ராயல் என்ஃபீல்டுக்கு மரண பயம் காட்டும் டிரையம்ப்! அடுத்த அதிரடி திட்டம் தயார்!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் அதன் மோட்டார்சைக்கிள்கள் அனைத்தையும் 2027ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்துள்ளது. அதன்படி, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளுக்கு புதிய அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கடந்த சில வருடங்களில் டிரையம்ப் நிறுவனம் தனது வியாபார யுக்திகளை சற்று மாற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்திய சந்தைக்கு ஏற்ற குறைந்த ஆற்றல் கொண்ட, விலை குறைவான பைக்குகளை இந்தியாவிற்காக என்றே சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டவையே ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் ஆகும்.

2023ஆம் ஆண்டின் ஜூன் மாத இறுதியில் டிரையம்ப்பின் தாயகமான இங்கிலாந்து நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்குகள் அதற்கடுத்த ஒரு வாரத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அதுவரையில், விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்துவந்த டிரையம்ப் நிறுவனத்திற்கு புதிய ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளின் அறிமுகம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் வெளிப்பாடாகவே, அடுத்தடுத்து புது, புது 400சிசி பைக்குகளை டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அந்த 400சிசி டிரையம்ப் பைக்குகள் அனைத்தும் மத்திய அரசின் GST சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சமீபத்தில் 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டதையும், இதற்கேற்ப விலையை குறைப்பது போல் குறைத்து டிரையம்ப் சமீபத்தில் அதிகப்படுத்தியதையும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்த நிலையில்தான் தற்போது சர்வதேச சந்தையில் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளுக்கு புதிய அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகள் தற்போதைக்கு யுகே நாட்டு சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்தே இந்தியாவில் இவை அறிமுகம் செய்யப்படும்.
புதிய அப்கிரேட்களாக, ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளின் தோற்றத்திலும் சரி, மெக்கானிக்கல் அம்சங்களிலும் சரி பெரியதாக எந்த அப்கிரேட்களும் கொண்டுவரப்படவில்லை. புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன அவ்வளவுதான். இதன்படி, புதிய ரேசிங் சிவப்பு நிறத்திலான பெயிண்ட் ஆப்ஷன் ஸ்பீடு 400 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரேசிங் சிவப்பு நிற பெயிண்ட்டில், பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதியில் யுகே நாட்டு கொடி போன்றதான டிசைன் கிடைக்கும். ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கிற்கு புதிய பெவ்டர் கிரே நிற பெயிண்ட் ஆப்ஷன், கருப்பு நிற ஸ்ட்ரிப்கள் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கலர் ஆப்ஷன்கள் உடன் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகள் வழக்கமான கலர் ஆப்ஷன்களிலும் தொடர்ந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த டிரையம்ப் பைக்குகளில் 349சிசி சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 37 பிஎஸ் மற்றும் 32 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் தற்சமயம் ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.39 லட்சத்தில் இருந்தும், ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.64 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுகே நாட்டு சந்தையில் இந்த புதிய கலர் ஆப்ஷன்கள் உடன் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்குகள் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் வருகிற தீபாவளி சமயத்தில் அல்லது வருட இறுதி டிசம்பர் மாதத்தில் புதிய கலர் ஆப்ஷன்கள் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளுக்கு வழங்கப்படலாம்.


Click it and Unblock the Notifications