விற்பனையில் சக்கை போடு போடும் டிவிஎஸ் ஐக்யூப் EV ஸ்கூட்டர்: எந்த வேரியண்ட் உங்களுக்கு சிறந்தது?

இந்தியாவில் தினசரி பயணங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் டிவிஎஸ் ஐக்யூப் வாடிக்கையாளர் மத்தியில் முதன்மையான தேர்வாக இருக்கிறது. குடும்பத்தினருக்கு ஏற்ற நடைமுறை பயன்பாட்டு அம்சங்கள், அலுவலகப் பயணம், சர்வீஸ் நெட்வொர்க், குறைந்த செலவில் வாகனத்தைப் பராமரிப்பது என தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த ஸ்கூட்டர் கிடைப்பதுடன், வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கும், தேவைக்கும் தக்கவாறு வெவ்வேறு பேட்டரி திறன்களில் கிடைக்கிறது.

சென்னையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில், எத்தனை வேரியண்ட்டுகள் கிடைக்கின்றன, அதன் ரேஞ்ச், விலை மற்றும் இதர அம்சங்கள் குறித்து அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

TVS iQube

வேரியண்ட்டுகள் விபரம்

டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் பல்வேறு பேட்டரி திறன்களில் கிடைக்கிறது. டிவிஎஸ் ஐக்யூப் 2.3 kWh மாடலுக்கு ரூ.1,12,239 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் விலை குறைவான தேர்வாகவும் உள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 114 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பையும், மணிக்கு 68 கிமீ வேகம் வரை செல்லும் என்று சோதனை தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது. தினசரி அலுவலகம் மற்றும் மிக குறைந்த தூரம் பயணிப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

அடுத்து 3.1 kWh பேட்டரி மாடலுக்கு ரூ.1,33,720 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 123 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பை இந்த ஸ்கூட்டர் வழங்கும். அதிகபட்சமாக மணிக்கு 82 கிமீ வேகம் வரை எட்டும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதேநேரத்தில், இந்த பேட்டரியைவிட வெறும் ரூ.3,653 கூடுதல் விலையில் கிடைக்கும் 3.5 kWh மாடல் முழுமையா சார்ஜ் செய்யும்போது 145 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது. இந்த மாடலுக்கு ரூ.1,37,373 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

TVS iQube

ஐக்யூப் ஸ்கூட்டரின் மில்லியன்ஆர் எடிஷன் 3.5 kWh பேட்டரியுடன்தான் வருகிறது. இந்த சிறப்பு பதிப்புக்கு ரூ.1,40,938 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான 3.5 kWh மாடலைவிட இதன் விலை அதிகம் என்பதால், சிறப்பு பதிப்பின் தனித்துவமான தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களை விரும்புவோர் இந்த மாடலை பரிசீலிக்கலாம்.

அதிக ரேஞ்ச் தேவைப்படுபவர்களுக்கு 4.7 kWh பேட்டரியுடன் வரும் ஐக்யூப் எஸ் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 175 கிமீ ரேஞ்ச் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மாடல் ரூ.1,61,128 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக உள்ள ஐக்யூப் எஸ்டி மாடலில் 5.3 kWh பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 212 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது. இந்த மாடலுக்கு ரூ.1,77,635 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

TVS iQube

சார்ஜ் ஏற்ற தேவைப்படும் நேரம்

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திறனைப் பொறுத்து சார்ஜிங் நேரமும் மாறுபடுகிறது. இந்த ஸ்கூட்டரின் 2.3 kWh மாடலின் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2 மணி 25 நிமிடங்களும், 3.1 kWh மாடலுக்கு 3 மணி 30 நிமிடங்களும், 3.5 kWh மாடலுக்கு 3 மணி 45 நிமிடங்களும் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், அதிக திறன் கொண்ட 4.7 kWh ஐக்யூப் எஸ் மாடலுக்கு 3 மணி 15 நிமிடங்களும், 5.3 kWh ஐக்யூப் எஸ்டி மாடலுக்கு 4 மணி நேரமும் தேவைப்படும் என நிறுவனம் தெரிவிக்கிறது.

Also Read

முக்கிய வசதிகள்

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் எல்இடி விளக்குகள், பார்க்கிங் அசிஸ்ட், ஹில் ஹோல்டு, புளூடூத் இணைப்பு, பேட்டரி நிலை மற்றும் மீதமுள்ள சார்ஜில் எவ்வளவு தூரம் செல்லும் என்று அறியும் வசதிகள் கிடைக்கின்றன. அடிப்படை மாடல்களில் 12.7 செமீ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. ஐக்யூப் எஸ் மற்றும் எஸ்டி மாடல்களில் 17.78 செமீ பெரிய திரை கிடைக்கிறது. உயர்நிலை எஸ்டி மாடலில் தொடுதிரை, இசைக் கட்டுப்பாடு வசதி மற்றும் டயர் அழுத்தக் கண்காணிப்பு வசதிகளும் உள்ளன.

மாதத் தவணை எவ்வளவு?

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 20 சதவீத முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகையை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியில் மூன்று ஆண்டுகளுக்குக் கடனாகப் பெறுவதாகக் கணக்கிட்டால், ஐக்யூப் 2.3 kWh மாடலுக்கு ரூ.2,855 என்ற மாதத் தவணை செலுத்த வேண்டும். அடுத்து 3.1 kWh மாடலுக்கு ரூ.3,402 என்ற மாதத் தவணையும், 3.5 kWh மாடலுக்கு ரூ.3,495 என்ற மாதத் தவணையும் வருகிறது.

மேலும், ஐக்யூப் எஸ் மாடலுக்கு மாதம் ரூ.4,099 என்ற மாதத் தவணையும், எஸ்டி மாடலுக்கு ரூ.4,519 தவணையும் வருகிறது. எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. காப்பீடு, பதிவு மற்றும் பிற ஆர்டிஓ கட்டணங்கள் சேரும்போது கடன் தொகையும் தவணையும் சற்று அதிகரிக்கும்.

Also Read

எந்த வேரியண்ட் வாங்கலாம்?

தினமும் 20 முதல் 30 கி.மீ. வரை பயணிப்பவர்களுக்கு அடிப்படை 2.3 kWh மாடல் போதுமானதாக இருக்கலாம். விலை மற்றும் ரேஞ்சுக்கு இடையே நல்ல சமநிலை தேடுபவர்களுக்கு 3.5 kWh மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். தினசரி நீண்ட தூரம் பயணிப்பவர்கள் ஐக்யூப் எஸ் மாடலை பரிசீலிக்கலாம். அதிகபட்ச ரேஞ்ச் மற்றும் உயர்நிலை வசதிகள் தேவைப்படுபவர்களுக்கு எஸ்டி மாடல் பொருத்தமானது.

எனவே, பெரும்பாலான குடும்பப் பயனர்களுக்கு ஐக்யூப் 3.5 kWh மாடல் விலை மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் நல்ல தேர்வாக இருக்கும். வாங்குவதற்கு முன் சென்னையில் தற்போதைய விலை, சலுகை, ஆன்-ரோடு தொகை மற்றும் உத்தரவாத விவரங்களை டிவிஎஸ் டீலரிடம் உறுதிப்படுத்துவது அவசியம்.

Article Published On: Thursday, October 29, 2026, 14:00 [IST]
English summary
Tvs iqube electric scooter variants price range emi chennai which variant suitable for you
மேலும்... #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X