பண்டிகை காலத்தை குறிவைத்து டிவிஎஸ் அப்பாச்சி, ரோனின் பைக்குகள் புதிய அம்சங்களுடன் அறிமுகம்!
பண்டிகை காலத்தில் புதிய பைக் வாங்க திட்டமிடுபவர்களை கவரும் வகையில், தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் வரிசையில் பல்வேறு புதிய அப்டேட்டுகளுடன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி வரிசையில் உள்ள RTR 160, RTR 160 4V, RTR 200 4V, RR 310, RTR 310 மற்றும் டிவிஎஸ் ரோனின் ஆகிய மாடல்களில் புதிய வசதிகள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள டிவிஎஸ் ஷோரூம்களில் இன்று முதல் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்பாச்சி RTR 160 பைக்கிற்கு முக்கிய அப்டேட்
புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கில் தற்போது அதிக தரைப்பிடிப்புடன் செல்ல உதவும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் (TCS) புதிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பாக ஈரமான சாலைகள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளில் பைக்கின் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் முன்புறம், பின்புறம் உள்ள அனைத்து இண்டிகேட்டர்களும் ஒரே நேரத்தில் ஒளிரும் வசதியான ஹசார்டு லைட் வசதி மற்றும் டைனமிக் எல்இடி இண்டிகேட்டர் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்த புதிய பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிசிஎஸ் வசதி கொண்ட வேரியண்ட்டிற்கு ரூ.1,27,990 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RTR 160 4V பைக் அப்டேட்
அப்பாச்சி RTR 160 4V பைக்கில் தொழில்நுட்ப வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய டிஎஃப்டி டிஸ்பிளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் சாதனம் உள்ளது. இதன்மூலமாக, கூகுள் மேப்பை மொபைல்போனிலிருந்து மிரரிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
அவசர காலத்தில் பிரேக்கும் பிடிக்கும்போது அனைத்து இண்டிகேட்டர்களும் ஒளிருந்து பிற வாகனங்களை எச்சரிக்கும் பானிக் பிரேக் அலர்ட் வசதியும், டைப் சி சார்ஜிங் போர்ட்டும் கூட உள்ளது. இதன் டிஎஃப்டி திரையுடன் கூகுள் மேப் மிரரிங் செய்யும் வசதி கொண்ட வேரியண்ட்டிற்கு ரூ.1,41,440. எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் Arctic Teal, Matte Black, Racing Red மற்றும் Marine Blue ஆகிய நிறங்களில் இது கிடைக்கும்.
RTR 200 4V பைக்கில் புதிய அட்ஜெஸ்ட்டபிள் சஸ்பென்ஷன்
அப்பாச்சி RTR 200 4V பைக்கிற்கும் குறிப்பிடத்தக்க அப்டேட் கிடைத்துள்ளது. இதில் முன்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. இதனுடன் TFT டிஸ்பிளேவும், கூகுள் மேப் மிரரிங் செய்யும் வசதி, பானிக் பிரேக் அலர்ட் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. டைப் சி சார்ஜிங் போர்ட்டும் இந்த மாடலிலும் உள்ளது. இந்த மாடலுக்கு ரூ.1,49,990 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி 310
டிவிஎஸ் நிறுவனத்தின் பிரீமியம் வரிசையில் இடம்பெறும் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் ஆர்டிஆர் 310 ஆகிய இரண்டு மாடல்களிலும் பிளாக் டைமண்ட் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்தில் கவர்ச்சியாக இந்த மாடலின் தோற்றம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுவரை ஆர்டிஆர் 310 பைக்கில் இருந்த கீலெஸ் ரைடு டெக்னாலஜி தற்போது ஆர்ஆர் 310 பைக்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய
ஆர்ஆர் 310 டாப் வேரியண்ட்டிற்கு ரூ.2,87,790 எக்ஸ்ஷோரூம் விலையும், ஆர்டிஆர் 310 வேரியண்ட்டிற்கு ரூ.2,48,990 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ரோனின் பைக்கிலும் புதிய வசதிகள்
டிவிஎஸ் ரோனின் பைக் வரிசையிலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய Base+ வேரியன்ட்டில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், புதிய வண்ணக்கலவையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ரூ.1,42,490 எக்ஸ்ஷோரூம் விலையாக உள்ளது.
ரோனின் பைக்கின் மிட் வேரியண்ட்டில் கனெக்டெட் வசதியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.1,51,540 எக்ஸ்ஷோரூம் விலை உள்ளது. இதன் விலை உயர்ந்த வேரியண்ட்டில் டிராக்ஷன் கன்ட்ரோல், டைப் சி சார்ஜர் மற்றும் பிரிமீயம் இருக்கை வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.1,63,640 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications



