டிவிஎஸ் கம்பெனியில் இப்படிப்பட்ட பைக் இருப்பதே பலருக்கு தெரியாது! ஹீரோ ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் மைலேஜ்!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் HLX மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 50 இலட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை தாண்டியுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து இப்படியொரு மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறதா? அதுவும் சுமார் 50 இலட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா? இதனை பற்றி நான் கேள்விப்பட்டதே கிடையாதே என நீங்கள் நினைப்பது புரிகிறது. வாருங்கள் இதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவை தாண்டி உலகளவில் வாகனங்களை விற்பனை செய்யும் பல்நாட்டு நிறுவனமாகும். இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, மூன்று சக்கர வாகனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக, ஆப்பிரிக்க, மேற்காசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் டிவிஎஸ் நிறுவனத்தின் பிரதானமான சந்தைகளாக உள்ளன. இவற்றிற்கு என்றே டிவிஎஸ் பிரத்யேகமான வாகனங்களை தயாரிக்கிறது. இந்தியாவில் இலட்சக்கணக்கில் விற்பனையான டிவிஎஸ் வாகனங்களால் கூட ஏற்படுத்த முடியாத தாக்கத்தை அந்த நாடுகளுக்கு என்றே வடிவமைக்கப்பட்ட டிவிஎஸ் வாகனங்கள் ஏற்படுத்தி உள்ளன.
அவற்றுள், டிவிஎஸ் HLX பைக்குகளும் ஒன்றாகும். HLX சீரிஸில் இருந்து பல்வேறு விதமான பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் டிவிஎஸ் HLX பைக்குகளுக்கு என்றே பெரிய வாடிக்கையாளர் பட்டாளம் உள்ளது. இதனாலேயே, ஆப்பிரிக்காவில் பல்வேறு விதமான உடலமைப்புகளில், என்ஜின் ஆப்ஷன்களில் HLX பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக உலகளவில் 50 இலட்சம் HLX பைக்குகள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் கொண்டாட்டங்கள் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கொண்டாட்ட நிகழ்வில் டிவிஎஸ் மோட்டாரின் இயக்குனர் மற்றும் CEO கே.என் ராதாகிருஷ்ணன் மற்றும் டிவிஎஸ் சர்வதேச வணிக பிரிவு தலைவர் பேய்மன் கார்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
ஆப்பிரிக்க மார்க்கெட்டிற்கான மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்ட டிவிஎஸ் HLX ஆனது முதன்முதலாக 2013ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 13 வருடங்களில் 57க்கும் அதிகமான நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள டிவிஎஸ் HLX ஏற்கனவே கூறியதுபோல், 100சிசி, 125சிசி மற்றும் 150சிசி என்ஜின்கள் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலமாக, அதிக மைலேஜை எதிர்பார்ப்போரின் பிரதானமான தேர்வாக HLX பைக்குகள் விளங்குகின்றன.
குறிப்பாக, குறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த டிவிஎஸ் பைக்கின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்றுமதி & இறக்குமதி பணிகளிலும், பயணிகளை அழைத்து செல்லும் பைக் டாக்சி சேவைகளிலும் கூட HLX பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் மொத்தம் 6 விதமான டிவிஎஸ் HLX பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அவையாவன, HLX பிளஸ், HLX 125, HLX 125 5 கியர், HLX 150, HLX 150 X மற்றும் HLX 150 F என்பன ஆகும். HLX பைக்குகளின் வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணம், குறிப்பிட்ட வெளிநாடுகளில் இதற்கான சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் பரந்து விரிந்து இருப்பதுடன், மேற்கூறப்பட்ட HLX பைக்குகளுக்கான உதிரி பாகங்கள் கிடைப்பதும் எளிதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பலர் அறிந்திராத டிவிஎஸ் பைக் உலகின் பல நாடுகளில் விற்பனையில் ஜொலித்து கொண்டிருப்பது ஆச்சிரியம் கலந்த பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து ஏற்கனவே சில பிரபலமான 125சிசி மற்றும் 150சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுவதால், HLX அறிமுகம் இந்திய சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமலும் போகலாம் என்பதினாலேயே அது தற்போதுவரையில் அறிமுகம் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications