோட்டார்சைக்கிள் சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 நீண்ட காலமாக தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை பல நிறுவனங்கள் குறிவைத்து வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டிரையம்ப் நிறுவனமும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மார்க்கெட்டை நேரடியாக குறிவைத்து புதிய மாடலை நேற்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டிரையம்ப் போனிவில் டி4 மற்றும் டி40 என்ற பெயர்களில் வந்துள்ள இந்த புதிய மாடல்கள் பழமையான டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களை கலந்து கட்டி இந்திய சந்தைக்கு வர இருக்கின்றன. டிரையம்ப் போனிவில் டி40 மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆகிய மாடல்கள் கிட்டத்தட்ட தோற்றத்தில் இரண்டும் ஒரே வகையை சேர்ந்ததாக இருந்தாலும், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் பல வேறுபாடுகள் உள்ளன. அவற்றை விரிவாக ஒப்பிட்டு பார்த்து, யாருக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Triumph T40 Vs Royal Enfield Classic 350

விலை ஒப்பீடு

டிரையம்ப் போனிவில் டி40 மற்றும் டி40 பிளாக் ஆகியவற்றின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் போனிவில் டி4 மாடலின் விலை ரூ.2.55 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மறுபுறத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ரூ.1.87 லட்சம் முதல் ரூ.2.23 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விலை அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு மிக சரியான பட்ஜெட்டில் முன்னிலை பெறுகிறது. சில பிரிமீயம் அம்சங்களுடன் போனிவில் டி40 மாடல்கள் வேறுபட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.

Also Read

பெர்ஃபார்மென்ஸ்

இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களிலுமே ஒற்றை சிலிண்டர் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், டிரையம்ப் போனிவில் டி40 மோட்டார்சைக்கிளில் 350 சிசி திரவக் குளிரூட்டும் வசதி கொண்ட டிஆர் சீரிஸ் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 29 எச்பி பவரையும் 31.2 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. மறுபுறத்தில் கிளாசிக் 350 பைக்கில் உள்ள 349 சிசி காற்று மற்றும் எண்ணெய் குளிரூட்டும் வசதி கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

Triumph T40

இந்த விஷயத்தில் அதிக செயல்திறனுடன் டி40 பைக் முன்னிலை பெறுகிறது. அத்துடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ள நிலையில், டிரையம்ப் டி40 பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாடல்களிலுமே ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் வசதி உள்ளது. நகரப் போக்குவரத்தில் கிளாசிக் 350 சிறப்பானதாக இருக்கும் நிலையில், நெடுஞ்சாலை பயணங்களுக்கு செயல்திறன் மிக்க டி40 பைக் சிறப்பானதாக இருக்கிறது.

எடை மற்றும் இருக்கை உயரம்

எடையைப் பொறுத்தவரை இரண்டு பைக்குகளுமே ஒரே எடையை பெற்றிருக்கின்றன. டிரையம்ப் போனிவில் டி40 பைக்கும், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளும் 195 கிலோ எடை கொண்டதாக இருக்கின்றன. இரண்டு பைக்குகளையும் ஓட்டும்போது டி40 அதிக செயல்திறன் இருப்பதால் நெடுஞ்சாலை பயணங்களில் எளிதாக கையாள்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும்.

இருக்கை உயரத்திலும் டி40 சற்று முன்னிலையில் உள்ளது. டி40 பைக்கின் இருக்கை உயரம் 790 மிமீ ஆக உள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் மாடலின் தரையிலிருந்து இருக்கை உயரம் 805 மிமீ ஆக உள்ளது. குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு பைக்கை நிறுத்தும்போது கால்களை தரையில் ஊன்றுவது டி40 பைக்கில் சற்று எளிதாக இருக்கலாம். டி40 பைக்கின் இருக்கை உயரம் 770 மிமீ வரை குறைக்கவும் முடியும். இதனால், உயரம் குறைவானவர்கள் மற்றும் சராசரி உயரம் கொண்டவர்களுக்கு இது சரியானதாக இருக்கும்.

Also Read

சக்கரம் மற்றும் சஸ்பென்ஷன்

சக்கர அமைப்பிலும் இரண்டு பைக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளது. டி40 பைக்கில் முன்புறம் 18 அங்குல சக்கரமும், பின்புறம் 17 அங்குல சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளன. கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் முன்புறம் 19 அங்குல சக்கரமும், பின்புறம் 18 அங்குல சக்கரமும் உள்ளன. கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பெரிய முன்சக்கரம் மோசமான சாலைகள் மற்றும் சீரற்ற பாதைகளில் நிலைத்தன்மையாக செல்ல உதவும். இரண்டு மோட்டார்சைக்கிள்களின் முன்புறத்தில் 130மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன.

Triumph T40 Vs Royal Enfield Classic 350

நவீன தொழில்நுட்ப வசதிகள்

தொழில்நுட்ப வசதிகளைப் பார்க்கும்போது டி40 முன்னிலை பெறுகிறது. டிரையம்ப் போனிவில் டி40 பைக்கில் வட்ட வடிவிலான 4 அங்குல வண்ணத் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. மொபைல்போன் இணைப்பு, நேவிகேஷன் வசதி, போன் கால்கள் மற்றும் பாடல்கள் கேட்கும் கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன. இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் எல்இடி ஹெட்லைட் வழங்கப்படுகிறது.

டி40 பைக்கில் ஐந்து விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. சாலை மற்றும் ஓட்டும் சூழ்நிலைக்கு ஏற்ப பைக்கின் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள இந்த வசதி உதவுகிறது. மேலும் வேகத்தை தானாக நிலையாக வைத்திருக்க உதவும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் முன்னிலைப்படுத்தும் விஷயமாக கூறலாம். வளைவுகளில் பைக்கின் சாய்வுக்கு ஏற்ப செயல்படும் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளன.

இதற்கு நேர் மாறாக மிக எளிமையான ஓட்டுதல் அனுபவத்தையும், பயணத்தை ரசித்து ருசித்து செல்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு பழமையையும், பாரம்பரிய அம்சங்களையும் தொடர்ந்து தக்க வைக்கிறது. அதேநேரத்தில், இதில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மூலமாக கியர் பொசிஷன் இண்டிகேட்டர், யூஎஸ்பி டைப் சி சார்ஜர், நேவிகேஷன் வசதிகள் உயர் வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகின்றன.

பிரேக் மற்றும் பாதுகாப்பு வசதிகள்

பிரேக் மற்றும் பாதுகாப்பு வசதிகளிலும் டி40 அதிக தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. வளைவில் பைக் சாயும்போதும் செயல்படும் ஏபிஎஸ் மற்றும் சக்கரம் வழுக்காமல் இருக்க உதவும் இழுவைக் கட்டுப்பாடும் உள்ளது. கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டேங்க் கொள்திறன்

டிரையம்ப் பைக்கில் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது. கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 13 லிட்டர் எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும், டிரையம்ப் போனிவில் டி40 பைக் மாடலானது 100 கிமீ செல்வதற்கு 3.7 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தரும் என்ற கணக்கீடு வருகிறது. ஆனால், நடைமுறைப் பயன்பாட்டில் இதில் சற்று குறைவாக இருக்கலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் அராய் சான்றுப்படி, 41.55 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 32 முதல் 35 கிமீ மைலேஜ் வரை தரும் என்று எடுத்துக் கொள்ளலாம். இதன்படி, மைலேஜில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 முன்னிலை பெறும்.

Triumph T40 Vs Royal Enfield Classic 350

தினசரி பயன்பாட்டில் எது சிறந்தது?

தினசரி பயன்பாட்டை எடுத்துக்கொண்டால் கிளாசிக் 350 இன்னும் வலுவான போட்டியாளராக உள்ளது. இதன் நேரான அமர்வு நிலை, எளிதான எஞ்சின் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் வாடிக்கையாளர்களை கவர்கிறது. அதேநேரத்தில், வீட்டில் தினசரி பயன்பாட்டிற்கு மற்றொரு ஸ்கூட்டர் அல்லது வேறு வாகனம் இருந்தால் டி40 சிறந்த தேர்வாக அமையும்.

யாருக்கு எந்த பைக்?

குறைவான பட்ஜெட், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற அனுபவம், குறைவான பராமரிப்பு மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிக சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை கிளாசிக் 350 மாடலை தேர்வு செய்யலாம். குறிப்பாக, முதல்முறையாக இந்த செக்மென்ட்டில் அப்கிரேடு செய்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். அதிக பவர், குறைந்த இருக்கை உயரம், நவீன தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் அனுபவம் முக்கியம், பட்ஜெட்டும் பிரச்னை இல்லை என்பவர்களுக்கு டி40 ஏற்றதாக இருக்கலாம்.

Article Published On: Wednesday, October 7, 2026, 11:37 [IST]
English summary
Triumph bonneville t40 vs royal enfield classic 350 comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X