200கிமீ ரேஞ்ச்... விரைவில் வருகிறது டிவிஎஸ் மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் பைக்!
மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், புதிய மின்சார பைக் மாடலை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் செயல்திறன் மிக்க மாடலாக இந்த புதிய மின்சார பைக் வர இருக்கிறது.
கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் டிவிஎஸ் நிறுவனம் eFX த்ரீ ஓ என்ற மின்சார பைக்கின் மாதிரி மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதத்தில் இந்த பைக்கின் டிசைனிற்கு காப்புரிமையையும் பதிவு செய்தது. இதன் டிசைன் கேடிஎம் ட்யூக் வரிசை போன்று நேக்கட் ஸ்ட்ரீட் பைக் ரகத்தில் திறந்த மேனி அமைப்புடையதாக இருக்கும்.

இந்த சூழலில், தற்போது மின்சார வாகனங்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த புதிய மாடலை கூடிய விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டிவிஎஸ் ஆயத்தமாகி வருகிறது. இந்த புதிய பைக்கின் டிசைன் இளைஞர்களை கவரும் வகையில் வசீகரமாகவும், ஸ்போர்ட்டியாகவும் இருக்கிறது.
இந்த புதிய மின்சார பைக் நகர்ப்புறம் மற்றும் நீண்ட தூர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எடை மற்றும் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதன் ஹெட்லைட் C வடிவில் உள்ளதுடன், மிகவும் கூர்மையான அமைப்பையும், தோற்றத்தையும் வழங்கும் உடல் பாகங்களுடன் வசீகரிக்கிறது.
இந்த புதிய டிவிஎஸ் மின்சார பைக்கில் 5.3kWh மின் ஆற்றலை சேமிக்கும் திறன் வாய்ந்த பேட்டரி வழங்கப்படலாம். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என தெரிகிறது. இந்த பைக்கில் ரேஞ்ச் பூஸ்டர் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குKள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப அம்சங்களுடன் பெல்ட் டிரைவ் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. ஆனால், தயாரிப்பு நிலை மாடல் குறித்த தகவல் வந்தால்தான் உண்மையான தொழில்நுட்ப அம்சங்களை தெரிந்துகொள்ள முடியும். கூடிய விரைவில் இந்த பைக் குறித்த கூடுதல் தகவல்கள் நிச்சயமாக வெளிவரும் வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு இந்த பைக் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மின்சார இருசக்கர வாகன மார்க்கெட்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ்தான் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் அசத்தி வருகிறது. இதற்கு பக்கபலமாக ஆர்பிட்டர் மற்றும் எக்ஸ் ஆகிய மாடல்களும் உள்ளன. இந்த நிலையில், எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டிலும் நுழைவதற்கான பணிகளை டிவிஎஸ் தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications


