70 இலட்சம் பேரது நம்பிக்கையை பெற்ற டிவிஎஸ் பைக்... அப்பாச்சினு சொன்னா தெரியாதவங்க யாரும் இல்லை!
TVS மோட்டார் நிறுவனத்தின் அடையாளமே அதன் அப்பாச்சி பைக்குகள் தான் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. இன்னும் சொல்லப்போனால், அப்பாச்சி பைக்குகள் மூலமாக பல வெளிநாட்டு சந்தைகளில் TVS நிறுவனம் கால் பதித்தது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் 70 இலட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளதாக TVS நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் TVS மோட்டார் நிறுவனம் 160சிசி-இல் இருந்து 310சிசி வரையில் பல்வேறு விதமான என்ஜின்களில் அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதே அப்பாச்சி பைக்குகள் தான் சிறு சிறு மாற்றங்களுடன் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

முதன்முதலாக 150சிசி என்ஜின் உடன் முதல் அப்பாச்சி பைக் அறிமுகம் செய்யப்பட்டது. முரட்டுதனமான தோற்றத்தினாலும், பிரீமியம் வசதிகளினாலும் உடனடியாகவே அப்பாச்சி 150 பைக் மக்கள் மத்தியில் கவனத்தை பெற துவங்கியது. இதில் பெரிதும் மகிழ்ச்சியடைந்த TVS நிறுவனம், அப்பாச்சி பைக்குகளுக்கு என்றே பிரத்யேகமாக ஏதேனும் ஒரு அம்சத்தை வழங்க வேண்டும் என்கிற முனைப்பில் சுருக்கமாக 'RTR' என அழைக்கப்படும் ரேசிங் த்ரோட்டில் ரெஸ்பான்ஸை அறிமுகம் செய்தது.
2007இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டெக்னாலஜிக்கு பிறகே அப்பாச்சி RTR என அழைக்க துவங்கினர். அத்துடன், 2007இல் 150சிசி என்ஜினுக்கு பதிலாக 160சிசி என்ஜின் அறிமுகம் செய்யப்பட்டது. அதுதான் தற்போது வரையில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. அதன்பின், 2009இல் பஜாஜ் பல்சருக்கு போட்டியாக 180சிசி என்ஜின் உடன் அப்பாச்சி RTR 180 பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

2011இல் முதல் இந்திய மோட்டார்சைக்கிளாக அப்பாச்சி RTR 180 பைக்கில் ட்யூயல்-சேனல் ABS வழங்கப்பட்டது. 2012இல் அப்பாச்சி பைக்குகளில் மிக முக்கிய டிசைன் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையில் வெளிநாட்டு சந்தைகளிலும் அடுத்தடுத்து அப்பாச்சி பைக்குகளை அறிமுகம் செய்யும் வேலையை TVS செய்ய துவங்கியது. இவ்வாறு அப்பாச்சி பைக்குகளின் மார்க்கெட் பெரியதாகியதை தொடர்ந்து, அதற்கேற்ப அவற்றின் விற்பனையும் அதிகரித்தது.
2005இல் முதன்முதலாக அப்பாச்சி பைக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அவற்றின் விற்பனையில் 40 இலட்சம் என்கிற மைல்கல்லை அடைய TVS நிறுவனத்திற்கு 15 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. அதுவே, அதற்கடுத்த 10 இலட்சம் அப்பாச்சி பைக்குகள் அடுத்த 3 வருடங்களிலேயே விற்கப்பட்டுவிட்டன. அதற்கடுத்த 10 இலட்சம் அப்பாச்சி பைக்குகள் விற்பனைக்கு வெறும் 2 வருடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டில் 60 இலட்சம் யூனிட்கள் விற்பனை உடன் 20ஆம் ஆண்டு நிறைவை TVS நிறுவனம் கொண்டாடியது. இதற்கு அடுத்த ஒரு வருடத்தில் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை உலகளவில் 70 இலட்சமாக அதிகரித்துள்ளது. கடைசி 20 இலட்சம் யூனிட் அப்பாச்சி பைக்குகள் கடந்த 24 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பெடல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அட்டகாசமான வசதிகள் அப்பாச்சி பைக்குகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய மாடர்ன் அப்பாச்சி பைக்குகளில் TVS ஸ்மார்ட்எக்ஸோனெக்ட் மற்றும் நகர்புற சாலைகளில் எளிதாக பயணம் செய்வதற்காக க்ளைட் த்ரூ டெக்னாலஜி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. TVS ஸ்மார்ட்எக்ஸோனெக்ட் மூலமாக ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, பல்வேறு ரைடிங் மோட்களை பெற முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2005ஆம் ஆண்டில் இருந்து TVS அப்பாச்சி பைக்குகள் பல்வேறு வகைகளில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலமாகவே அவை பல நாடுகளில் மற்ற பைக்குகளுக்கு போட்டியாக நிலைத்து நிற்கின்றன. தற்போது 70 இலட்சத்தை கடந்துள்ள TVS அப்பாச்சி பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 1 கோடி யூனிட்கள் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications