அறிமுகம் செய்த இரண்டே மாதங்களில் விலையை உயர்த்தும் டிரையம்ப்! மே மாதத்திற்குள் வாங்கினா காசை மிச்சப்படுத்தலாம்
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் புதிய 350சிசி பைக்குகளின் விலைகளை வருகிற ஜூன் மாதம் முதல் உயர்த்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள்ளன. இந்த வகையில் 400சிசி டிரையம்ப் பைக்குகளின் விலைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளன என்பதையும், விலை உயர்வை பெறும் 400சிசி டிரையம்ப் பைக்குகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மத்திய அரசு கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 350சிசி-க்கு மேலான பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை அதிகரித்தும், அதற்கு கீழ் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை குறைத்தும் அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து, பல பைக் நிறுவனங்கள் தங்களது 400சிசி பைக்குகளை 350சிசி-க்கு கீழ் அறிமுகம் செய்ததை கடந்த சில மாதங்களாக பார்க்க முடிந்தது.

அந்த வகையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் ஸ்பீடு 400, ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் உள்ளிட்ட 400சிசி பைக்குகளை 350சிசி என்ஜினுக்கு மாற்றியது. ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட போது பைக்குகளின் விலைகளை டிரையம்ப் அதிகரிக்காத போதிலும், ஜிஎஸ்டி சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்ட பின்னர் பைக்குகளின் விலைகள் குறைக்கப்பட்டன.
ஸ்பீடு டி4 பைக்கை தவிர்த்து மற்ற அனைத்து 350சிசி டிரையம்ப் பைக்குகளின் விலைகளும் ரூ.11,000 அளவிற்கு குறைக்கப்பட்டன. இந்த நிலையில், வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்ட பைக்குகளின் விலைகளை டிரையம்ப் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, முன்பு குறைக்கப்பட்ட விலைகளை இந்த விலை உயர்வின் மூலமாக ஈடுக்கட்ட டிரையம்ப் திட்டமிட்டுள்ளதாம்.

ஆனால், இதுகுறித்து டிரையம்ப் நிறுவனம் சார்பில் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், இந்த தகவலை உறுதிப்படுத்த சேலத்தில் உள்ள ஒரு டிரையம்ப் டீலர்ஷிப் ஷோரூமை நமது டிரைவ்ஸ்பார்க் குழு தொடர்புக் கொண்டு விசாரித்தது. டிரையம்ப் நிறுவனம் சார்பின் இதுகுறித்து இன்னும் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படாவிடினும், விலை உயர்வை எதிர்பார்ப்பதாக டீலர்ஷிப் ஷோரூம் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், குறைந்த விலையில் முடிந்தவரையில் இந்த மே மாதம் முடிவதற்கு உள்ளாகவே 350சிசி டிரையம்ப் பைக்குகளை வாங்கி விடுமாறு கஸ்டமர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் ஷோரூம் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ், ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ்சி, த்ரக்ஸ்டன் 400 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிராக்கர் 400 பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அதிகப்பட்சமாக ரூ.10,000 வரையில் 350சிசி டிரையம்ப் பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்படலாம். மேற்கூறப்பட்ட 350சிசி டிரையம்ப் பைக்குகளில் பொருத்தப்படும் 350சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 37 பிஎஸ் மற்றும் 32 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
தற்சமயம் டிரையம்ப் ஸ்பீடு டி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.95 லட்சத்தில் இருந்தும், ஸ்பீடு 400 பைக்கின் விலைகள் ரூ.2.31 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன. டிராக்கர் 400, த்ரக்ஸ்டன் 400, ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ்சி பைக்குகள் முறையே ரூ.2.46 லட்சம், ரூ.2.65 லட்சம், ரூ.2.59 லட்சம் மற்றும் ரூ.2.89 லட்சத்தில் இருந்து கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜூன் மாதம் கொண்டுவரப்படும் விலை உயர்வால், முன்பு 400சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்ட போது கொண்டிருந்த விலைக்கு இணையாக தற்போதைய 350சிசி டிரையம்ப் பைக்குகளின் விலைகள் மாறவுள்ளன. இருப்பினும், இது 350சிசி டிரையம்ப் பைக்குகளின் விற்பனையில் பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கிறோம். ஏனெனில், கணிசமான கால இடைவெளிக்கு பிறகே டிரையம்ப் பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications